Home » பலஸ்தீனர் மீதான இனப்படுகொலை; ஐ.நா.வும் பொறுப்புக் கூறவேண்டும்?

பலஸ்தீனர் மீதான இனப்படுகொலை; ஐ.நா.வும் பொறுப்புக் கூறவேண்டும்?

பலஸ்தீன மக்கள் முழுமையாக கொல்லப்படும் வரை உலகம் பார்த்துக் கொண்டே இருக்குமா?

by Damith Pushpika
June 2, 2024 6:00 am 0 comment

ஐக்கிய நாடுகள் சபையின் ஆத்மா, காஸாவில் மாண்டுவிட்டதாக துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகன் தெரிவித்துள்ளார். உண்மையில் ஐ.நா. ஒடுக்கப்பட்டுவரும் தேசிய இனங்களுக்கு முன்னே தனது ஆத்மாவைக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாடுகளின் சபையிடம் நாடுகளின் நலனுக்கான ஆத்மா இருக்குமே அன்றி அடக்கு முறைக்குள்ளாகும் மக்களை பாதுகாக்கும் வலிமை இருக்கின்றது என்று கருதமுடியாது. 1912—– —- 1915 வரை ஏர்டோகனின் மூதாதையரான துருக்கிய ஆட்சியாளர்களால் 15 இலட்சம் ஆர்மேனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவில் கொள்ள மறந்துவிடக்கூடாது. இவ்வாறு யூதர்கள், நைஜீரியர்கள், கம்போடியர்கள், டுட்சி இனத்தவர் என்ற வரிசையில் மேற்கொள்ளப்பட்ட போது ஐ.நா.வின் ஆத்மாவை யாரும் தேடவில்லை. ஐ.நா. என்பது வல்லரசுகளின் நலனுக்கான சபை மட்டுமே.

இஸ்ரேல் என்ற நாடும் அதன் ஆட்சியும் அமெரிக்க பெருவல்லரசின் நீட்சிக்கான சக்தியே. ஆதனால் அமெரிக்காவின் நலன்களை இஸ்ரேல் காஸாவில் நிறைவு செய்கிறது. மறைமுகமாக ஐ.நா.வும் அமெரிக்க நலனுக்கு கட்டுப்படுகிறது. அவ்வாறாயின் ஐ.நா.வும் காஸாவில் நிகழும் இனப்படுகொலையின் பங்காளியாகவே உள்ளது.

ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்ளும் போது ஹமாஸ் போராளிகளை அழிப்பதே தனது தாக்குதலின் நோக்கம் என்கிறது. ஆனால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் வயோதிபர்கள் தற்காலிகமாக வசிக்கும் இடங்களை நோக்கி விமானத் தாக்குதலையும், ஏவுகணைத் தாக்குதலையும் நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்கான அனைத்து எத்தனங்களையும் நிகழ்த்தி வருகிறது. காரணம் இனப்படுகொலையை மேற்கொள்ள முன்னர் அரசுகள் பின்பற்றும் நடைமுறை குறித்த இனப்படுகொலை அவதானிப்பு என்ற அமைப்பின் தலைவர் கலாநிதி கிறகோரி எச். ஸ்டான்டன் 1996இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு இனப்படுகொலை குறித்து அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையின் பிரகாரம் இனப்படுகொலைக்கான படிமுறைகளைப் பட்டியல் படுத்தியிருந்தார். (ஆதாரம்: சிறிஞானேஸ்வரன்(2022) பன்னாட்டுக் குற்றங்கள் எனும் நூல்) அதன்படி,

முதலாவது, வகைப்படுத்தல்: இனமொன்றை அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாக்கவுள்ள பிரிவினரை ஏதாவது பொது அடையாளத்தின் கீழ் ஒன்றுதிரட்டுதல் வகைப்படுத்தலாக அமைகிறது. அதில் இனம், மொழி, சார்ந்த கலாசார அடையாளங்களை முன்னிறுத்தி அத்தகைய வகைப்படுத்தலை நிகழ்த்துதல். அதனையே இஸ்ரேல் பலஸ்தீனர் மீதும் நிகழ்த்துகிறது. அவர்களை இஸ்லாமிய பொது கலாசாரத்திற்குள்ளால் மட்டுமன்றி பலஸ்தீனர் என்ற அடையாளம் சார்ந்தும் வகைப்படுத்துகிறது.

