Home » கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா-2024

கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா-2024

புகழ்பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி இந்த ஆண்டு கம்பன் புகழ் விருது பெறுகிறார்

by Damith Pushpika
June 9, 2024 6:00 am 0 comment

கொழும்பு கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா இம் மாதம் 14, 15, 16, 17ஆம் திகதிகளில் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன் கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 44 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு கம்பன் விழாவின் முதல்நாளான ஜுன் மாதம் 14 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண தோட்டம், இல. 11இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும், சீதா இராம விக்கிரகங்களும் இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கல இசையுடனும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய, மேலைத்தேய வாத்திய இசையுடனும், மங்கையர்களின் நிறைகுட பவனியுடனும், ஊர்வலமாக விழாமண்டபம் நோக்கி எடுத்து வரப்படவுள்ளன. இவ் ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைதரும் பிரமுகர்களும், இரசிகர்களும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா முதலிய நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள அறிஞர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து மாலை 5.30க்கு அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் அபிராமி கயிலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்பு கம்பன்கழகப் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையுரையையும் கொழும்பு கம்பன்கழகத் தலைவர் ஈ. கணேஷ் தொடக்க உரையையும் ஆற்றவுள்ளனர்.

நூல் வெளியீடு

இவ்வாண்டுக் கம்பன் விழா திருநாள் மங்கலத்தன்று கம்பராமாயணச் செய்யுட்களின் முழுத்தொகுப்பு நூல் (பைபிள் தாளில் அச்சிடப்பட்டது) இரு பாகங்களாக வெளியிடப்படவுள்ளது. இந்நூலின் முதற் பிரதிகளை இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

‘கம்பன் புகழ் விருது’ பெறும் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி

அகில இலங்கைக் கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு “கம்பன் புகழ் விருதினை” ஆண்டுதோறும் கொழும்பு கம்பன் விழாவில் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான், இசை அறிஞர் ரி.என். சேஷகோபாலன், நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பேராசிரியர் ஒளவை நடராஜன், பேராசிரியர் சிலம்பொலி சு. செல்லப்பன், இசையரசி பம்பாய் ஜெயஸ்ரீ, பேராசிரியர் சாலமன் பாப்பையா, புகழ்பெற்ற பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணிம் முதலியோர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். ‘வி. ரி. வி. பவுண்டேஷன்’ நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக் ‘கம்பன்புகழ் விருது’ இவ்வாண்டு, புகழ்பெற்ற எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்படவுள்ளது. விருதுக் கேடயம், பொன்னாடை, பொற்கிழி ஆகியவற்றுடன் கூடிய ரூபா ஐந்து இலட்சம் பெறுமதியானதாக இவ்விருது அமையவுள்ளது. இவ்விருதினை, கம்பன் விழாவின் நிறைவு நாளன்று மாலை கழகப்பெருந் தலைவர் நீதியரசர் ஜெ. விஸ்வநாதன் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.

சான்றோர் கௌரவம் பெறும் நம்நாட்டுப் பெருமக்கள் அறுவர்

தம் செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் அகில இலங்கைக் கம்பன் கழகம் கௌரவித்து வருகிறது. அவ்வரிசையில் இவ்வாண்டு கௌரவத்துக்குரியவர்களாக, இலங்கையின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், என்பு அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழ் அறிஞர் கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ், வடமாகாண பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தத்தம் துறைசார்ந்து இப்பெரியோர்கள் நம் தேசத்திற்கும், இனத்திற்கும் தன்னலமற்று செய்த பெருந்தொண்டுக்காகவும் அவர்தம் துறைசார்ந்த ஆற்றலுக்காகவும் வழங்கப்படும் இவ்விருதுகள் ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. இவ்விருதுக்கு உரியவர்களுக்கான கௌரவங்கள், விழாவின் இறுதி நாளில் சகல மரியாதைகளுடனும் வழங்கப்படவுள்ளன.

அறக்கட்டளை விருதுகள்

கம்பன் விழாவில் வருடாந்தம் வழங்கவென அறக்கட்டளை விருதுகளை சிலர் ஏற்படுத்தியுள்ளனர். நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் அமரர் என். கருணை ஆனந்த சிறந்த அறிஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘நாவலர் விருது’ இவ்வாண்டு அரிய பல நூல்களை வெளியிட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ‘சிவாலயம்’ ஜெ. மோகனுக்கு (பொறியியலாளர்) வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திருக்குவளை இராமஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர், சிறந்த இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘விபுலாநந்தர் விருது’ இவ்வாண்டு புகழ்பெற்ற சங்கீத பூஷணம் பொன். ஸ்ரீவாமதேவனுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர் அமரர் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான், ஈழத்துக் கவிஞர்களைக் கௌரவிப்பதற்காக நிறுவிய ‘மகரந்தச் சிறகு’ விருது இவ்வாண்டு இலங்கையின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான கவிஞர் மேமன்கவிக்கு வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனின் நினைவாக அவரின் குடும்பத்தினர் நிறுவியுள்ள அறக்கட்டளை மூலம், சிறந்த ஆய்வு நூல் ஒன்றுக்கு ‘நுழைபுலம் ஆய்வு’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டுக்குரிய சிறந்த ஆய்வு நூலாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதிய “யாழ்ப்பாணத்து கல்வி வளர்ச்சியில் இந்திய அறிஞர்களின் பங்களிப்பு” எனும் நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவியுள்ள ‘ஏற்றமிகு இளைஞர்’ விருது, அண்மையில் புகழடைந்துவரும் தமிழ் கிரிக்கெட் விளையாட்டு வீரர் வி. வியாஸ்காந்துக்கு வழங்கப்படுகிறது.

