இஸ்ரேல்- காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் விரிவான திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அறிவித்துள்ளமை அதிகம் கவனத்தைப் பெறுகின்ற விடயமாக இருந்தது. ஆனாலும் போர்நிறுத்தத்துக்கான வாய்ப்பு தென்படாத சூழலில் போர் நீடித்துக் கொண்டிருக்கின்றது. பாலஸ்தீனர் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளதுடன் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினைத் தேடியழிப்பதில் முனைப்புக் காட்டுகின்றது. அதேநேரம் இஸ்ரேல் இராணும் மீதான தாக்குதலை ஹமாஸ் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் பாலஸ்தீனப் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் கொல்லப்படுவதையும் பாலஸ்தீன சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்படியாயின் இஸ்ரேலின் போர்நிறுத்தம் பற்றிய திட்டம் எதற்கானது என்ற கேள்வி இயல்பானது. இது அதற்கான பதிலைத் தேடமுயலும் கட்டுரையாக உள்ளது.
முதலில் போர்நிறுத்தம் பற்றி இஸ்ரேல் முன்மொழிந்ததாக அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்திய உடன்பாட்டை நோக்குவோம். இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்தம் மூன்று கட்டங்களைக் கொண்டது. ஆறுவாரங்களைக் கொண்ட முதல் கட்டம் முழுமையான போர்நிறுத்தமாக அமையும். அதன் பிரகாரம் காஸா முனையில் மக்கள் அதிகமுள்ள பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கும். ஹமாஸ் ஆயுதப்படைகள் தங்கள் பிடியிலிருந்த பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு பதிலாக இஸ்ரேலிய சிறையிலுள்ள பாலஸ்தீனக் கைதிகள் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலை செய்யப்படுவர். முதலாவது கட்டத்தில் ஹமாஸ், அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். வடக்கு காஸா உட்பட காஸாவின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காஸாவிற்குள் மனிதாபிமான உதவிப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனத் தொடரணியின் எண்ணிக்கையை 600ஆக அதிகரிப்பதெனவும் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது கட்டம், ஆறுவாரங்களுக்குப் பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தங்களை இஸ்ரேல்- ஹமாஸ் மேற்கொள்ளும். இதற்குள் இருதரப்பின் நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தமும் உள்ளடங்கும். இரண்டாம் கட்டத்தில் பேச்சுவார்த்தை நீடித்தாலும் போர்நிறுத்தம் தொடரும். இதன்போது பாலஸ்தீனக் கைதிகள் விடுதலைக்கு மாற்றாக, ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் உட்பட அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இதன் பின்னர் இஸ்ரேலிய படைகள் காஸாவிலிருந்து வெளியேறும். இதில் ஹமாஸ் உறுதியாக ஒத்துழைத்தால் தற்காலிகப் போர்நிறுத்தம் நிரந்தரப் போர்நிறுத்தமாக மாற்றமுறும்.
மூன்றாவது கட்டம், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் காஸாவை மீண்டும் கட்டமைக்க திட்டங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த திட்டங்களில் ஹமாஸ் ஆயுதப்படையினர், தங்கள் பிடியில் உயிரிழந்த பணயக் கைதிகளின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதனை வெளிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி போர்நிறுத்தம் ஏற்பட வேண்டுமாயின் இந்த சந்தர்ப்பத்தை ஹமாஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இஸ்ரேலால் முன்மொழியப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுத் திட்டம் கட்டார் மூலம் ஹமாஸின் பார்வைக்கு அனுபப்பட்டது. அதற்கான சாதகமான பதிலை ஹமாஸ் வெளிப்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஹமாஸ் எந்தவித பதிலையும் வெளியிடவில்லை என கட்டார் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது. இவ்வரைபை வரவேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அந்தோனியோ குட்றஸ், யுத்த நிறுத்தம் உடனடியாக அமுலாக்கத்துக்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேநேரம் ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன்னர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது எனவும் அதனை எதிர்ப்பதாகவும் இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோர்ரிச் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமர் பென் கிவிர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பிரதமர் ஆதரிப்பராயின் ஆளும் வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தை கலைக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் இஸ்ரேலியப் பிரதமர் போர்நிறுத்தத்தை ஆதரித்தால் அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதாக இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய போர்நிறுத்தத் திட்டத்தை முன்வைத்த இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதலை காஸாவுக்குள்ளும் லெபனான் எல்லை நகரங்களிலும் மேற்கொண்டுவருகிறது. இதற்கான காரணங்களை தெரிந்து கொள்வது அவசியமானது. ஒன்று, ஹமாஸ், இஸ்ரேல் முன்மொழிந்த போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது பிரதான காரணமாக அமைய வாய்ப்புள்ளது. ஆனால் ஹமாஸ் இத்திட்டத்தை மேற்குறித்த வடிவில் ஏற்காமல் இருப்பதற்கு வலுவான காரணம் எதுவும் இல்லை என்ற விவாதம் நிகழுகிறது. ஆனால் அத்தகைய போர்நிறுத்த உடன்பாட்டில் ஹமாஸை அழித்தல் என்பது காணப்படுவதாகவும் அதுவே ஹமாஸ் இதற்கு முழுமையான கருத்தை வெளியிடாமைக்கு காரணம் எனவும் பிபிசி குறிப்பிடுகிறது.
