நூலறிமுகம்
நூலின் பெயர் : மௌனம் கலைத்த சினிமா
நூலாசிரியர்: சோழ நாகராஜன்
வெளியீடு: த இந்து குழுமம்
தமிழ்திசை
தமிழகம்
ஒரு மக்கள் திரளின், ஒரு மொழியின் பண்பாட்டின் வளர்ச்சியானது, நவீன யுகத்துக்குள் நுழைந்ததை பறைசாற்றும் சாதனமாக அந்த மொழியில் சினிமாவின் தோற்றத்தையே அளவீடாகச் சொல்வர். அப்படித்தான் உலகின் பல மொழிகளிலும் பேசாப்பட யுகம் தொடங்கி பேசும் படங்களின் ஊடாக அந்த நவீன யுகப்பிரவேசங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் சினிமா மேதை சத்யஜித் ரே, ‘ சினிமாவின் பண்புக்கூறாக இயக்கம் என்பதைச் சொல்வதைக் காட்டிலும் வளர்ச்சி என்ற சொல்லையே பயன்படுத்துவேன். ஒரு மனிதனின் அல்லது சூழ்நிலையின் வளர்ச்சியை வெளியிடுவதற்கு சினிமா மிக உன்னதமான வல்லமை பெற்றது’ எனச் சொன்னார்.
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் இந்நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அது தான் உண்மையும் கூட. இன்றைய உலகில் பலமிக்க சக்திகளில் ஒன்றாக வளர்ச்சி பெற்றுள்ள சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, அதன் செல்வாக்கை இந்நூல் தெளிவுபடுத்தக்கூடியதாக உள்ளது.
இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அதனால் ஒவ்வொரு நிலத்தின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ள நூலாசிரியர், அந்தந்த மொழியின் வரலாறு, அது பேசப்படும் மக்களின் பண்பாட்டுச் சூழல், பிராந்திய மொழி, சினிமாவின் பாதைக்கு அது அடித்தளமிட்ட பின்னணி என அடுக்கடுக்கான விஷயங்களை ஆற்றொழுக்காக குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் உலகின் முதலாவது பேசாப்படம், இந்தியாவின் பேசாப்படம் என திரைப்பட வரலாற்றை எடுத்துக்கூறக் கூடியதாக இந்நூல் அமைந்துள்ளது.
அதேநேரம் இந்து தமிழ் திசை ஆசிரியர் கே. அசோகன், ‘பேசும் சித்திரங்களின் வரலாறு’ என்ற தலைப்பில் இந்நூலுக்கு எழுதியுள்ள குறிப்பில், ‘காட்சி ஊடகத்தின் உச்சமாக உலகுக்கு வாய்த்த கலை வடிவம் தான் சினிமா.
மனிதனின் குழந்தைப் பருவத்தைப் போலவே, தொடக்கத்தில் பேச்சுக்கள் இல்லாமல் மெல்ல மெல்ல வளர்ந்த திரைப்படக் கலை, தொழில்நுட்ப பாய்ச்சல்கள், திரைக்கலைஞர்களின் முயற்சிகள் மூலம் ஒரு கட்டத்தில் வாய் திறந்து பேசத் தொடங்கியது.
பேசாப்படங்கள் வெளிவந்த காலத்திலேயே பல அசாத்திய முயற்சிகளும், காவியப் படைப்புகளும் சாத்தியமாகின’ என்றுள்ளார்.
இதழியல் துறையில் முக்கிய பகுதியாக விளங்கும் சினிமாவின் வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் செல்வாக்கையும் தெளிவுபடுத்தும் இந்நூல் 25 அத்தியாயங்களில் 128 பக்கங்களில் கைக்கு அடக்கமானதாக இலகு மொழி நடையில் வெளியாகியுள்ளது. அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட முகப்பு அட்டைப் படத்தை தாங்கி வெளியாகியுள்ள இந்நூலை எவரும் படித்து பயன்பெறலாம்.
மர்லின் மரிக்கார்