வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா, எதிர்வரும் 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை, ராமபிரானின் அருளுடனும் சீதாபிராட்டியின் ஆசியுடனும் நடைபெற திருவருள் பாலித்துள்ளது. மேலும் எதிர்வரும் 18.05.2024 சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு இடம்பெறவுள்ளது.
சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில், ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவுள்ள சீதை அம்மன் சிலைக்கு மயூரபதி ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள், இந்தியாவில் இருந்து வருகைதந்த, சுவாமி ஸ்ரீ கோவிந் தேவ் கிரிஜி மகராஜ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றன. 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபடுகளைத் தொடர்ந்து, சீதை அம்மன் சிலை இந்தியா கோயம்புத்தூரில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட எட்டு கலசங்கள் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்காக அயோத்தி ராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் சீதை அம்மனுக்கான சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன, மயூரபதி ஆலயத்தில் இருந்து எதிர்வரும் 17.05.2024 வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. எதிர்வரும் 17.05.2024 வெள்ளிக்கிழமை காலை மயூரபதி ஆலயத்தில் இடம்பெறும் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசியல் தலைவர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா, பெளத்த மதத் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள். மயூரபதி ஆலயத்தில் காலை 7 மணிக்கு இடம்பெறும் பூஜைகளைத் தொடர்ந்து முதலாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, கொள்ளுப்பிட்டி இந்திய தூதரகம், காலி முகத்திடல் ஊடாக பிரதான வீதி, செட்டியார் தெரு, ஆமர் வீதி, அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவல, அவிசாவளை, யட்டியாந்தோட்டை, கினிகத்தேனை, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா, தவலந்தனை சந்தி ஊடாக இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தை சென்றடையும்.
18.05.2024 சனிக்கிழமை இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தில் காலை 7 மணிக்கு இடம்பெறும் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து இரண்டாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, லபுக்கலை, நுவரெலியா ஊடாக, நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தை சென்றடையும். நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள, சீதையம்மன் சிலையை மயூரபதி அம்மன் ஆலயம் வழங்கவுள்ளமைக்கான காரணம் மற்றும் கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான பூஜைப் பொருட்கள் மயூரபதி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் -(நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர்) தெளிவுபடுத்தினார்.
அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் கட்டுவதற்காக ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா’ என்னும் அறக்கட்டளை அமைக்கப்பட்டதுடன், குறித்த அறக்கட்டளை மூலம் அயோத்தி மாநகரில் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் கூடிய மிகப் பிரமாண்டமான இராமர் கோவில் 3 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
மயூரபதி ஆலயத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருப்பணி் செய்யப்பட்ட சீதையம்மன் சிலை, தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்பதுடன், குறித்த சீதையம்மன் சிலையே நுவரெலிய சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக, நுவரெலிய சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா தொடர்பான விடயங்களை அறிவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் -(நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர்) குறிப்பிட்டார்.
நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்காக இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் சரயு ஆற்றல் இருந்து புனித நீர் 25 லீற்றர் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாற்றைப் பற்றி இராமாயணம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் 19ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து சிறப்பிக்கவுள்ளார். மனித நேயத் தலைவர், ஆன்மீக குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலை பயிற்சியின் நிறுவுனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைக்கு தனி விமானம் ஊடாக வருகைதரவுள்ளார். குருஜியுடன் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான பக்தர்களும் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். மேலும்
பேராசிரியர் கலாநிதி இராம சீனிவாசன், ஸ்ரீ முகேஷ் குமார் மேஸ்வரன் (செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சு, உத்தரப்பிரதேசம்), ஸ்ரீ சந்தோஷ் குமார் சர்மா (ஆணையாளர், அயோத்தி நகர சபை) உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர் வருகை தரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படும் திருப்பதியில் இருந்து, நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக 5000 லட்டுகள் இந்திய கலாசார மையம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் அருள்மிகு பத்மாவதி தாயார் ஆகியோரின் அருள் பக்தர்களுக்கு கிடைக்கிறது. விஷ்ணுவின் அவதாரமான இராமரின் மனைவியாக சீதையை இராமாயணம் சித்தரிப்பதுடன், சீதையம்மன் லட்சுமியின் அவதாரமாக வணங்கப்படுகிறார்.
பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்டு அருள் பெறுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
உமாச்சந்திரா பிரகாஷ்