இலங்கையின் தேசிய திரவப் பெற்றோலிய வாயு வழங்குனரான லிற்ரோ காஸ் நிறுவனத்தின் சபுகஸ்கந்தை மௌபிம நவீன களஞ்சியம் மற்றும் கேஸ் நிரப்பும் வசதி என்பன புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணியாட்தொகுதியின் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய எரிவாயு முனையங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மௌபிமவில் அமைந்துள்ள இந்த வளாகம் தொடர்ச்சியான எரிவாயு விநியோகம், சேவைகள் மற்றும் செயற்பாடுகளின் மேம்பாட்டில் லிற்ரோ கேஸ் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை புலப்படுத்துகின்றது. 1984ஆம் ஆண்டு நிறுவனம் இயங்கிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மௌபிம எரிவாயு நிரப்பும் வளாகம், 40 வருடங்களின் பின்னர், சர்வதேச செயற்பாடு மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு அமைய வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. மௌபிம வளாக வசதிகள் புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல்களுக்காக ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டிருப்பதுடன், 10, 15 வருட காலத்துக்குத் தேசிய எரிவாயுத் தேவையைத் தொடர்ச்சியாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதை இது உறுதிப்படுத்தும். 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கெரவலப்பிட்டிய எரிவாயு நிரப்பும் நிலையத்தில் தங்கியிருப்பதைக் குறைத்து கெரவலப்பிட்டிய வளாகத்தின் ஊடாக சிறந்த சேவை முன்னெடுக்கப்படும்.
லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்,“வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் திரவப் பெற்றோலிய வாயு சிலிண்டரினைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தொடர்ச்சியான எரிவாயு விநியேகத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது.
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் எமது வழிகாட்டலின் கீழ் 2 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் விறகு அடுப்பிலிருந்து எரிவாயுப் பயன்பாட்டுக்கு மாறியிருப்பதுடன், இதன் ஊடாக நாட்டில் எரிவாயுப் பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்தது.” என்றார்.