இருபத்தைந்தாம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை, தனது 289ஆவது (2024 ஜூன் மாத) இதழை காசிவாசி செந்திநாதையர் நூற்றாண்டு சிறப்பிதழாக 280 பக்கங்களில் வெளிக்கொணருகின்றது.
1848ஆம் ஆண்டு ஈழநாட்டில் பிறந்த காசிவாசி செந்திநாதையர், அக்காலத்துத் தமிழ்-சமய அறிஞர்கள் தம்வயம் கொண்டிருந்த அனைத்துப் புலமைகளையும், பண்புகளையும் தம்மிடம் செம்மையாகக் கொண்டு, காலத்துக்குரிய தேவைகளுடன் இயைந்து, சமயத் தொண்டாற்றிய தலைமகன்களில் ஒருவராவார். இவர் இயற்கை எய்தி 15-05-2024 அன்று ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது.
ஐயரைப் பற்றி இந்தியாவைச் சேர்ந்த ஜே. எம். நல்லசாமிபிள்ளை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“எமக்குத் தெரிந்தமட்டில், இந்த தமிழ் நாட்டில் இருமொழிகளிலும் வல்லுநராகி, அதிலும் வேத ஆகம நூல்கள் பயின்று, நம் ஆகமங்களையும் அதன் பூர்வோத்திரங்களையும் உணர்ந்து, அதிலும் அவ்வுண்மைகளை நாம் உணரும்பொருட்டு அநேக நூல்களையும் பத்திரிகைகளையும் பதிப்பித்து நம் சைவத்தை வளர்த்து வந்தவர்களில், நம் ஐயரவர்களைவிட இன்னும் பெரியாரைக் கண்டிலம்”
(ஜே. எம். நல்லசாமிபிள்ளை – சிவஞானபோத வசனாலங்காரதீப நூல் பாயிரம்)
அவர் வாழ்ந்த காலத்துக்கும், தேவைக்கும் ஏற்ப அவைதிக மத கண்டனம் செய்பவராகவும், சித்தாந்தியாகவும், வேதாந்தியாகவும், சுத்தாத்வித சைவராகவும் இயங்கிவந்த செந்திநாதையரின் செயற்பாடுகளிலும் பணிகளிலும் ‘வேத நெறியும் சைவ நெறியும் ஒரே முடிவாயுள்ளன” எனும் திடமான கொள்கை இழையோடித் தொடர்ந்து வந்துள்ளதைக் காணமுடிகின்றது. இந்தக் கொள்கை அவரின் பணிகளில் இடையிடையே மறைந்து வந்திருப்பினும் அவரின் அந்திமகாலச் செயற்பாடுகளிலும் எழுத்துக்களிலும் இது நன்கு பளிச்சிட்டுத் தெரிந்ததெனலாம்.
காசிவாசி செந்திநாதையர் நூற்றாண்டு நிறைவாக வெளிவரும் ஞானம் சஞ்சிகையின் சிறப்பிதழ், மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அவையாவன, ஐயரின் பன்னிரு கட்டுரைகள் அடங்கிய “செந்திநாதம்” எனும் பகுதி, ஐயரின் 46 படைப்புகள் குறித்த பிரசுர விபரத்தோடு, அப்படைப்புகளின் உள்ளடக்க சாரத்தையும் ஆய்வுநோக்கில் களஞ்சியப்படுத்திய “செந்திநாதக் களஞ்சியம்” எனும் பகுதி, ஐயரின் வாழ்க்கைச் சரிதம் செம்மையாக்கப்பெற்ற “செந்திநாதையர் சரிதம்” எனும் பகுதி என்பனவாம். இத்தொகுதியிலே செந்திநாதையர் பற்றிய கட்டுரைகளை பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் (கனடா), பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் ஆகியோரும் செந்திநாதையர் பற்றி பதிவுசெய்துள்ளனர்.
– ஞானம் சஞ்சிகை ஆசிரியர் குழுமம்
———-
காசிவாசி செந்திநாதையரின் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவானது வருகின்ற ஜூன் மாத 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4:45 க்கு கலாநிதி க. இரகுபரன் (தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்) தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். இவ்விழாவில் ஆசியுரையை ‘சிவாகமகலாநிதி’ சிவஸ்ரீ. கு. வை. க. வைத்தீஸ்வர குருக்களும், சிறப்புரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாதனும், கருத்துரையை, யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட முதுநிலை விரிவுரையாளர், கலாநிதி தி. செல்வமனோகரனும் ஆற்றவுள்ளனர். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் . ஈ. கணேஷ் தெய்வநாயகம் (ஈஸ்வரன் பிரதர்ஸ்) பெற்றுக்கொள்வார்.