சர்வதேச அரசியல் களமானது, எத்தகைய புனிதத்தையும் கொண்டதில்லை என்பதை காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதல் மீளவும் உணர்த்தியுள்ளது. காஸாவின் தென்பகுதியான ரபா மீதான தாக்குதலை கையாளும் விதத்தில் சமாதான பேச்சுக்களும் போர் நிறுத்த உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதும், இஸ்ரேல் தொடர்ச்சியாக போரை ரபாவின் முன்னரங்குகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. பாரிய உயிரிழப்புகளும் அழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எந்த அரசினாலும் இஸ்ரேல் போரை நிறுத்த முடியாதுள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் ரபா மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்து வருகிறது. இருந்த போதும் இஸ்ரேல் போரை முன்னெடுத்துச் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இக்கட்டுரையும் இஸ்ரேல் – அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள புதிய சூழலை தேடுவதோடு உலக அரசியலின் போக்கினை அவதானிப்பதாகவும் உள்ளது.
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு சார்ந்து பலவாரங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இஸ்ரேலின் நடவடிக்கையினால் ஏறக்குறைய கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. ஹமாஸ் போராட்டக்காரரை முழுமையாக துடைத்தழிக்கும் வரையில் போர்நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை என்பதை இஸ்ரேல் தரப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் போரைத் தொடக்கிய ஹமாஸ் கெய்ரோவில் எட்டப்பட்ட போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாகவே அறிவித்துள்ளது. உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்த முயலுவதுடன் ரபா மீதான தாக்குதலை நிறுத்த பிரயத்தனம் கொண்டு செயல்படுகின்றன.
இதேநேரம் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் தொடக்கியுள்ளதாகவும், விமானத் தாக்குதலும் பீரங்கித் தாக்குதலும் இஸ்ரேலிய இராணுவத்தால் நிகழ்த்தப்படுவதாகவும் தெரியவருகிறது. ரபாவில் அமைந்துள்ள பிரதான மருத்துவமனையான அபுயூசுவ் அல்நஜாரை இலக்குவைத்துள்ள இஸ்ரேலிய இராணுவ நகர்வினால் மருத்துவர்களும் நோயாளிகளும் வெளியேறுவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பெருமளவுக்கு இந்த மருத்துவமனை மூடப்படும் அபாய நிலை காணப்படுகிறது.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள ரபா நகரத்திலிருந்து மக்கள் வெளியேறுகின்ற நிலையை காணமுடிகிறதென பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், நோயாளர்கள் மற்றும் மக்கள் எகிப்துக்குள் நுழையும் முயற்சியையும் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல் தடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பாரிய மனிதாபிமான நெருக்கடியொன்று எழுந்துள்ளது. அதனைத் தீர்க்கும் நகர்வில் ஐ.நா.சபை ஈடுபட்ட போதும் இதுவரை சாதகமான சூழல் ஏற்படவில்லை என்றே தெரிகிறது.
மறுபக்கத்தில் இஸ்ரேல்- அமெரிக்க இராணுவ ரீதியான நெருக்கடி நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன. அதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்வது அவசியமானது. அதனடிப்படையில்,
ஒன்று, தெற்கு காஸாப்பகுதியில் அமைந்துள்ள ரபா நகரத்தை இஸ்ரேல் கைப்பற்றும் நோக்கில் போரை மேற்கொண்டால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் சில ஆயுத தளபாடங்களை நிறுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இஸ்ரேலுக்கு வழங்க உடன்பட்ட ஆயுத தளபாடங்களை வழங்குவதில் காலதாமதத்தை அமெரிக்கா காட்டிவருவதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம்சாட்டிவருகிறது. போரின் வெற்றியைத் தீர்மானிப்பதில் ஆயுதங்கள் முதன்மையானவை என்பதை மறுக்க முடியாது. அதிலும் மக்கள் தொகையில் குறைந்த இராணுவத்தைக் கொண்டுள்ள இஸ்ரேலின் ஆயுததளபாடங்களும் அவற்றின் தொழில்நுட்பத் திறனுமே போரியல் வெற்றியை நிர்ணயிக்கிறது. தற்போதுள்ள போர்க்களங்கள் அனைத்துமே தொழில்நுட்ப போராகவே மாறிவருகிறது. கடலையும் ஆகாயத்தையும் ஆளில்லாத ஆயுததளபாடங்கள் நிரப்ப ஆரம்பித்துள்ளன. தரைப் போரிலும் இயந்திரங்களை ஈடுபடுத்தும் நிலை வளர்ச்சியடைந்து வருகிறது.
