விஜய் சேதுபதி நடித்து வரும் 51 வது படமான ‘ஏஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நடந்தது என்பதும் கிட்டத்தட்ட முழு படமும் மலேசியாவில் தான் படமாக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது மலை மீது உள்ள முருகன் கோவிலில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டதாகவும் ஆனால் மலைக்கோவிலின் அடிவாரத்தில் மட்டுமே படம் எடுக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏராளமான படிகள் கொண்ட மலையில் ஏறி முருகனை தரிசிக்க விஜய் சேதுபதி விரும்பியதாகவும் ஆனால் அதிக கூட்டம் காரணமாக முருகனை தரிசனம் செய்யாமலேயே விஜய் சேதுபதி சென்னை திரும்பி விட்டது அவருக்கு ஏமாற்றமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டாக படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்டமாக தொழில்நுட்ப பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கரன் ரவாத் ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள டைட்டில் வீடியோ வெளியானது என்பதும் இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.