- இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை தங்கியிருப்பதும், உலக அங்கீகாரம் கிடைப்பதும் அந்நாட்டில் வலுவான சட்ட அமைப்பு செயல்பட்டாலேயே என்பது சர்வதேசம்; அங்கீகரிக்கும் உண்மையாகும். தற்போதைய அரசாங்கம் சட்டத்துறையில் பல புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதுடன், ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் சுமார் 75 சட்டங்களை நிறைவேற்றி தெற்காசியாவிலேயே புதிய சட்டங்களை செயல்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளது. அந்த புதிய சட்டங்களில், 2023 இல 9 எனும் ஊழல் தடுப்புச் சட்டம் மிகவும் முக்கியமானது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விேஜயதாச ராஜபக் ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் 19 ஜூலை 2023 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான இந்தச் சட்டத்தின் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் சர்ச்சைக்குரிய வழக்குகளை வெற்றிகரமாகத் தொடர்ந்த ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான சரத் ஜயமான்னவுடனான கலந்துரையாடலே இதுவாகும்.
****
கேள்வி : இந்த சட்ட வரைவு அங்கீகரிக்கப்பட்டது நம் நாட்டுக்கு ஏன் முக்கியமானது?
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழலைத் தடுப்பது அவசியம். ஒரு நாட்டில் ஊழல் அதிகமாக இருந்தால், அந்த நாட்டில் வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்காது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அநேகமாக ஊழல் இல்லை. மேலும் வளரும் நாடுகள் கூட ஊழலைத் தடுக்கவும் குறைக்கவும் முயற்சி செய்கின்றன. குறிப்பாக ஆசிய நாடுகளில் சிங்கப்பூர், ஹொங்காங், பூட்டான் ஆகிய நாடுகள் ஊழலை ஒழித்த நாடுகளின் பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ளன. ஒரு நாடு ஊழலில் சிக்கினால் அந்த நாட்டின் வளம் பறிபோய்விடும். முதலீட்டாளர்கள் அந்த நாட்டுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். நாட்டில் வெளிப்படையான அமைப்பு இருக்கிறது என்று திருப்தி அடைந்தால்தான் டொலர்களுடன் வருவார்கள். அந்தச் சூழலை உருவாக்க ஊழலைத் தடுப்பது இன்றியமையாததாக இருந்ததால், நமது நாட்டுக்கு இத்தகைய சட்டம்; தேவைப்பட்டது.
கேள்வி : இலங்கையில் ஏற்கனவே ஊழலைத் தடுக்க சட்டம் இருக்கும் போது புதிய ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வருவதன் நோக்கம் என்ன?
1954 இல் கொண்டுவரப்பட்ட இலஞ்சச் சட்டம், 1994 இல் கொண்டுவரப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு சட்டம் மற்றும் 1975 இல் கொண்டுவரப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புச் சட்டம் அனைத்தும் இருந்தன. ஆனால் அவை எவையும் புதுப்பிக்கப்படவில்லை. கடந்த 29 ஆண்டுகளாக இந்தச் சட்டங்களில் கிட்டத்தட்ட எந்தத் திருத்தமும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் 2004இல் உலகின் பல நாடுகள் ஒன்றிணைந்து ஊழலுக்கு எதிரான மாநாட்டை உருவாக்கி அந்த நாடுகள் தங்களின் அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டன. அதன் மூலம் ஊழலைக் கட்டுப்படுத்திய நாடுகள் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை உலகில் அதிக ஊழல் உள்ள நாடுகள் பின்பற்றும் விதம் குறித்து ஐ.நா. ஆராய்ந்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் தடுப்பு சாசனத்தை அந்த நாடுகள் எவ்வாறு கடைப்பிடித்தன என்பது குறித்து ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இலங்கையை பொறுத்தமட்டில் கடந்த 10 வருடங்களில் அவர்கள் 2 அமர்வுகளை நடத்தியுள்ளனர்.