சமூக நிதியுதவி

அமரர் எல். அலமேலு ஆச்சி ஞாபகமாகத் தமிழ்நாடு ஏ. எல். சிதம்பரம் நிறுவிய அறக்கட்டளை நிதி, இவ்வாண்டு மட்டக்களப்பு யோகர் சுவாமி மகளிர் இல்லத்திற்கு வழங்கப் பெறுகிறது. மேலும், அமரர் சி. கே. இலங்கராஜா ஞாபகார்த்த நிதி, அமரர் வித்துவான் க. ந. வேலன் ஞாபகார்த்த நிதி, அமரர் டாக்டர் செ. சபாநடேசன் ஞாபகார்த்த நிதி, முன்னாள் அதிபர் அமரர் ஈ. சபாலிங்கம் ஞாபகார்த்த நிதி, திருமதி சூரியகண்ணம்மாள் அறக்கட்டளை நிதி உதவிகள் இலங்கையில் பல பாகங்களிலும் அமைந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு அவர்களது உயர் கல்வியைத் தொடரும் பொருட்டு வழங்கப்படவுள்ளன.

இளையோர் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான பரிசளிப்பு

இயல்த் துறையில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டு தோறும் கம்பன் கழகம் நடத்தி வரும் அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப் போட்டி, அமரர் பொன். பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டி, நாவலர் நற்பணிமன்ற அனுசரணையில் நடத்தப்படும் திருக்குறள் மனனப்போட்டி, இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் அனுசரணையில் நடாத்தப்படும் இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டி முதலியவற்றில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கான பதக்கங்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்ச்சி விழாவின் மூன்றாம் நாள் மாலை நிகழ்வில் நடைபெறவுள்ளது.

கம்பன் விழா நிகழ்ச்சிகள்

இவ்வாண்டுக் கம்பன்விழாவில்; தனியுரை, விவாத அரங்கம், பட்டிமண்டபம், சிந்தனை அரங்கு, கவியரங்கம், கருத்தரங்கம், நாடக அரங்கம், வழக்காடு மன்றம், நாட்டிய அரங்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சிறப்பு நாட்டிய அரங்கம்

இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல் நாள் மாலை அரங்கில் சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “இராமன் எத்தனை இராமனடி?” எனும் பொருளில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியை நம் நாட்டின் புகழ்பெற்ற நடன ஆசிரியர்கள் நால்வரின் மாணவர்கள் சேர்ந்து வழங்கவுள்ளனர். கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன், கலைமாமணி ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதாசன், நாட்டிய பூரண கலாநிதி ஸ்ரீமதி நிர்மலா ஜோன், நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப்பிரியா, ஆகியோரின் மாணவியர்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.

விழாவில் கலந்துகொள்ளும் பிரமுகர்கள், அறிஞர்கள்

இவ்விழாவில் மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் பிரதியமைச்சரும் மலேசியக் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் மலேசிய இலக்கியப் பிரமுகர் குழுவினர் கலந்து சிறப்பிக்கின்றனர். அவ்வாறே புதுச்சேரி சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் வி. பி. சிவக்கொழுந்து தலைமையில் புதுவைப் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கின்றனர். மேலும் கோவிலூர் ஆதீன கர்த்தர் சீர்வளர்சீர் நாராயண ஞானதேசிக சுவாமிகள், ‘கற்க’ அறக்கட்டளையின் தலைவர் எஸ். செந்தில்குமார், டில்லி கம்பன் கழகத் தலைவர் பெருமாள், அவுஸ்திரேலியாவில் வதியும் வைத்தியநிபுணர் செ. சிதம்பரக்குமார், சிங்கப்பூரைச் சார்ந்த முன்னாள் வங்கி அதிகாரி மகாலிங்கம் முதலிய பிறநாட்டுப் பிரமுகர்கள் பலரும் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றவென தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் மற்றும் பேச்சாளர்கள் பலரும் வருகை தருகின்றனர். ‘இலக்கியச் சுடர்’ த. இராமலிங்கம் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், கவிச்சுடர் கவிதைப்பித்தன், முனைவர் இரா மாது, திருமதி பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் கே. சுமதி, பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர் வருகை தருகிறார்கள். இவர்களோடு சென்னைக் கம்பன் கழகம், புதுவைக் கம்பன் கழகம், கோவில்ப்பட்டிக் கம்பன் கழகம், டில்லி கம்பன் கழகம், திருச்சி கம்பன் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்களோடு நம்நாட்டைச் சார்ந்த பிரபல பேராசிரியர்கள், அறிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் முதலிய பெரியோர்கள் பலரும் இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

புத்தகக் கண்காட்சி

விழா நடைபெறும் நான்கு நாட்களிலும் மண்டபவாயிலில் பூபாலசிங்கம் புத்தகசாலை, புத்தகக் கண்காட்சி ஒன்றினை நடத்தவுள்ளது. இக் கண்காட்சியில் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

இரசிகர்களுக்கு வேண்டுகோள்

கம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division