இரண்டாவது, குறியிடல்: அதாவது வகைப்படுத்தல் குழுவினரை பொதுப் பெயர் அல்லது சின்னம் ஒன்றினால் அடையாளப்படுத்துவது குறியிடலாகக் கொள்ளப்படுகிறது. பலஸ்தீனர் அல்லது ஹமாஸ் என்பது குறியிடலாகவே தெரிகிறது.

மூன்று, மனிதமாண்பை மறுத்தல்: குறிப்பிட்ட மனிதத் தொகுதியொன்றின் மனிதமாண்புகளை புறந்தள்ளி அம்மனிதத் தொகுதிகளை விலங்குகளுக்கும், உண்ணிகளுக்கும் அல்லது நோய்களுக்கும் சமப்படுத்த முனைவது, மனிதமாண்பை மறுத்தலாகும். ஏறக்குறைய பலஸ்தீனர்கள் மீது அத்தகைய நிலையையே இஸ்ரேலிய அரசாங்கம் மட்டுமல்ல இஸ்ரேலிய மக்களும் மேற்கொள்கிறார்கள்.

நான்கு, ஒழுங்குபடுத்தல்: அரசுகளே இத்தகைய ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்கின்றன. இனப்படுகொலைக்கு தேவையான முக்கிய வளங்களால் ஆயுதங்கள், ஆயுதப் பயிற்சிகள் மற்றும் இரகசியமான குழுக்களை கட்டமைத்து அவற்றுக்கு பயிற்சியளித்தல். அது மட்டுமன்றி விசேட இராணுவ அணிகளையும் ஏனைய குழுக்களையும் தயார் செய்து அவற்றுக்கு இனப்படுகொலை மேற்கொள்வதற்கான அனுமதியையும் அரசுகள் மேற்கொள்கின்றன. இதனையே இஸ்ரேல், அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகள் கூட்டாக நிகழ்த்தி வருகின்றன. ஆயுத தளபாடங்களை பரிமாற்றுவது, பயிற்சியிலும் படைப் பிரயோகத்திலும் ஈடுபாடு காட்டுவது என்ற அடிப்படையில் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு, அமெரிக்கா ஒழுங்குபடுத்துகிறது.

ஐந்து, பிரித்து எதிரியாக்குதல்: ஒற்றுமையாக செயற்படும் இனத்தை பிரித்து குழுக்களாக தனிமைப்படுத்தி வெறுப்புக் கட்டமைப்பை உருவாக்குதல். வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது. அதனை இஸ்ரேல் பலஸ்தீன தரப்புக்குள் ஏற்படுத்த முனைவதுடன் பலஸ்தீனத்திற்கு ஆதரவான தரப்புக்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டுவருகிறது.

ஹமாஸ் அமைப்பையும், பலஸ்தீன அதிகாரக் கட்டமைப்பையும் தனித்தனியாக பிரித்து கையாளுதல் என்பதே அந்த மக்கள் கூட்டத்தை பிரித்து எதிரியாக்குவதே. அதற்காக மிதவாதிகளை கொலை செய்வது அவர்களை அடக்குமுறையின் கீழ் கொண்டுவருதல் என்பனவும் பிரித்து எதிரியாக்கும் வேலையாகவே வரையறுக்கப்படுகிறது.

ஆறு, தயாராகுதல்: இனப்படுகொலைக்கு உள்ளாக வேண்டியவர்கள் தாம் பின்பற்றும் கலாசாரத்தினாலோ அல்லது இனத்துவத்தினாலோ அல்லது மத பிரிப்புகளாலோ அடையாளப்படுத்தப்படுவார்.

இதில் வயது, பால், சாதியம் பிரதேசம் கூட செல்வாக்குச் செலுத்தும். இனப்படுகொலை செய்யவேண்டியவர்கள் பட்டியல்படுத்தப்படுவர். அவர்கள் அடையாளப்படுத்தப்படக் கூடிய குறிகளை எவ்வேளையிலும் கொண்டிருக்குமாறு கட்டளையிடப்பட்டிருப்பார்கள். இதில் தனியாக பிரித்து முகாங்களுக்குள் அடைத்தல். மற்றும் அந்த மக்களின் வளங்களை சூறையாடுதல். அவர்கள் வாழும் பகுதிக்குள் உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் செல்லவிடாது தடுத்தல் அல்லது பஞ்சம் ஏற்படக்கூடிய விதத்திலான சூழலை உருவாக்கி அவர்களை பட்டினிச் சாவடையச் செய்தல். இது தாராளமாக இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு தனிப்பட்ட யூதக் குழுக்களை அமைத்து, எந்த பொருளும் ரபாவுக்குள்’ போகாதபடி செயல்படுத்த இஸ்ரேலிய அரசு குழுக்களை தயார் செய்து செயற்படுத்தி வருகிறது.

