டி20 உலகக் கிண்ணத்திற்கு அனைத்து அணிகளும் இறுதிக் கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றன. எல்லா அணிகளுக்கும் இருக்கும் பொதுவான சவால், அதிகம் பரீட்சயம் இல்லாத இடத்தில் போட்டிகள் நடைபெறப்போகிறது. மேற்கிந்திய தீவுகள் தவிர, அமெரிக்காவும் போட்டிகளை நடத்துவதால் அதற்கான முன் ஏற்பாடுகள் பலமாக இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்காவில் சில மைதானங்கள் தற்காலிகமாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அவை எவ்வாறு இயங்கும் என்பது யாருக்கும் பெரிதாகத் தெரியாது. போட்டி நடைபெறும் காலத்தில் கூட வித்தியாசம், அதாவது டி20 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிப்பது அமெரிக்க நேரப்படி ஜூன் முதலாம் திகதி என்றாலும், இலங்கைக்கு அது ஜூன் 2ஆம் திகதி காலையிலேயே ஆரம்பிக்கிறது.
எப்படியோ இன்னும் இரண்டு வாரங்களின் பின் போட்டிகள் ஆரம்பமாகும். இம்முறை தொடரில் முன்னர் இல்லாத அளவுக்கு 20 அணிகள் பங்கேற்கவிருக்கும் நிலையில் பெரும்பாலான நாடுகள் தமது இறுதி அணியை அறிவித்திருக்கின்றன. இலங்கையும் சற்றுத் தாமதத்தின் பின் அணியை அறிவித்திருக்கிறது.
ஆனால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 25 பேர் கொண்ட ஆரம்ப குழாத்தை வைத்து பயிற்சி டி20 தொடர் ஒன்றை நடத்தி, அதில் சோபிப்பவர்கள், தேவையானவர்கள், குறைகளை நிரப்பக் கூடியவர்கள் என்று பார்த்துப் பார்த்து அணி தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.
சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தலைமையில் சரித் அசலங்க உபதலைவராக செயற்பட குசல் மெண்டிஸ், பத்தும் நிசங்க, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துனித் வெள்ளாலகே, துஷ்மன்த சமீர, மதீஷ பதிரண, நுவன் துஷார, டில்ஷான் மதுஷங்க இலங்கை 15 பேர் குழாத்தில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர, மேலதிக வீரர்களாக அசித்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஷ, ஜனித் லியனகே ஆகியோர் அமெரிக்கா செல்கிறார்கள்.
அணித் தேர்வு பற்றி சுருக்கமாக சொல்வதென்ற அனுபவம் மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட ஓர் கலவையாக இருப்பதோடு அதிகமான சகலதுறை வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஒருநாள் உலகக் கிண்ண அணித் தேர்வில் பெற்ற பாடத்தை அடுத்து அணியில் அனுபவ வீரர்களை சேர்ப்பதில் தேர்வாளர்கள் அதிக அவதானம் செலுத்தினார்கள். அதனாலேயே மூன்று ஆண்டுகளாக டி20 சர்வதேச போட்டிகளில் ஆடமல் இருந்த மத்தியூஸை இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறுகிய போட்டிகளில் சேர்த்துக் கொண்டார்கள்.
36 வயதான மத்தியூஸுக்கு இது ஆறாவது டி20 உலகக் கிண்ண தொடராக இருக்கப்போகிறது. 2014 இல் இலங்கை டி20 உலகக் கிண்ணத்தை வென்றபோதும் மத்தியூஸ் அந்த அணியில் முக்கிய வீரராக இருந்தார். எனவே, மத்தியூஸின் இருப்பு என்பது எல்லாவற்றுக்கு மேலாக அனுபவத்தில் அணிக்கு உதவியாக இருக்கும்.
மற்ற அனுபவ வீரர்களாக ஒருநாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் தனஞ்சய டி சில்வாவின் தேர்வு என்பது தேர்வாளர்கள் கடைசி கட்டத்தில் எடுத்த ஓர் முடிவாகத்தான் தெரிகிறது. அவரை விடவும் டி20க்கு பொருத்தமான குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பானுக்க ராஜபக்ஷ போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஒருவரும் சம காலத்தில் திறமையை வெளிப்படுத்தியவர்களாக இல்லை. குசல் பெரேரா காயத்தில் இருந்து மீண்டிருப்பதோடு கடந்த ஓர் ஆண்டில் அரைச்சதம் ஒன்றைக் கூட பெறவில்லை.
