அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் வடமாகாணம் மிகவும் முக்கியம் வாய்ந்த பிரதேசமாகும். ஜனாதிபதி ஒருவர் வடக்கிற்கு விஜயம் செய்வதாக இருந்தால் அது தென்பகுதியை கூர்ந்து அவதானிக்கச் செய்யும். மறுபக்கம் வடக்கிலுள்ள தமிழ்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடுவதும், புறக்கணிப்பதும் வாடிக்கையான விடயங்கள் எனலாம். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்கள் வேறு வெடிக்கும். எந்த ஜனாதிபதி அங்கு சென்றாலும் இந்த நிலைமை தான் இருக்கும்.
இவ்வாறான நிலைமையிலே கடந்த வார இறுதியில் ஜனாதிபதி வடக்கிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை முன்னெடுத்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடபகுதிக்கான விஜயம் பல வழிகளிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கவனிக்கத்தக்கதாகவும் அமைந்திருந்தது. மூன்று நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி வடபகுதி மக்கள் பிரதிநிதிகளையும், இளைஞர் சமூகத்தையும், சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தாயின் வருகைக்காக காத்திருக்கும் குழந்தையைப் போன்று ஜனாதிபதியின் வருகையை வடக்கு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். சில ஜனாதிபதிகளின் வருகையின்போது போராட்ட களமாக வெடிக்கும் வட மாகாணம் இம்முறை திருவிழாக் கோலம் பூண்டது என்றால் அது மிகையல்ல.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில் அவர் வடக்கிற்கு பல தடவைகள் சென்று வந்துவிட்டார். அங்கு செல்லும் போதெல்லாம் அவர் வெறுங்கையோடு சென்றதில்லை. அது மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் ஜனாதிபதி அலுவலகத்திலும் தமிழ் கட்சிகளுடன் அவ்வப்போது சந்திப்புகள் நடக்கும். வடக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டு அவற்றுக் தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும். ஆராயப்படும் விடயங்கள் தீர்க்கப்பட்டுள்ளனவா என அதிகாரிகள் முன்னிலையில் மீளாய்வு செய்யவும் ஜனாதிபதி தவறமாட்டார். சில விடயங்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டு அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
கடந்த இரண்டு வருட காலத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணி விடுவிப்பு, கடற்றொழில் சார்ந்த விடயங்கள், காணாமல் போனோர் விவகாரம், மீள்குடியேற்றம், வீடமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கைதிகள் விடுதலை என பல முக்கிய பிரச்சினைகளுக்கு குறிப்பிடத்தக்க தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அரசியலுக்காக ஜனாதிபதியை பல்வேறுவிதமாக தமிழ்க் கட்சிகள் விமர்சித்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிக கரிசனை கொண்டுள்ளார் என்பதை அவை நன்கு அறிந்தே வைத்துள்ளன. அதனால் தான் நீண்டகாலம் நீடித்த தமிழ் கைதிகளின் விடுதலை பெருமளவு தீர்ந்துள்ளது. காணி விடுவிப்பும் திருப்திப்படும் மட்டத்தில் உள்ளது.
இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாகவும் வடக்கிற்கு மிகவும் முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம். முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு சென்றார். அவரின் சூறாவளிச் சுற்றுப் பயணத்தினால் வடபகுதி புதுப்பொலிவு பெற்று பழைய மிடுக்குடன் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கும் நம்பிக்கையைப் பெற்றது.