இரண்டு, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும் எனவும் ஜோ பைடன் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணம் இஸ்ரேல் எனும் அரசே அமெரிக்காவின் மேற்காசியா மீது கொண்டிருக்கும் ராணுவ, பொருளாதார, அரசியல் கொள்கைகளை தீர்மானிக்கும் சக்தி என்பதை தெளிவாக, அமெரிக்கா விளங்கிக் கொண்டுள்ளது. அதனால் இஸ்ரேலை முழுமையாக விட்டுக் கொடுக்கும் நிலையை அமெரிக்கா ஒரு போதும் முன்னெடுக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எவ்வாறாயின் ஏன் தற்போது இத்தகைய எச்சரிக்கைகளை அமெரிக்கா முன்வைக்கிறது என்பதே பிரதான கேள்வியாகும்.
2024இல் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஒரு முக்கிய காரணியாக அமைய வாய்ப்புள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களது பலஸ்தீனத்திற்கு ஆதரவான தொடர்ச்சியான போராட்டங்கள் அதிக நெருக்கடியை ஆளும் தரப்புக்கு ஏற்படுத்தக் கூடியது. அதனால் அத்தகைய நெருக்கடியை கையாளுவதாகவே ஜோ பைடனின் நகர்வு தெரிகிறது.
அதற்கான ஆதாரம் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நிகழ்த்தக் கூடாது என்பது பைடனின் அறிக்கையின் சாரமாக உள்ளது. அப்படியாயின் விமானத் தாக்குதலையும் பீரங்கித் தாக்குதலையும் இஸ்ரேல் நிகழ்த்த அமெரிக்கா அனுமதித்துள்ளது போலவே, பைடனின் அறிவிப்பு உள்ளது. இது ஒருவகையில் இஸ்ரேலியரைத் திருப்திப்படுத்துவதாகவே உள்ளது. அடுத்து சில ஆயுத தளபாடங்களை வழங்காது என்பதும், பைடனின் அறிக்கையின் உள்ளடக்கம். மேலும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கான ஆயுத தளபாடங்களை அமெரிக்கா வழங்கும் என்பதும் இன்னோர் தகவலாகும். அவ்வாறாயின் இஸ்ரேலியருக்கு தேவையான ஆயுததளபாடங்களை அமெரிக்கா வழங்காத நிலை ஒன்று இல்லை என்பதே அதன் சாரம்சமாகும். இதனையே மேற்குலக ஊடகங்கள் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டால், அமெரிக்கா ஆயுததளபாடங்களை இஸ்ரேலுக்கு வழங்காது என்ற பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இது ஒரு பிரசார உத்தி மட்டுமே. உலக நாடுகளையும் சர்வதேச நிறுவனங்களையும் ஏமாற்றுகின்ற நகர்வாகவே தெரிகிறது. ஆனால் முழுமையாக அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாக்கின்றது. அதற்கான ஆயுததளபாட விநியோகத்தை என்றுமே கைவிடவில்லை. மாறாக கைவிட்டதாக பிரசாரப்படுத்துகிறது. காஸா மீதான போரை மேற்குலகமும் இஸ்ரேலும் கூட்டாக நிகழ்த்துகின்றன. மேற்குலகத்திற்கு தலைமைதாங்கும் அமெரிக்காவே இஸ்ரேலியப் போரிலும் தலைமைச் சக்தியாக விளங்ககிறது. அமெரிக்காவிடமுள்ள நெருக்கடி, அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமல்ல. ரபா மீதான தாக்குதல் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது. அத்தகைய அழிவுகளின் விளைவுகள் அமெரிக்காவை பாதிக்காத வகையிலும், இஸ்ரேலியரது பாதுகாப்புக்கான போராக வடிவமைப்பதிலும் அமெரிக்கா கவனமாக உள்ளது. அதனாலேயே ஆயுததளபாடங்களை மையப்படுத்தி உரையாடுகிறது.