இரண்டு, இஸ்ரேலிய பிரதமர் இத்திட்டத்தை முன்மொழியும் போது, இஸ்ரேலிய நிதியமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் எத்தகைய கருத்துநிலையைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்து கொள்ளப்படாது, நெதன்யாகு இவ்வுடன்பாட்டை வெளிப்படுத்தியது உண்மையானதாக அமையுமா? அப்படியாயின் இத்தகைய போர்நிறுத்த உடன்பாடு போலியான உரையாடலாக மட்டுமே பார்க்கப்பட வேண்டியதென்றா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகும். காரணம் நெதன்யாகு அரசாங்கம் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை வலுவான விடயமாக மாறுகின்றது. அதற்கு ஆதரவாக மேற்குலக நாடுகளும் களமிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஐ.நா.வை திருப்திப்படுத்துவதற்கும் நெதன்யாகு முயன்றுள்ளதாகவே தெரிகிறது. அதனையே அமெரிக்காவும் விரும்புகிறது. தற்போதைய சூழலை சரியான முறையில் கையாளுவதே போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையாக உள்ளது.
மூன்று, கடந்தகாலம் முழுவதும் (1947முதல்) இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் உலகத்தாலும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையாலும் முன்வைக்கப்பட்ட அனைத்து சமாதான உடன்பாடுகளையும் திட்டங்களையும் நிராகரித்தது மட்டுமல்லாது ஏற்றுக்கொண்ட திட்டங்கள் எதனையும் அமுல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்ரேலிய- பலஸ்தீன பாகப்பிரிவினைத் திட்டத்தை ஐ.நா. முன்வைத்த போது, அதனை நிராகரித்ததுடன் பாலஸ்தீன மக்களின் வாழ்விடத்தை யூதக் குடியேற்றத்தால் அழித்தொழித்தவர்கள் அவர்கள். அதுவே தற்போதுவரை நிலவும் முரண்பாட்டுக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது. அதன் பின்னர் காஸா- ஜெரீக்கோ உடன்பாடு, வைநதி உடன்பாடு, இருநாட்டுத் தீர்வுத்திட்டம், என பலதிட்டங்களில் இஸ்ரேல் கையெழுத்திட்ட போதும் நடைமுறையில் எதனையும் யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பல திட்டங்களை அவர்களே முன்மொழிந்தார்கள் பின்னர் அவர்களே அவற்றைக் கிழித்தெறிந்தார்கள். யூதர்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனர்களை முற்றாகவே அழித்தொழித்துவிட்டு அப்பிரதேசத்தை யூதர்களின் பிரதேசமாக மாற்றும்வரை போரை நிகழ்த்திக் கொண்டு சமாதானத்தை தற்காலிக தந்திரோபாயமாகவே கையாளுவார்கள். அதனையே நெதன்யாகு அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் ஒரு ஏமாற்றுத்தனமான போர்நிறுத்த உடன்பாட்டை பற்றி உரையாடியுள்ளார். இதனால் எத்தகைய மாற்றமும் காஸாப் பகுதியில் நிகழப்போவதில்லை. மாறாக இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நகர்வுகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு சாத்தியமாகும்.