வடக்கிற்கு காணி அதிகாரம்
தெற்கில் காணி உரித்து வழங்கும் செயற்பாடுகள் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஆண்டாண்டு காலமாக தமது சொந்த நிலத்திற்கு முழுமையான உரித்தின்றி இருந்த வடபகுதி மக்களுக்கு முதன்முறையாக, ஜனாதிபதியால் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. நீண்டநாள் கனவு நனவாகியதில் பெருமகிழ்ச்சி அடைந்த தாய்மார்களும் பாட்டன்மார்களும் கண்கள் கலங்க ஜனாதிபதிக்கு தமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க மறக்கவில்லை அம்மக்கள். வடக்கில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ள போதும் ஆளணிப் பற்றக்குறை காரணமாக நான்கு மாவட்டங்களிலும் சுமார் 3500 காணி உறுதிப் பத்திரங்கள் மாத்திரமே பகிரப்பட்டன. எதிர்வரும் காலத்தில் மேலும் 13 853 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வுகளிலும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் தமிழ்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் டலஸ் அலகப்பெருமவுக்கு வாக்களிப்பதாக பகிரங்கமாக அறிவித்து விட்டு வாக்கெடுப்பில் மறைமுகமாக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து அவரை தெரிவு செய்தமை மிகச் சரியானது என்பதை அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நன்கு உணர்ந்திருப்பர். வாக்குறுதியை மீறியது பிழையல்ல என்பது இன்று நிதர்சனமாகி வருகிறது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் அநேகமான தமிழ்க் கட்சி எம்.பிகள் ஜனாதிபதியை கடுமையாக விமர்சிப்பது தெரிந்ததே. ஜனாதிபதியை எவ்வளவு தான் விமர்சித்தாலும் வடக்கில் அவர் செய்து வரும் அளப்பரிய சேவைகளை அவர்களால் பாராட்டாமல் இருக்க முடியாது.அதனால் தான் போலும் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வுகளில் உரையாற்றிய எதிர்த்தரப்பு தமிழ் எம்.பிக்கள் பலரும் ஜனாதிபதியின் வருகையையும் அவர் அளித்து வரும் சேவைகளையும் கிலாகித்துப் பேசியிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி பங்கேற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நீண்டகாலமாக காணி உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க அவர் மறக்கவில்லை. அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கும் முயற்சிகளுக்கும், காணி அதிகாரத்துக்கான உறுதி வழங்கும் இந்த முயற்சிக்கும் அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை பாராட்டியிருந்தார்.
“யுத்த காலத்தில் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதிக்கு முன்வைத்திருந்தோம். ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் இந்தக் காணிகளை விடுக்க தொடர்ந்து முயற்சித்தார். இதில் அவருக்கு இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டது. இருந்தும் உறுதியுடன் ஜனாதிபதி இந்த பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
“வடக்கில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வு கண்டு வருகிறார். அரசியல் கைதிகள் விடுக்கப்பட்டுள்ளனர். காணமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ஆர்வமாக இருக்கிறார்” என்றும் அவர் மேடையில் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.
விநோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோரும் பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கேற்று வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
சுகாதாரத்துறையில் மறுமலர்ச்சி
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் சென்றிருந்தாலும் வடக்கில் சுகாதாரத் துறையில் இன்னும் குறைபாடுகள் இருக்கவே செய்கிறது. இந்த நிலையில் கடந்த நல்லாட்சியில் பிரதமராக இருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் சுகாதாரத்துறை முன்னேற்றத்திற்கு பல சேவைகளை அளித்திருந்தார். அதன் நீட்சியாக வடக்கின் சுகாதாரத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பல திட்டங்கள் ஜனாதிபதியின் விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டன. மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் வகையில் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக யாழ். வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றும், தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார். விரைவில் அந்தக் கனவும் நனவாக இருக்கிறது.
நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏ9 வீதியில் சுகாதார சுற்றுலாத்துறையை வளர்க்கவும் இந்த சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியினால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டடம் திறந்து வைக்கப்பட்டதோடு 46 வருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டடம் என்பதால் இது பலவழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கூற வேண்டும். இந்தத் திட்டத்திற்காக 942 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறை கட்டடம், இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பயிற்சிக்காக 1200 மாணவர்களுக்கு இடமளிப்பதுடன் சர்வதேச ஆராய்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க உதவும் என்பது விசேட அம்சமாகும்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறப்பு மகளிர் சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) கடந்த 25ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. புதிய பிரிவு வடமாகாண சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஜயமில்லை.
2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக ஆரம்பித்த மற்றொரு திட்டத்தையும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி திறந்து வைத்திருந்தார்.
மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுபநேரத்தில் திறந்து வைத்தார். நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இது என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றையும் கொண்டுள்ளது விசேட அம்சமாகும்.
நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாக இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்திருந்தார். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை நிலையங்களில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை என்பதே யதார்த்தமாகும்.
