கடந்த வாரம் துபாய் நகரின் முக்கிய பகுதிகளை சுற்றித் திரிந்தது ஒரு கூட்டம். யார் இவர்கள், எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? அவர்கள் நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் என்பதை அவர்களில் பெரும்பாலானவர்களின் தலையிலும் முகத்திலும் சிலிர்த்துக் கொண்டிருந்த நரை முடிகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும் அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களின் செயற்பாடுகள், வாழ்வியல் இன்ப துன்பங்களை அறியாத பாடசாலை பருவ மாணவர்களைப் போன்றே காண்பவர் கண்களுக்கு காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன. ஆம், இவர்களும் பாடசாலை மாணவர்கள்தான், 1998ஆம் ஆண்டு வரையில் கொழும்பு இந்துக் கல்லூரியில் பாடசாலை மாணவர்களாக – கைகளில் புத்தகத்தையும் எதிர்காலம் பற்றிய கற்பனைகளையும் சுமந்து வலம் வந்தவர்கள்.
இப்போது, 26 வருடங்களுக்குப் பின்னர், தங்களின் 45 ஆவது பிறந்த ஆண்டை ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்வதற்காக துபாய் நகரில் ஒன்று கூடினார்கள்.
இந்த மீள் இணைவிற்காக சுமார் 13 நாடுகளில் இருந்து சுமார் 78 மாணவர்கள் துபாய் நகரிற்கு சென்றிருந்தனர்.
லெஜன்ட்ஸ்1979 எனும் மகுடத்துடன் 3 நாட்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களையும் சேர்த்து 5 நாட்கள், கொழும்பு இந்துக் கல்லூரியின் 98ஆம் ஆண்டு பிரிவு பழைய மாணவர்கள் துபாய் நகரில் தங்களின் இனிமையான நினைவுகளையும் இளமையினையும் மீட்டுக் கொண்டனர் என்றே சொல்லலாம்.
கடந்த 1 ஆம் திகதி இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் இருந்து துபாய் நகரை சென்றடைந்த குழுவினர், அன்றிரவே மிதக்கும் படகில் தங்களின் ஒத்திகையை ஆரம்பித்தனர்.
துபாய் வர்த்தக நகரின் இதயம் என்று வர்ணிக்கப்படுகின்ற டுபாய் மரீனா பகுதியை ஊடறுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஏரியில் படகுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரவு உணவுடன் கூடிய படகுப் பயணத்திற்கு புறப்பட்ட இந்துவின் மைந்தர்கள் குழுவினர், பாரசீக கலாசார ஆடைகளின் ஒரு அங்கமான தலைப் பாகையை அணிந்து தமக்கு வித்தியாசமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
துபாய் நகரத்தின் ரம்மியத்தினையும் கட்டடக்கலையின் பிரமாண்டத்தையும் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையில், கால்வாய் ஊடாக படகுப் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 3 மணித்தியாலங்கள் படகுப் பயணத்தின் மூலம் துபாய் நகரின் அழகை முழுமையாக ரசிக்கும் வகையில் படகுப் பயணத்தை திட்டமிட்டு வைத்துள்ளார்கள்.
எத்தனையோ ஏரிகளும் கால்வாய்களும் இயற்கை அளித்த வரங்களாக எம்மை சுற்றியிருக்கின்றன. அவையெல்லாம் பராமரிப்பற்ற பிரதேசங்களாகவும், குப்பை கழிவுகளை கொட்டும் இடங்களாகவுமே அவற்றில் பல எம்மால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவர்கள் செயற்கை கால்வாய்யை அமைத்து, அதனை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாராமரிக்கிறார்கள். இதுதான் அவர்களுக்கும் எமக்குமான வித்தியாசம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.
