நாடொன்றின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தும் துறைகளில் முக்கியமானவற்றில் ஒன்றாக வலுசக்தித்துறை விளங்குகின்றது. எரிபொருள் வளங்கள் குறைந்த நாடுகளில் இத்துறைக்கான செலவினங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.
கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின்போது இத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு ஒட்டுமொத்த நாட்டிலும் உணரப்பட்டது.
மின்சார உற்பத்திக்காக அரசாங்கம் செலவு செய்யும் அளவுக்கேற்ப மக்களுக்கு அதனால் நன்மை கிடைக்கின்றதா என்ற கேள்வியும், மின்சாரத்துறையைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் இலங்கை மின்சாரசபையின் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக உள்ளதா என்ற கேள்வியும் நீண்ட காலமாக வருகின்றன.
இலங்கை மின்சாரசபையே மின்சாரத்துறையில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தமையால் அங்குள்ள ஒரு சிலர் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வழங்கும் அழுத்தத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்களால் இத்துறை பாரிய சவால்களைச் சந்தித்து வந்தது. குறிப்பாக அரசாங்கத்துக்கு அதிக சுமையாக இருக்கும் அரசாங்க நிறுவனங்களில் இலங்கை மின்சாரசபையும் ஒன்றாக மாறியது.
இவ்வாறான பின்னணியில், இலங்கையில் மின்சார உற்பத்தி கடந்த கால பொருளாதார நெருக்கடியால் கணிசமான சவால்களுக்கு முகங்கொடுத்தது. 2022 ஆம் ஆண்டில் அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாக, மொத்த மின் உற்பத்தி 4.6 சதவீதம் சரிவை பதிவு செய்தது.
அதன்படி, 2021 இல் 16,716 கிகாவற்றாக இருந்த மொத்த மின்உற்பத்தி 2022 இல் 15,942 கிகாவற்றாகக் குறைந்தது. இவ்வாறான நிலையில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி மின் உற்பத்திக்கான திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்உற்பத்தித் திறனை தற்போதுள்ள 4,043 மெகாவாட்டிலிருந்து (மெகாவாட்) 6,900 மெகாவாட்டாக அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இலங்கை ஏற்கனவே 98 சதவீத கிரிட் இணைப்பை அடைந்துள்ளது, இது தெற்காசிய தரத்தின்படி ஒப்பீட்டளவில் உயர்ந்ததாகும். இருப்பினும், தற்போதைய பொருளாதார நெருக்கடி மின்சாரத்துறை உட்பட பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய பிரிவுகளையும் பாதித்துள்ளது.
இலங்கையில் மின்சாரம் மூன்று முதன்மை ஆதாரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது: அனல் மின்சாரம் (நிலக்கரி மற்றும் எரிபொருள் எண்ணெய் உட்பட), நீர் மின்சாரம் மற்றும் பிற மரபுசாரா புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் (சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி).
எவ்வாறாயினும், மோசமான எரிசக்தி கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விரிவுபடுத்துவதில் தோல்விகள் மற்றும் கடந்த தசாப்தத்தில் டிரான்ஸ்மிஷன் கிரிட் நவீனமயமாக்கல் மற்றும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் இல்லாமை ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு மின்சார விநியோகத்தைத் தடுப்பதாக இருந்தன.
இருந்தபோதும், சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டில் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடுமையான முயற்சியை எடுத்திருந்தது. இத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதாயின் இதனை மறுசீரமைக்க வேண்டும் என்ற கடுமையான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்தது. இத்துறையை மறுசீரமைப்பதற்குக் குறிப்பாக இலங்கை மின்சாரசபையின் சட்டத்தை திருத்தியமைத்து, வினைத்திறன் மிக்க சேவையை வழங்கச் செய்வதற்கான முயற்சிகள் கடந்த அரசாங்கங்களின் காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை தோல்வியில் முடிந்திருந்தன. எனினும், இந்த அரசாங்கம் இத்துறையை மறுசீரமைக்கும் இலக்கில் முதற்படியை வெற்றிகொண்டுள்ளது.
இத்துறையை மறுசீரமைக்கும் நோக்கில் இலங்கை மின்சாரசபைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய இலங்கை மின்சார சட்டமூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பில் கருத்தாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு, இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதனை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்திருப்பதால் அவற்றைத் திருத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்தது. இந்த ஆலோசனைகளை ஏற்று உரிய திருத்தங்களை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 44 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இச்சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பில் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரியிருந்தது. அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்டன. அதனையடுத்து, குழுநிலையின் போது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்கும் நோக்கிலேயே இச்சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சிகள் பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்திருந்த மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இச்சட்டமூலத்தின் ஊடாக இலங்கை மின்சாரசபையின் வினைத்திறன் அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுத்தப்படும் என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தார்.
இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்கங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி இதனை மறுசீரமைப்பதற்கு அனுமதிக்காமல் இருந்து வந்தன. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டத்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்தபோதும், இது பலளித்திருக்கவில்லை.
இலங்கை மின்சாரசபையைப் பொறுத்தவரையில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்திக்குச் செல்லும் நோக்கில் கொண்டுவரப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தவறியது. பாரம்பரியமான மின்உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தும்போது விசேடமாக மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடி மின்சாரக் கொள்வனவுக்கு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் பரிந்துரைப்பார்கள்.
இதனால் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய தரகுப்பணம் அதிகமாக இருந்தமையால் புதுப்பிக்கத்தக்க சக்தியைக் கொண்ட மின்சார உற்பத்தியில் அதிக நாட்டம் காண்பிக்காது இருந்து வந்தனர். அது மாத்திரமன்றி, சம்பள அளவிலும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சாரசபையின் சம்பள அளவு அதிகமாகவே உள்ளது. இதனால் அரசாங்கத்துக்கான செலவும் அதிகமாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், மின்சாரசபையை மறுசீரமைத்து அதற்குக் காணப்படும் சுமைகளை தனியார் பங்குடைமைகளின் ஊடாகக் குறைத்து வினைத்திறன்மிக்க வகையில் மின்சார விநியோகத்தை வழங்குவது இச்சட்டமூலத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. இது விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆரம்ப வெற்றி கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
பி.ஹர்ஷன்