உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லக்கூடிய ஒரு இடமாக பதுளை நகரம் காணப்படுகின்றது. பதுளை மாவட்டம் இலங்கை சுற்றுலா தலங்களில் முக்கியமானதென்றால் அது மிகையாகாது.
அப்பேர்ப்பட்ட இயற்கை அழகு நிறைந்த பதுளை நகர மக்கள் அதன் முறையற்ற சுகாதார சேவைகளால் இன்று பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
ஆம். பதுளை நகரில் தேயிலைத் தோட்டப்புறத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் சுத்தமான குடி நீருக்காகவும் அடிப்படை சுகாதார வசதிகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றன. இடப் பிரச்சினை, கழிவகற்றல் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளை இம் மக்கள் அனுதினமும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்காலம் எமது கரங்களில் (FIOH) மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) போன்ற அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இது போன்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சேர்க்கவும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன.
அதன்படி, பதுளை மாநகரசபை எல்லைக்குட்பட்ட கிராம பிரிவுகளான கறுபெலெல்ல, கட்டுபெலல்ல, இந்தகொட, பதுலுபிட்டிய மற்றும் சும்மனதிஸ்ஸகம உட்பட பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணப்படும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்துடன் (CEJ) இணைந்து, எதிர்காலம் எமது கரங்களில் (FIOH) என்ற அமைப்பு இவற்றை ஊடகங்களின் கவனத்துக்குகொண்டு வந்தது.
இவ்விடயம் தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த, FIOH அமைப்பின் செயற்றிட்ட முகாமையாளர் சுப்ரமணியம் தவசீலன்,
பதுளை மாவட்டத்தில் கழிவறையின்றியிருக்கும் நூற்றுக்கு 05 சதவீதமானவர்கள், நீரோடைகளில் மலசலம் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், சுற்றுப் புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. அத்துடன், தோட்டப்புற பகுதிகளிலுள்ள பல குடும்பங்கள் ஒரே கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந் நாட்டில் இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் சில தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய சுகாதார வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய தவசீலன், பெரும்பாலான மக்கள் தூய்மையான சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு இன்றி அலட்சியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இம் மக்களுக்கான சுகாதார வசதிகளை உருவாக்கிக் கொடுப்பது மட்டுமன்றி, தொடர்ந்து நிலவி வரும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அதனை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதே தமது நோக்கம் என தவசீலன் தெரிவித்தார்.
இதனையடுத்து, பதுளை நகரில் நிலவும் சுகாதார பிரச்சினைகளை ஆராய்வதற்காக, பதுலுபிட்டிய பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது, சில குடியிருப்பாளர்கள் தமது வீட்டு மலசல கழிவுகளை முறையாக அகற்றாது, அவற்றை வீடுகளுக்கு அருகிலுள்ள வடிகான்களில் திறந்துவிடுவதாக அப் பகுதி வாழ் மக்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த வடிகான், பதுலு ஓயாவை சென்றடைந்து மகாவலி ஆற்றின் துணை ஆறுடன் கலப்பதனால் நீர் மாசுப்படுவதுடன், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.
இவ் விடயம் தொடர்பாக விஹாரகொட பிரதேசத்தைச் சேர்ந்த எல்.எச்.பிரேமசிறி என்ற பொதுமகன் ஒருவர் கூறுகையில்,
தர்மதுதா கல்லூரியின் மைதானத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகிலுள்ள வடிகான் அமைப்பு கழிவுநீரால் மாசுபட்டுள்ளதாகவும், இந்த வடிகானை முறையாக சீரமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, பதுளை நகர சபையினால் மலசல கழிவுகளை அகற்றுவதற்கான சேவைகள் வழங்கப்படுகின்றபோதிலும் அதனை பயன்படுத்தாது மக்கள் பொது வடிகான்களில் மலசல கழிவுகளை திறந்துவிடுவதாக அப் பகுதி வாழ் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
கழிவுகளை அகற்றுவதற்காக கழிவகற்றல் சேவையைப் பெற (கல்லி பௌசர்) 7,500 ரூபாய் செலவிடவேண்டியுள்ளதாகவும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டு கழிவுநீரை பிரதான வடிகானுடன் சட்டவிரோதமாக இணைப்பதன் மூலம் அச் செலவைத் தவிர்த்து வருவதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு, தமது வீட்டு கழிவுநீரை, மழைக் காலங்களில் மண்ணெண்ணையை கலந்து பொது வடிகான்களில் திறந்து விடுகின்றமையினால், தமது வீடுகளுக்குள் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் உணவைக்கூட உண்ண முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பாக பதுளை மாநகர சபைக்குச் சென்று ஆராய்ந்தோம்.