இரண்டாவது நாள், அதாவது மே 2 ஆம் திகதி, துபாய் நகரை சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விசேடமாக வடிவமைக்கப்பட்ட லெஜன்ட்ஸ்1979 ரீசேர்டை அணிந்து கொண்ட இந்துவின் மைந்தர்கள், டுபாய் பிறேம் எனப்படும் அந்த நாட்டின் கலாசார அடையாளங்களுள் ஒன்றை பார்வையிட்டனர். சுமார் 150 மீற்றர் உயரமான குறித்த வடிவமைப்பு, பண்டைய துபாய் தேசத்தையும் நவீன துபாயையும் பிரதிபலிக்கும் வகையிலும், அவர்களின் பாரம்பரிய கட்டடக்கலை அம்சங்களை நினைவுறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்ட குறித்த வடிவமைப்பின் மேற்பாகத்தில் 18 கரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அதைத் தொடர்ந்து உலகின் பிரமாண்ட வர்த்தக அங்காடியாக அறியப்பட்டுள்ள டுபாய் மோல், 2716.5 அடி உயரமான பூர்ஜ்ஹாலீபா கோபுரம், டுபாயின் அருங் காட்சியகம் போன்றவற்றினுள் சுற்றித் திரிந்த இந்துவின் மைந்தர் கூட்டம், Future museum எனப்படும் நவீன அருங்காட்டியகத்தினையும் தங்களின் கண்களினால் துலாவியது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி உலகத்தின் இயங்கியலை ஒவ்வொரு கணமும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்கால உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த Future museum வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. துபாயின் கட்டடகலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கற்பனையும் எதிர்பார்ப்புக்களும் இந்த அருங்காட்சியகத்தின் படைப்புக்களை மெருகேற்றுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு துபாய் நகரை சுற்றி வலம் வந்த, இந்துவின் மைந்தர்களின் அன்றைய பொழுது, தமது அன்பிற்குரிய குடும்ப உறவுகளை மகிழ்விக்கும் வகையிலான பொருட்களை கொள்வனவு செய்தனர்.
மறுநாள், அதாவது மே 3 ஆம் திகதி, துபாய் பாலைவனத்தை நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திட்டமிட்டபடி அமீரகத்தி பாலைவனத்தில், தமிழர் கலாசார அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், இந்துவின் மைந்தர்கள் அனைவருமே தமிழ் மக்களின் கலாசார அடையான வேட்டி அணிந்து கம்பீரமாக காட்சியளித்தனர்.
பாலைவனத்திற்கான பயணம் என்பது திகில் நிறைந்ததாக இருக்கும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாழ்க்கை பயணத்தில் எத்தனை எத்தனையோ கரடு முரடான பாதைகளையும் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொண்டு நெஞ்சுரம் பெற்றிருந்த இந்துவின் மைந்தர்களை பாலைவனப் பயணம் பெரிதாக அசர வைக்கவில்லை என்பதை உணரக்கூடியதாக இருந்தது.
பாலைவனத்தின் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வண்டிப் பயணம் மற்றும் ஒட்டகப் பயணம் போன்றவற்றை தொடர்ந்து, இரண்டு வகையான விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று ருசிப்பதற்கானது, மற்றையது ரசிப்பதற்கானது.
மே 4 ஆம் திகதி, இறுதி நிகழ்வாக இரவு விருந்தும் பிறந்த நாள் கேக் வெட்டும் சம்பிரதாய நிகழ்வும் நிகழ்ச்சி நிரலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரவு விருந்து எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது இறுதிவரையில் இரகசியமாக பாதுகாக்கப்பட்டது.
இரவு விருந்து ஏற்பாடு செய்யபட்ட இடத்திற்கு செல்வதற்காக இந்துவின் மைந்தர்கள் கூட்டத்தினரை ஏற்றிக் கொண்ட பேரூந்துகள், துபாய் நகரை அண்மித்தாக அமைந்துள்ள கிறீக் துறைமுகத்தினை சென்றடைந்தனர்.
துறைமுகத்தில் தரித்து நின்ற சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு படகில் ஏறியபோதுதான், நிகழ்வின் பிரதான ஒருங்கிணைப்பாளர் சிவமயூரனால் உண்மை வெளிப்படுத்தப்பட்டது.
துபாய் நகரில் வர்த்தக முயற்சியில் கால்பதித்திருக்கும் சக நண்பர்களில் ஒருவனான சசிக்குமாரின் விருப்பத்தினால், அவனின் ஏற்பாட்டிலேயே, பிரதான விருந்து சொகுசு சுற்றுலாப் படகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக 45 ஆவது பிறந்த தினக் கேக் வெட்டப்பட்டதுடன், இலங்கை பாடசாலைகளின் வரலாற்றிலேயே, ‘பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் பிரிவு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட நிகழ்வு‘ என்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பிரமாண்ட நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த, பிரதான ஒருங்கிணைப்பாளர் சிவமயூரன் தலைமையிலான ஒருங்கிணைப்பாளர்கள் கௌரவிக்கடப்பட்டதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கருத்துக்களும் முன்வக்கப்பட்டன.
இந்த மீள் இணைவின் மூலம் நட்பின் மகிமையை பட்டை தீட்டிக் கொண்டதுடன் உலகிற்கு முன்மாதிரியாகவும் நிமிர்ந்து நிற்கின்றனர்.
தொகுப்பு:- ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்...?