இஸ்ரேல் இனப்படுகொலையை மேற்கொள்ளும் நாடு என்பதை பகிரங்கப்படுத்தும் நிலையில் அமெரிக்கா இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுவது அவசியமானது. ரஷ்யாவும் புட்டினும் இனப்படுகொலையை உக்ரைனில் மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் ஐ.நா.சபையில் கொண்டுவரப்படும் போது மட்டும், வெளிநடப்புச் செய்வதோடு அவற்றை ஒர் இராஜதந்திர முயற்சியாகவே கருதும் நிலையை ஏற்படுத்த முயலுகிறது.
இவ்வாறு நெருக்கடியை இஸ்ரேலுக்கு வழங்குவதன் மூலம் இஸ்ரேலை சமாதான வழிக்குக் கொண்டுவர முடியுமென பொய்ப் பிரசாரத்தை அமெரிக்கா முன்னெடுத்துவருகிறது. இத்தகைய பிரசாரத்தின் மூலம் இஸ்ரேலின் இலக்குகளை நிலைப்படுத்தவும், அதன் தீவிரத்தை மட்டுப்படுத்தி இலக்கை அடையவும் அமெரிக்கா திட்டமிடுகிறது.
ஹமாஸ்- இஸ்ரேலியப் போர் மூலம், உலக ஒழுங்கை மீளமைக்கவும் மேற்காசிய அரசியலை மேற்குலகத்திற்கு சார்பாக நிலைநிறுத்தவும், எதிரிநாடுகளை பலவீனப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிடுகிறது. போரில் தனது நேரடி ஈடுபாட்டைத் தவிர்த்துக் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல்,- உக்ரைன் போரை நிகழ்த்துகின்ற நாடாகவே விளங்குகிறது. இரு போர்களிலும் மறைமுகமாக ஈடுபடும் அமெரிக்கா, ரஷ்யாவையும், ஈரானையும் தாக்குதல் வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது. இதில் விலகியிருக்கும் சீனாவை ஏதோவொரு களத்தில் நிறுத்த முயன்ற போதும் சீனா அதற்கான வாய்ப்புகளை வெற்றிகரமாக முறியடித்துவருகிறது. ஆனாலும் சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பது தவிர்க்க முடியாத விடயமாகவே உள்ளது. முழுமையாக அவதானித்தால் அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் பலம் மீளவும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும் போர்க்களமாக இஸ்ரேல்- ஹமாஸ் பேர் அமைந்துள்ளது.
எனவே, அமெரிக்கா இஸ்ரேல் இராணுவ உறவிலேயே இஸ்ரேலின் பலம் தங்கியுள்ளது. இஸ்ரேல் நவீன ஆயுததளபாடங்களைக் கொண்டிருந்தாலும் அதற்கான தொழில்நுட்ப பலம் இஸ்ரேலிடம் இருந்தாலும், தாக்குதலின் நீட்சி முழுநீளப் போர்களிலும், அமெரிக்காவின் ஆயுததளபாடங்கள் அல்லது மேற்குலகத்தின் ஆயுததளபாடங்கள் தவிர்க்க முடியாத தேவையாக இஸ்ரேலுக்கு உள்ளது. ஈரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்ட விதம் அவ்வகையான கூட்டு எதிர்த்தாக்குதலின் வடிவமாகவே அமைந்திருந்தது. அத்தகைய கூட்டுச் சக்திகளின் முயற்சியே இஸ்ரேலின் வெற்றியாகும். இதனை ஒழுங்கமைப்பதில் அமெரிக்கா காட்டும் அக்கறையே இஸ்ரேலிய- அமெரிக்க உறவாகும்.
ஆயுததளபாடங்களை வழங்குவதில்லை என்ற ஜோ பைடனின் அறிவிப்பு ஒரு பிரசாரமே அன்றி உண்மைத்தன்மை கொண்டதல்ல. அதனையே இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சும், இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளரும் தெரியப்படுத்தியுள்ளனர். அதாவது இருநாட்டுக்குமான உறவை சரிப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேலியப் பிரதமர், தனித்து இஸ்ரேல் போரில் செயல்படவும் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதே வாதம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இரு தரப்பாலும் பரஸ்பரம் உரையாடப்பட்ட வாதமேயாகும். இது போர்க்களத்திற்கான அரசியல் உத்தியாகவே உள்ளது.