சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான கடன் வேலைத் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதனடிப்படையில் மூன்றாவது கடன் தவணையான 336 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022இல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் நிதிச் சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கை ஒரு தளம்பலற்ற நிலையை எட்டியுள்ளதோடு, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு மற்றும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தினகரனுக்கு வழங்கிய நேர்காணல்.
கேள்வி : இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்ட விரிவான கடன் திட்டத்திற்குரிய மூன்றாவது கடன் தவணையும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது?
மூன்றாவது தவணையை விடுவிக்க முடியும் என அரசு மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், இரண்டாம் தவணை டிசம்பரிலும் எமக்குக் கிடைத்தன. அதனடிப்படையில் நாம் எதிர்பார்த்தபடி, 2023 மார்ச் மாதத்தில் நாங்கள் ஏற்படுத்திக் கொண்ட பணியாளர் மட்ட இணக்கத்திற்கு அமைவாக இந்த தவணை விடுவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் எதிர்பார்க்கும் வகையிலேயே இந்த நாட்டின் பொருளாதாரத்தை புதிய திசையில் கொண்டு செல்ல, மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்காத நாடாக மாற்றும் பயணத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை விடுவிக்கப்பட்டு, சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி : சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் தவணைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இதுவரை செயல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் எவை?
சர்வதேச நாணய நிதியமே இன்று நாட்டை நிர்வகிக்கின்றது என்பது எதிர்க்கட்சி அரசாங்கத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டாகும். 2022ஆம் ஆண்டு மார்ச்சில்தான் நாம் நாடு என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைக் கோரினோம். இந்த பேச்சுவார்த்தைகள் 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பமாகி தேவையான சீர்திருத்தத் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. முக்கியமாக இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து 2024ஆம் ஆண்டு வரைக்கும் பயணித்த போது ஜனாதிபதி, மக்கள் மற்றும் அரசாங்கம் நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மறுசீரமைப்பு செயல்முறைகள் குறுகிய காலத்திற்கு கடினமாக இருந்தாலும் நடுத்தர மற்றும் நீண்டகால அளவில் நல்ல பலனைத் தரும் என்று நாங்கள் அப்போது தெளிவாகக் கூறினோம். கடினமான காலம் முடிவடைந்து இப்போது பிரதிபலன்களை பெறும் நிலையை அடைந்துள்ளோம்.
கேள்வி : இந்த வேலைத்திட்டத்தினுள் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மை என்ன?
சர்வதேச நாணய நிதியம் எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக எந்தவொரு மறுசீரமைப்பையும் அல்லது வேலைத்திட்டத்தையும் இலங்கை மீது திணிக்கவில்லை. நாட்டில் நிலவிய சூழ்நிலையில் நாங்கள் ஒத்துழைப்பைக் கோரியபோது, வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், மீண்டும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை நோக்கி செல்வதற்கும் அவர்கள் வழி காட்டியுள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான தீர்மானங்கள், கட்டமைப்பு மாற்றங்கள், கடன் முகாமைத்துவத்திற்கான மறுசீரமைப்பை நோக்கி நகர்தல், நல்லாட்சியை உருவாக்குவதற்காக இனங்காணப்பட்ட பலவீனங்களை அகற்ற அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதன்போது இந்தப் பயணத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த வாழ்க்கை முறையினைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதா, இல்லையேல் 2022ஆம் ஆண்டின் பணவீக்கம் 70 வீதத்தில் தரித்து நிற்காது தொடர்ந்தும் அதிகரிக்கும் நாட்டில் வாழ்வதா என்பது தொடர்பில் மக்களுக்காக ஜனாதிபதியும், அரசாங்கமும் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாம் சரியான தீர்மானத்தை மேற்கொண்டோம். அன்று நாம் எடுத்த தீர்மானம் சரியானது என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பொருளாதார ரீதியில் மேலும் ஸ்திரமடைந்து பலமடைவதற்கு இந்த கடன் தவணை விடுவிப்பானது பாரிய பங்களிப்பைச் செய்யும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் 3 நாள் விவாதம் நடைபெற்றது. வாக்கெடுப்பும் இடம்பெற்றது.