இதன்போது, பதுளையைச் சுற்றியுள்ள பொது மற்றும் தனியார் அமைப்புகளிலிருந்து கழிவுநீரை சேகரிப்பு தொடர்பாகவும் கழிவு நீர் சுத்திகரிப்பு செயன்முறை தொடர்பாகவும் பதுளை மாநகர சபையின் பொறியியலாளர் செந்தூர் குமார் விளக்கினார்.
இங்கு ஒரு நாளைக்கு சுமார் 50 கன மீற்றர் வரையான கழிவு நீரை சுத்திகரிக்க முடியும். எனினும் தற்போது 30 கன மீற்றர் வரையான கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகின்றது.
பதுளையை பொறுத்தவரையில், கழிவுநீர் குழாய் வசதி இன்மையால், நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் கழிவு நீர்க் குழாய் நிறுவுவதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக ஆராய்ந்து வருவதாக செந்தூர் குமார் குறிப்பிட்டார்.
மேலும், மலசல கழிவகற்றும் வாகனத்தின் (gully bowser) சேவையைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, தனியார் குடியிருப்பாளர்களுக்கான கட்டணத்தை 5,500 ரூபாவாக நகராட்சி மன்றம் குறைத்துள்ளதாகவும் செந்தூர் குமார் குறிப்பிட்டார்.
இதேவேளை, பதுளை மாநகர சபையின் தலைமை சுகாதார பரிசோதகர் எம்.வி.திலக்சிறி (PHI) கருத்து தெரிவிக்கையில்,
சில குடியிருப்பாளர்கள், தமது வீட்டு மலசல கழிவுகளை கான்களுக்கு நேரடியாக அனுப்புகின்றார்கள். சிலர், மழைக்காலங்களில் மண்ணெண்ணைய் கலந்து வீ்ட்டுக்கருகிலுள்ள வடிகான்களில் மலசல கழிவுகளை திறந்து விடுகின்றனர்.
இதனால் சூழல் பெரிதும் பாதிப்படைகின்றது. இந்த கழிவு நீர் ஆறுகளுடன் கலப்பதனால் பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன.
அடைமழை பெய்யும் நேரங்களிலேயே இவ்வாறு கழிவுகளை திறந்து விடுகின்றனர். இதன்போது எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றாலும் அச் சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு கடினமாகவே இருக்கும்.
இவற்றை தவிர்ப்பதற்காக நாம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதன்படி பதுளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் வருடத்துக்கு கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன.
சுமார், 54 ஆயிரம் பேர் வாழ்கின்ற பதுளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில், மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். எமது சேவையும் முழுமையாக வழங்கப்படுகின்றது என எம்.வி.திலக்சிறி (PHI) தெரவித்தார்.
இதனைதொடர்ந்து, ஹாலி-எல குயின்ஸ்டவுன் தோட்டத்திற்கு நாம் பயணித்தோம்.
இதன்போது, அத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மோசமான சுகாதார நிலைமைகள் தொடர்பாக அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக இத் தோட்டத் தில் வாழும் மக்களுக்காக கட்டப்பட்ட வைத்தியசாலையொன்று பாழடைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்தத் தோட்ட வைத்தியசாலை, இதற்கு முன்னர் சுமார் 05 வருடங்க ளாக மூடப்பட்டிருந்ததாகவும், பின்னர் வாரம் மூன்று நாட்களென அரச வைத் தியசாலையிலிருந்து வைத்தியர் ஒருவர் வந்து சென்றதாகவும் தெரிவித்த தோட்ட மக்கள், தற்போது இரண்டு வருடங்களாக வைத்தியசாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தாம் வைத்திய சேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், 05 கிலோமீற்றர் வரை பயணித்து நகரை நோக்கி செல்ல வேண்டும் எனவும் அம் மக்கள் கவலை வெளியிட்டனர். முச்சக்கரவண்டியில் பயணித்தால், 400 ரூபாவிலிருந்து 600 ரூபா வரை செலவாகும் எனவும் குயின்ஸ்டோன் தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஒரு மலசல கூடத்தை இரண்டு கும்பங்கள் பாவிப்பதாக, தோட்டத் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.
தமது 1,350 ரூபா சம்பளம் குறித்து கவலை தெரிவித்த அவர், 25 நாட்கள் வேலைக்குச் சென்றால் மாத்திரமே 1,350 ரூபா என்ற அடிப்படை சம்பளம் கிடைக்கும் எனவும், அதற்கு குறைவான நாட்கள் வேலை செய்தால் வெறுமனே 900 ரூபா மாத்திரமே சம்பளமாக கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு உரிய சுகாதார வசதிகள் கிடைக்காமையால், சுகாதாரம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காயத்ரி சுரேஷ்