நான்கு, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நீண்ட ஆட்சியை மேற்கொண்டிருப்பவர். அவர் தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கே போரைத் தொடங்கியதாக அவர்மீது விமர்சனங்கள் உண்டு. அத்தகைய விமர்சனங்களுக்கு நெதன்யாகுவுக்கு எதிராக நிகழும் யூதர்களின் போராட்டங்கள் ஆதாரமானவை. அதனால் அவர் ஆட்சியைத் தக்கவைப்பதற்கும் நெருக்கடியைக் கடப்பதற்கும் எடுத்த நகர்வாகவே போர்நிறுத்த உடன்பாடு பற்றிய விடயம் நோக்கப்பட வேண்டியுள்ளது. தனது ஆட்சியை தக்கவைக்க எடுத்த போரை பின்வாங்க முடியாத நிலையில் ஆட்சி அதிகாரத்தின் மீதான பிடியை பாதுகாத்துள்ளார். அதனாலேயே ஆட்சிக் கவிழ்ப்பு என்ற உத்திக்குள் அவரது போர்நிறுத்த உடன்பாடு அகப்பட்டுள்ளது.
ஐந்து, முழுமையான திட்டமிடலின்றி ஹமாஸ் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு செவிசாய்க்கவில்லை என்ற அடிப்படையில் போரை நகர்த்தும் முயற்சியாகவே போர்நிறுத்த உடன்பாடு காணப்படுகிறது. காரணம் போர்நிறுத்த உடன்பாட்டிலுள்ள உள்ளடக்கங்கள் அனைத்துமே, இஸ்ரேலிய பாதுகாப்பை மையமாகக் கொண்டிருப்பதோடு போர்நிறுத்தத்தை மீறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அதன் உள்ளடக்கம் கொண்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இஸ்ரேல் தான் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து தனது இராணுவம் வெளியேறும் என்றோ ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதென்ற விடயத்தை கைவிட்டதாகவோ தெரியப்படுத்தவில்லை. ஆனால் ஹமாஸ் உடன் உடன்பாடு மேற்கொள்ள திட்டமிடுவதென்பது அதனை அழிப்பதற்கானதென்றும் புரிந்து கொள்ள முடியும். பணயக் கைதிகளை மீட்டெடுப்பதே பிரதான நோக்கமாக தெரிகிறது. அதனை இதுவரை எட்டமுடியாதுள்ளது என்பதற்காக அதனை இஸ்ரேலிய புலனாய்வு எட்டாது என்ற முடிவுக்கும் வரமுடியாது. ஆதலால் ஹமாஸை நெருங்குவதென்பது அதனை சரிசெய்வதற்கான உத்தியாகவே உள்ளது. போரியலில் ஒருவடிவமாக அணைத்து அழிப்பது உலகளாவிய ஆதிக்க சக்திகளின் உத்தியாகவுள்ளது. அதனையே உடன்பாட்டின் உள்ளடக்கம் அதிகம் கொண்டுள்ளது.
எனவே போர்நிறுத்த உடன்பாட்டுக்கான இஸ்ரேலிய-அமெரிக்கக் கூட்டின் உத்தியானது, நெதன்யாகுவின் ஆட்சியை பாதுகாப்பதற்கும், போரை நீடிப்பதற்குமான அடிப்படையாகவே உள்ளது. போர் நீடிப்பானது இஸ்ரேலின் விஸ்தரிப்புத் திட்டமிடலாகவே உள்ளது. முழுமையாக ஹமாஸை அழித்தல் என்பது, முழுமையாக பாலஸ்தீனர்களை அழிப்பதாகவே உள்ளது. அதேநேரம் ஹமாஸ் போரை எதிர்கொள்வதும் மறுபக்கத்தில் போர்நீடிப்புக்கான வழிமுறையாகவே தெரிகிறது. அதனால் போர்நிறுத்த உடன்பாடு போரை நீடிப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது. உலகிலுள்ள அனேக சமாதான உடன்பாடுகள் போரை எதிர்கொள்வதற்கான முனைப்பாகவே அமைந்துள்ளன. அந்த வரைவுக்குள்ளேயே இஸ்ரேலின் போர்நிறுத்த திட்டம் காணப்படுகிறது.