யாழ் ஆசிரியர் பாரம்பரியம் மீண்டும்…
ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தான் சிறந்த ஆசிரியர்களாக இருந்தார்கள். அந்தப் பாரம்பரியத்தை மீண்டும் ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். அதன் ஒரு அங்கமாக கடந்த வாரம் யாழ் மாவட்டத்தில் 375 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
உயர் மட்டத்தில் கல்வி பேணப்பட்டதால் தான் யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றிருந்தன. ஹார்ட்லி கல்லூரி மாணவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய வரலாற்றை நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
யாழ்ப்பாணத்தின் கல்வி முறை மீண்டும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். வடமாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி யாழ்ப்பாணத்தில் பாடசாலை முறைமையை முன்னைய சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
கல்வித்துறை முன்னேற்றம் தான் ஒரு சமூகத்தின் உயர்வில் பிரதானமான காரணி என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
இளைஞர்களுடன் கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளைஞர் யுவதிகளின் கருத்துக்களை பெறுவதிலும் அவர்களுடன் கலந்துரையாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் அநேகமான விஜயங்களில் நிச்சயம் இளைஞர்களுடான சந்திப்பொன்றுக்கு நேரம் ஒருக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இம்முறை வடக்கு விஜயத்தில் ஓர் அங்கமாக, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் அப்பிரதேச இளைஞர் யுவதிகளை சந்தித்தார் ஜனாதிபதி. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன. இதன்போது பிரதேச இளைஞர்களின் திறன்களையும் கலாசாரத் திறமைகளையும் கண்டுகளிக்கவும் அவர் தவறவில்லை. அவர்களை பாடவும் ஆடவும் ஊக்கப்படுத்தினார்.
இளைஞர் யுவுதிகளினால் தொழில்வாய்ப்பு, முதலீடு, குடிநீர்ப் பிரச்சினை,அபிவிருத்திச் செயற்பாடுகள், விவசாயத்துறை அபிவிருத்தி, சுற்றுலாத்துறை, ஏற்றுமதிப் பொருளாதாரம் என பல்வேறு விடயங்கள் பற்றி தங்குதடையின்றி ஜனாதிபதியிடம் வினவுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அவர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் சளைக்காமல் இன்முகத்துடன் பதில் கொடுத்திருந்தார் ஜனாதிபதி.
திடீர் சந்திப்பு
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் முக்கியமான வேறு சில விடயங்கள் நடத்திருந்தன. முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது. ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அந்த இரு பெண்களும் இருந்த இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டுள்ளார். ஆனால் தங்களின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் தான் முன்வைக்க வேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.
அதனையடுத்து, வடமாகாண ஆளுநரால் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய முன்வந்தார். கேப்பாப்பிலவு கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் அந்தப் பெண்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். இந்தப் பிரச்சினையை விரைவாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
மற்றொரு முக்கிய அம்சமாய் அமைந்தது சுகவீனமுற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஷ்வரனை அவரது வீட்டுக்குச் சென்று ஜனாதிபதி சந்தித்தமை. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சி.வியுடன் சில நேரம் உரையாடி அவரது உடல் நலன் குறித்து விசாரித்த ஜனாதிபதி, சில அரசியல் விடயங்கள் பற்றியும் பேசியதாக அறிய வருகிறது.
வடக்கு எம்.பிகளின் ஆதரவு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனது வடக்கு விஜயத்தின் போது யாழ்ப்பாணம், முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு சென்றிருந்தார். அவர் பங்கேற்ற நிகழ்வுகளில் அநேகமான வடமாகாண எம்.பிகள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநோ நோகராதலிங்கம், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்ற எதிரணி எம்.பிகளும் ஆளும் தரப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் போன்றோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
”இதுவரை காலமும் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் யாரும், எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை. 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் வனவள திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை, விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறிப்பாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை ஜனாதிபதி விடுவித்துள்ளார். அதலபாதளத்திற்குச் சென்ற நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டியெழுப்பியுள்ளார். அவரது கரங்களைப் பலப்படுத்தினால் இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக ஜனாதிபதி மாற்றுவார்” என பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் கூறியிருந்தார். அவரின் உரையை ஆமோதிக்கும் வகையில் சபையில் கரகோசம் வானை முட்டியது.
“2005இல் உங்கள் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வடபகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கிறேன்” என்று தமிழரசு கட்சி முக்கியஸ்தரான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி நாசுக்காக கூறியதில் இறந்த காலத்தைப் பற்றி மாத்திரமன்றி எதிர்காலம் பற்றிய சில நிஜங்களும் மறைந்துள்ளன எனலாம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு உட்பட வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒரே நபர் ரணில் விக்கிரமசிங்க தான். ஆரம்பித்த பல முன்னெடுப்புகளை பூர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அரியாசனத்தில் அவர் மீண்டும் அமர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வடக்கு மக்கள் அவருடன் கைகோர்க்க தயாரக இருக்கிறார்கள் என்பது அவர்களின் முகங்களிலும் பேச்சிலும் வெளிப்படவே செய்தது.
எம்.எஸ்.பாஹிம்