அதன்போது நம் நாட்டின் சட்டத்தில் பல குறைபாடுகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் அதுபற்றி எங்களுக்கு அறியத் தந்தார்கள். எங்களுக்கும் அந்த தேவை இருந்தது. எனவே, 2017இல் இந்த சட்டத்தை உருவாக்க திட்டமிட்டோம். 2019க்குள், நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வரைவைத் தயாரித்தோம், ஆனால் ஆட்சி மாற்றத்துடன், அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு நீதி அமைச்சர் புதிய குழுவை நியமித்தார். குழுவின் தலைவர் என்ற முறையில் இது குறித்து கருத்து தெரிவிக்க பல்வேறு தரப்பினரையும் அழைத்தேன். அப்படித்தான் இந்த சட்டம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது எங்களுக்கு முற்றிலும் அவசியமான ஒரு சட்டமாகும்.
கேள்வி : ஆனால் இந்த சட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின அல்லவா?
IMF சொல்கின்றதோ இல்லையோ, இது எங்களுக்கு இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அந்த திட்டத்தை ஆரம்பித்திருந்தோம். அவர்கள் சொன்னதால் மட்டும் நாங்கள் செய்யவில்லை. ஏனென்றால் நாங்கள் அதை ஏற்கனவே ஆரம்பித்திருந்தோம்.
கேள்வி : புதிய சட்டத்தின் சாதகமான முடிவுகளைப் பற்றி பேசினால். ?
இந்த சட்டத்தை தயாரிக்கும் போது உலகின் பிற நாடுகளில் லஞ்சத்தை எவ்வாறு ஒழித்தார்கள்? என கற்றுக்கொண்ட பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது இலஞ்ச ஆணைக்குழு மற்றுமொரு அரச நிறுவனமாக அல்லது திணைக்களமாக கருதப்பட்டதால், அது எமக்கு பெரும் சவாலாக அமைந்தது. பொது நிர்வாக அமைச்சும், திறைசேரியும் இதை அரசாங்கத்தின் மற்றொரு துறை அல்லது நிறுவனமாக மட்டுமே பார்த்தது. ஆனால், உலகில் இலஞ்சம், ஊழலை ஒழித்த நாடுகளைப் பார்க்கும் போது, ஊழல் ஆணைக்குழுவை வேறுவிதமாக கருதினார்கள். ஆணைக்குழு சுயாதீனமானது. அந்த சுதந்திரத்திற்கு, மிகவும் திறமையான விமர்சகர்கள், திறமையான நிபுணர்களை பணியமர்த்தும் திறன் இருக்க வேண்டும் மற்றும் இலங்கையில் அந்த நிபுணர்களின் முடிவை பொது நிர்வாக அமைச்சு முடிவு செய்ய முடியாது. ஏனைய நாடுகளில் அதிக சம்பளம் கொடுத்து பணியமர்த்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நமது பொது நிர்வாக அமைச்சில் பொதுப் பரீட்சையில் தேறியவர்கள் அல்லது நிர்வாக சட்டம் பற்றி அறிந்தவர் தான் பொது நிர்வாகத்தில் உயர் பதவியில் அமர்த்தப்படுகிறார், ஆனால் கணிதம் மற்றும் பகுப்பாய்வில் சிறந்த திறன் கொண்டவர்கள், நுட்பமானவர்கள் சிறந்த விமர்சகர்களாவர்கள். கோட்பாடுகளை மனப்பாடம் செய்வதைத் தாண்டிய அறிவும் நடைமுறை அறிவும் கொண்டவர்கள் திறமையான ஆய்வாளர்கள். இவ்வாறானவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அதிகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குக் கிடைத்தது, இந்தச் சட்டத்தினால்தான். அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கடுமையான நிதிப் பிரச்சினை இருந்தது. திறைசேரியிடம் பணம் கேட்கச் செல்லும்போது, அரச திணைக்களங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தைத் தருவார்கள். இந்தப் பிரச்சினைகள் புதிய சட்டத்தின் மூலம் தீர்க்கப்பட்டன.
இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான நிதித் திட்டம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, திறைசேரியைக் கலந்தாலோசித்து நிதியை ஏற்பாடு செய்வது பாராளுமன்றமே. மேலும், இதுவரை ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆணைக்குழுக்களுக்கு ஓய்வு பெற்றவர்கள் தேவையில்லை என்றும், தலைமைப் பண்பு உள்ள இளம் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் மனித நேயத்தை வளர்க்கக் கூடியவர்கள் என்றும் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மேலும், தடயவியல், கணக்காய்வு, கணக்கியல், பொறியியல், அறிவியல் தெரிந்தவர்களை ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நியமிக்கலாம். அரச அமைப்புகள் பலவீனமான வழிமுறைகளை பின்பற்றுவதால் பொதுமக்கள் குழப்பமடைகின்றார்கள் அதனால், அந்த அமைப்பை முறையாக சீர்செய்யுமாறு உத்தரவிட ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, முன்பு இருந்ததை விட தற்போது ஆணைக்குழுவுக்கு பரந்த அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய திருப்புமுனை என்று நினைக்கிறேன்.