ஏழு, நிர்மூலமாக்குதல்: இனப்படுகொலைக்கு தயார்படுத்தப்பட்டவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படும்.

மிக வேகமாக கூட்டுக் கொலைகள் நடைபெறும். இச் செயற்பாடே இனப்படுகொலை எனப்படும்.

இதனை மேற்கொள்ள அரசுகள் தாம் தயார்செய்துள்ள இராணுவப் பிரிவுகளை மற்றும் ஆயுததாரிகளை பழிதீர்க்கும் கொலைகள் என்ற அடிப்படையில் இனப்படுகொலையை மேற்கொள்ள அனுமதிக்கும்.

எட்டு, மறுத்தல்: இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை மறுத்தல் நிகழும். அதில் ஆதாரங்களை மறைக்கும் செயற்பாடுகள் அனைத்து படுகொலையாளர்களாலும் மேற்கொள்ளப்படும். தடயங்களையும், சாட்சியங்களையும் அழித்தல். உடலங்களுக்கும், என்புகளுக்கும் தீயூட்டுதல் என்பன நிகழும். அதனுடன் அதற்கு எதிரான பிரசாரங்களும் அரங்கேற்றப்படும். குற்றச்சாட்டுக்களை ஏற்காதது மட்டுமல்லாது, விசாரணைக்கு அனுமதியாத உத்திகளை அரங்கேற்றுவர். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு இனப்படுகொலையை நியாயப்படுத்துவார்கள். இதனை ஏற்கனவே இஸ்ரேலிய அரசாங்கம் தொடங்கிவிட்டது. அது கடந்த காலத்தில் மேற்கொண்ட எந்த இனப்படுகொலைக்கும் விசாரணையையோ அல்லது தண்டனையையோ எதிர்கொள்ளாத வகையில் செயற்பட்டு வருகிறது. தற்போதும் காஸாவிலும் ரபாவிலும் நிகழ்த்தும் இனப்படுகொலைகளை மறைக்க முயலுகிறது. தடயங்களை அழிக்கிறது. ஆதாரங்கள் வெளிவராது அல்ஜசீராவை வெளியேற்ற முயலுகிறது. மேற்குறித்த அனைத்தையும் இஸ்ரேல் மட்டுமன்றி அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் கூட்டாக செயற்படுத்துகிறது. அதற்கு எந்தவித நடைமுறையும் அன்றி ஐ.நா. சபை செயல்படுத்துகிறது.

அறிக்கையும் எச்சரிக்கையும் இஸ்ரேலையோ, அல்லது அமெரிக்காவையோ பாதிக்கப் போவதில்லை. அமெரிக்கா இஸ்ரேலின் போர் உத்திகளை நெறிப்படுத்தவே பாதுகாப்புச் சபையில் வெளிநடப்புச் செய்வதும் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மௌனமாக கடத்துதல் போன்ற விடயங்களையும் மேற்கொள்கிறது.

ரபாவுக்குள் இஸ்ரேல் நுழையக்கூடாது என்பது அந்தப் போர் நீண்டகாலம் நீடிக்கும் என்பதோடு அதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் தனது தேர்தல் அரசியலை பாதிக்கும் என்பதில் கவனமாக செயற்படுகிறது.

எனவே இஸ்ரேல் நிகழ்த்துவது இனப்படுகொலை என்றும் தெரிந்து கொண்டும், அதனைத் தடுக்க முடியாது இயங்கும் ஐ.நா.சபை இனப்படுகொலைக்கு துணைபோவதாகவே தெரிகிறது. சைபிரஸ் அனுபவத்தை ஏன் ஐ.நா. ஹமாஸ்- இஸ்ரேலிய போரில் பிரயோகப்படுத்த முடியாதுள்ளது என்பது கவனத்திற்குரியது.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் ஆயுத தளபாடங்களை தற்போதும் வழங்குவதில் அக்கறையாகவே உள்ளன. இதனைத் தடுப்பதென்பது உலக நாடுகள் எவையாலும் முடியாது.

பலஸ்தீன மக்கள் முழுமையாக கொல்லப்படும் வரை உலகம் பார்த்துக் கொண்டே இருக்குமா?

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division