இந்தியாவின் புதிய அரசின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்கின்றார். அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கவுள்ள நிலையில், டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ) நாடாளுமன்ற குழுத் தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். இன்றிரவு 7.15 மணியளவில் நடைபெறும் விழாவில், 3 ஆவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கிறார்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்.எஸ்.ஜி கமாண்டோக்கள், ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு நடந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் இப்போதும் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருவதற்கு பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதை முழுவதும் ஸ்நைப்பர்களும், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நகரில் முக்கியமான பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
வங்கதேசம், இலங்கை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், மொரீஷியஸ், செசல்ஸ் தீவுகள் தலைவர்களுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு செய்திகள் தெரிவித்தன. இதனால் ஹோட்டல்கள் லீலா, தாஜ், ஐ.டி.சி மவுரியா, க்ளாரிட்ஜெஸ், ஒபரோய் ஆகியன பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் டெல்லி பொலிஸ் துறையின் சிறப்பு ஆயுதங்கள், உத்திகள் படைப்பிரிவான ஸ்வோட் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகரின் பல பகுதிகளில் இருந்தும் மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் மற்றும் இரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஏற்கனவே நரேந்திர மோடி கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்று 10 ஆண்டு பணியை நிறைவு செய்தார். இன்று அவர் தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.
இதன்மூலம் அவர் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை சமன் செய்கிறார்.
வங்தேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்றைய தினமே இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஏனைய தலைவர்கள் இன்று வருகை தருகின்றனர்.
உலகத் தலைவர்கள் தவிர இன்றைய விழாவில் பா.ஜ.க முதல்வர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், மடாதிபதிகள் போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜே.டி.யுவின் 12 எம்பிக்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்.பி.க்கள் உட்பட 14 கட்சிகளின் 53 எம்.பிக்கள் ஆதரவுடன் இன்று பிரதமர் மோடி பிரதமராகின்றார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருமே மோடி தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவுக் கடிதங்களை வழங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒருபுறமிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல கட்சிகளுடன் பா.ஜ.கவுக்கு சித்தாந்த ஒற்றுமை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார், சிராக் பாஸ்வான் போன்ற அரசியல் தோழர்களை ஒற்றுமையுடன் வைத்திருந்து நரேந்திர மோடி எவ்வாறு பிரதமர் நாற்காலியில் நீடிக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இக்கட்சிகளில் முறையே 16 மற்றும் 12 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு), தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) ஆகியவை முக்கியமானவை.
இருப்பினும் 7 தொகுதிகளை வென்றுள்ள சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே பிரிவும், ஐந்து இடங்கள் உள்ள லோக் ஜனசக்தி ராம்விலாஸ் பாஸ்வான் (எல்.ஜே.பி) பிரிவும், உத்தரப் பிரதேசத்தில் 2 இடங்களில் வென்று நாடாளுமன்றத்தில் நுழைந்த ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்.எல்.டி) ஆகியவையும் பா.ஜ.கவுக்கு முக்கியமானவை. இவற்றில் சிவசேனையைத் தவிர ஏனைய கட்சிகளுடன் பா.ஜ.கவின் உறவு அவ்வளவு சுமுகமாக இருந்ததில்லை.
ஜே.டி.யுவும், தெலுங்கு தேசம் கட்சியும் கடந்த காலங்களில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்துள்ளன. சில விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அவை விலகின. இப்போது அவை ஒன்றுசேர்ந்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் இந்தக்கட்சிகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றாக வைத்திருப்பது மோடிக்கு சவாலாக இருக்கக்கூடும். பா.ஜ.க அக்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்துக்குப் பிறகு இதன் அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளன.
ஜே.டி.யு தலைவர் கே.சி தியாகி வியாழனன்று அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது பற்றி பகிரங்கமாகப் பேசினார்.
நிதீஷ், நாயுடு இருவருமே பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வருகின்றனர்.
இந்த அரசியல் கட்சிகள் தங்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவியை கோரி வருவதாகவும் ஊடகங்களில் பேச்சு அடிபடுகிறது.
ஆனாலும் நரேந்திர மோடி புத்திசாலித்தனமான தலைவராவார். அரசியல் இராஜதந்திரமும் தெரிந்தவர். கூட்டணிக் கட்சிகளை தம்வசப்படுத்துவதில் கைதேர்ந்தவர் என்ற நம்பிக்கையும் பரலாக நிலவுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே மூன்றாவது தடவையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார் நரேந்திர மோடி.
எஸ்.சாரங்கன்