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கடந்த மார்ச் மாதம் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டபோதும் அவர் திறமையை நிரூபிக்கத் தவறியிருந்தார். பானுக்க ராஜபக்ஷவை பொறுத்தவரை அணியில் தனது இடத்தை பறிகொடுத்துவிட்டார். போட்டிகளில் திருப்பம் காட்டக்கூடியவர் என்றாலும், சர்வதேச அளவில் டி20 லீக் கிரிக்கெட்டில் ஆடுவதற்கு ஆர்வம் காட்டுவதால் தேசிய அணியில் இடத்தை பறிகொடுத்துவிட்டார்.
இப்போது அவரை அணியில் சேர்ப்பதில் தேர்வாளர்களுக்கும் குழப்பம் இருக்கிறது. என்றாலும் அவர் மேலதிக வீரராக இடம்பெற்றிருக்கிறார்.
இதில் பெரும்பாலான வீரர்களின் தேர்வு எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் சகலதுறை வீரர் துனித் வெள்ளாலகேவின் தேர்வு என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல. அவர் டி20 சர்வதேச போட்டிகளில் இதுவரை ஆடியதில்லை. என்றாலும் அவரது இடது கை சுழற்பந்து மற்றும் பின் வரிசையில் வேகமாக ஓட்டங்களை சேர்க்கக் கூடிய திறமை மற்றும் அபாரமான களத்தடுப்பு தேர்வாளர்களின் அவதானத்தை பெற்றிருக்கிறது.
என்றாலும் வெள்ளாலகே ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடி இருக்கிறார். குறிப்பாக 2023இல் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் வெளிப்படுத்திய ஆட்டம் அவரின் திறமையை நிரூபிப்பதாக உள்ளது. துடுப்பாட்ட வரிசை ஊகிக்கக் கூடியதாகவே இருக்கிறது. பத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் முதல் ஆறு இடங்களை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. சுழற்பந்து முகாம் எதிர்பார்க்கப்பட்டதே, அணித் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன முதல் தேர்வுகளாக உள்ளனர். வனிந்து தேவைப்பட்டால் துடுப்பாட்டத்தில் எந்த வரிசையிலும் களமிறங்க எதிர்பார்த்திருப்பது அவர் அணித் தலைமை பொறுப்பை ஏற்ற பின்னர் பொதுவாக பார்க்க முடியுமான அம்சமாக இருந்து வருகிறது.
வேகப்பந்து வரிசையில் போட்டி இருந்தபோதும் துஷ்மன்த சமீர ஆரம்ப வேகப்பந்து வீச்சாளராக செயற்படுவதற்கு வாய்ப்பு அதிகம், ஆனால் டில்ஷான் மதுஷங்க, மதீஷ பதிரண மற்றும் நுவன் துஷார ஆகியோர் கடும்போட்டியாளர்களாக இருப்பார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் எந்த ஒரு எதிரணியையும் எதிர்கொள்வதற்கு முடியுமான ஒரு முழுமையான அணியாகவே தெரிகிறது. ஆனால் உலகக் கிண்ண பயணம் என்பது நீண்டது, சவாலானது அதற்கு முகம்கொடுப்பதற்கு திறமைக்கு அப்பால் கால சூழல், சமயோசிதம், அதிர்ஷ்டம் எல்லாம் கூடி வர வேண்டும்.
இம்முறை உலகக் கிண்ணத்தில் டி குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை ஆரம்ப சுற்றில் பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்துடன் தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது. முதல் போட்டியே எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி பலம்மிக்க தென்னாபிக்காவை எதிர்கொள்ளப்போகிறது. பின்னர் பங்களாதேஷை ஜூன் 8 ஆம் திகதியும் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளை முறையே ஜூன் 12 மற்றும் 17 ஆம் திகதிகளிலும் எதிர்கொள்கிறது.
ஆரம்ப சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும், சுப்பர் எட்டில் தனது குழுவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்குத் தகுதி பெறும். எனவே, பயணம் நீண்டது என்பது நிச்சயம்.
எஸ்.பிர்தெளஸ்