கேள்வி : இந்தச் சட்டம் வேறு சட்டங்களில் உள்ளடக்கப்படாத பல துறைகள் தொடர்பாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது, இல்லையா?
நிச்சயமாக, இந்தச் சட்டத்தில் பாலியல் இலஞ்சம் ஒரு குற்றமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி, பாலியல் இலஞ்சம் என்பது குற்றமல்ல. அதனால்தான் அரச ஊழியர்கள் மட்டுமே இந்த தவறுகளை செய்கிறார்கள் என்று அதுவரை நினைத்தோம். ஆனால், உலகில் ஊழலை ஒழித்த சிங்கப்பூரும் 40-, 50 வருடங்களுக்கு முன்னர் இதனை ஏற்றுக்கொண்டது. அரச துறையும் தனியார் துறையும் வளர வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டது. தனியாரிடம் இலஞ்சம் வாங்குவது நாட்டின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கிறது.
அரசு ஊழியர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்து முடிவுகளை எடுக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகள் குறித்து உங்கள் சிரேஷ்ட முகாமைத்துவத்திடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அது குற்றமாகக் கருதப்படும்.
மேலும், இந்த புதிய சட்டத்தின் மூலம் முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் பொய்ச் சாட்சியங்களைக் குறைப்பதற்கும் விசாரணைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆணைக்குழுவுக்கு இப்போது அதிக அதிகாரம் கிடைத்துள்ளது.
கேள்வி : இந்த புதிய சட்டத்தில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய நபர்களின் பட்டியலில் ஜனாதிபதியும் சேர்க்கப்பட்டிருப்பது சட்டத்தின் சமத்துவத்தையும் ஜனநாயகத் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது, இல்லையா?
இந்த சட்டம் ஜனாதிபதி முதல் நாட்டின் அனைத்து அரச ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவானது. இந்த புதிய சட்டத்தில் முதன்முறையாக ஜனாதிபதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும். நிர்வாக மட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட ஒவ்வொரு அதிகாரியும் ஆண்டுக்கு ஒரு முறை சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளனர். ஒரு அரச ஊழியர் இலஞ்சம் வாங்கினால், அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். அந்த அதிகப்படியான கையிருப்பு அவர்கள் இலஞ்சம் மூலம் சம்பாதித்ததாக இந்த சட்டத்தில் ஒரு அனுமானம் உள்ளது. அந்த விசாரணைக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை ஆவணம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் வருடாந்த அறிக்கையாகும். முன்பு இவை அரசு ஊழியர்களால் கையால் எழுதப்பட்டிருந்தாலும், புதிய சட்டத்தின்படி, மின்னணு படிவம் மூலம் தகவல் புதுப்பிக்கப்படுகிறது.
கேள்வி : சர்வதேச நாணய நிதியமும் (IMF) இந்தச் சட்டத்தை அமுல்படுத்தியதற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்துக்கு இது சாதகமானதாய் அமையுமா?
கண்டிப்பாக, இந்த சட்டம் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால், தங்கள் பணத்தை விடுவிக்கலாமா வேண்டாமா என்று IMFகூட இரண்டு முறை யோசித்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த சட்டத்தை நாங்கள் முன்பே தயாரித்ததால், விரைவில் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆதரவை அரசியல் அதிகாரம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து பெற வேண்டும். குறிப்பாக, அரச நிறுவனங்களுக்கு இங்கு சிறப்பான பங்கு உண்டு.
கேள்வி : அதைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?
அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு வரும் பொதுமக்களின் தேவைகளை முறையாக நிறைவேற்றும் முறையை பின்பற்ற வேண்டும். அரச நிறுவனத்தில் திறமையான அதிகாரி இருக்க வேண்டும். தமது நிறுவனம் குறித்து பொதுமக்களுக்கு தவறான புரிதல் இருந்தால் புரியும் வகையில் நடைமுறைகளை ஏற்பாடு செய்வது அவரது கடமை. மேலும், பொதுமக்களின் துன்பங்களைக் கேட்கும் ஒருவர், அரச நிறுவனத்தில் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் அரச அதிகாரிகளை சந்திக்க வருபவர்கள் மிகக் குறைவு. அவர்கள் அனைத்து தேவைகளையும் ஒன்லைனில் நிறைவேற்றுகிறார்கள். நம் நாட்டில் அரச சேவை நிரம்பி வழிகிறது. ஆனால் பொதுமக்களுக்கு முறையாக சேவை வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அந்த நிறுவனங்களை அரசியல் அதிகாரசபை மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்பை ஏற்றால் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணம் கடினமாக இருக்காது.
கேள்வி : நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளால் வலியுறுத்தப்பட்ட ஒரு விடயம். இது தொடர்பான நடவடிக்கைகள் என்ன?
அதற்கென தனி சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான பிரேரணை தொடர்பில் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான குழு தயாரித்த அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அந்த அறிக்கை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது சட்ட வரைவுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த 3-,4 மாதங்களில் சட்டம் தயாரிக்கப்படும் என்று நினைக்கிறேன்.
கேள்வி : இந்தச் சட்டத்தின் மூலம் அண்மைக் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரியளவிலான மோசடிகள் மற்றும் ஊழல்களை வெளிக்கொணர முடிந்தது. இது ஒரு நம்பிக்கையான சூழ்நிலை, இல்லையா?
பொதுமக்கள் இதுபோன்ற பரிவர்த்தனைகளையும் ஒவ்வொரு கொள்முதல்களையும் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மேலும், தகவல் அறியும் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அமைச்சர் ஒருவர் 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை அல்லது திட்டத்தைச் செய்தால், அதைப் பற்றி ஒன்லைனில் மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு அமைச்சருக்கு உண்டு. இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தகவல் அறியும் ஆணைக்குழுவும் அதற்கான விதிமுறைகளை தயாரிக்கவில்லை. ஆனால் சட்டம் உள்ளது. எம்மிடம் இருக்கும் சட்டக் கட்டமைப்பை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கேள்வி : அதிகாரம் அதிகரிக்கும் போது ஆணைக்குழுவும் இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், அல்லவா ? அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
அதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனது முன்னேற்றம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் யாராவது முறைப்பாடு செய்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமா? நிராகரிக்கப்படுமா, நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்கள் என்ன? விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டால் அதற்கான காரணங்கள் மற்றும் புகார் தொடர்பான அனைத்து உண்மைகளையும் முறைப்பாட்டாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும், வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக தனித்தனி கருத்துகள் உள்ளன. மேலும், தனியார் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்வதில், உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் பின்பற்றும் முறைகளைப் பார்த்து எங்கள் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அத்துடன், ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் எவரும் தகவல்களைக் கோர முடியும்.
ஆனால் விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்த தகவல்கள் கொடுக்கப்படும். மேலும், ஆணைக்குழுவின் முன்னேற்றம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெரிவிக்க பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆணைக்குழுவின் பணி வெற்றிபெற பொதுமக்களின் ஆதரவும் தேவை.
கேள்வி : பொதுமக்களுக்கு அது தொடர்பில் உள்ள பொறுப்பு என்ன?
முன்னெப்போதும் இல்லாத பல அதிகாரங்களை இந்த ஆணைக்குழு பெற்றிருந்தாலும், அதனை செயல்படுத்துவதே மிகப்பெரிய சவால். அதற்கு, நிபுணர்களின் ஆதரவு, மனித வளம், அரசியல் அதிகாரத்தின் ஆதரவு மற்றும் பொதுமக்களின் ஆதரவு ஆகியவை ஆணைக்குழுவுக்கு அவசியம். குறிப்பாக இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க அரச மற்றும் தனியார் துறையினர் இனி பார்வையாளர்களாக இருக்க முடியாது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உள்ள 100-150 பேரால் மட்டும் இதனை செய்ய முடியாது. அவர்கள் தலைமை வகிக்கிறார்கள். அதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவை. அதுவே மிகவும் முக்கியமானது.
வீ.ஆர்.வயலட்