இன்று, இதற்கு எதிரான அனைவரும் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தனர், அல்லது எதிராக வாக்களித்தனர். எனவே இதில் எமக்கு மறைக்க எதுவும் இல்லை. நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கருத்து வெளியிட்டுள்ளது. நாம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இது இலகுவான விடயமல்ல. அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதைப் போன்று இது இலகுவானதல்ல. இதனைச் செய்ய முடியாது, இது கடினமானது, இதனைச் செய்ய வேண்டாம் என பெருமளவானோர் கூறினர். அந்த அனைத்து சவால்களுக்கும் அரசாங்கம் முகங்கொடுத்தது. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வந்த அச்சுறுத்தல்களைப் பாருங்கள். ஆனால், அந்த தீர்மானங்களை எடுக்காதிருந்தால், இன்று நாட்டைப் பற்றி பேசுவதற்கு எதுவுமிருக்காது. எனவே, நிறைவு செய்ய வேண்டிய விடயங்களை செய்து முடித்திருக்கின்றோம்.
கேள்வி : நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லப்படுமா? இல்லையென்றால், மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா?
ஆசியாவிலேயே நிர்வாகம் தொடர்பில் சில மதிப்பீடுகளைப் பெற்றுக் கொண்ட முதலாவது நாடு இலங்கை. டயக்னொஸ்டிக் அறிக்கையில் முதலில் அறிவிக்கப்பட்ட நாடு இலங்கை. இது வெளியிடப்பட்டது மாத்திரமின்றி, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அரசின் வேலைத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இப்பாதையில் பயணிப்பதைத் தவிர மாற்று வழிகள் இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து 2022ஆம் ஆண்டில் தெரிவிக்க வேண்டியிருந்தது. இன்றும் எங்களிடம் அதேதான் உள்ளது. மாற்றங்களைச் செய்வது என்பது 2022ஆம் ஆண்டுக்குத் திரும்புவதாகும்.
கேள்வி : கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் அமுல்படுத்திய தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாகவே இன்று இலங்கை முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இத்தகைய நெருக்கடி ஏற்படுவதற்கு என்ன காரணம்?
ஒவ்வொரு அரசாங்கங்களும் நாட்டினுள் சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தன. எனினும் துரதிர்ஷ்டவசமாக, அந்தந்த அரசாங்கங்களின் தலைவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் வந்தன.
அனேகமான சந்தர்ப்பங்களில், அந்த அழுத்தங்கள் அவர்களது அரசாங்கத்தினுள்ளிருந்தே வந்தன. அதேபோன்று, சர்வதேச அமைப்புகளின் தர நடவடிக்கைகளை ஒதுக்கிவிட்டு, நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என்ற நம்பிக்கையுடன் பல அரசாங்கங்கள் செயல்பட்டன. நாம் 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த மாற்றங்களைச் செய்திருந்தால், 2022இல் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம். நாம் பொருளாதாரத்தில் சரிந்தபோது, நாடு மிக மோசமான நிலைக்குள் வீழ்ந்தது.
எனினும் அரசாங்கத்தைத் தவிர, எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டன. அங்கிருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். ஒரு நாடாக, நாம் இன்று தரமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளோம். இந்த வேலைத்திட்டத்தினுள் மிக முக்கியமான விடயம் இலங்கையை மாற்றங்களுக்குள்ளான நாடாக சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது.
வாக்குறுதிகளில் முன்னேற முடியாது. இதிலிருந்து அரசாங்கம் பாடம் கற்க முடியுமென்றால், மீண்டும் இந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியுமென்றால், அரசாங்கத்தின் கருத்துக்களுடன் இணங்கா விட்டாலும் இந்த தவறுகள் மீண்டும் நடக்காமலிருப்பதற்காகச் செயற்படுவதே எதிர்க்கட்சியின் பொறுப்பாகும்.
மஹிந்த அளுத்கெதர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்