Home » ‘சரியான போட்டி’

‘சரியான போட்டி’

by Damith Pushpika
January 26, 2025 6:00 am 0 comment

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த 2023–2025 உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தின் கடைசி தொடராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. என்றாலும் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் 11 தொடக்கம் 15 ஆம் திகதி வரை நடைபெறப்போகும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான அணிகள் ஏற்கனவே தெரிவாகி இருக்கும் நிலையில் இந்தத் தொடர் அந்த வகையில் பார்த்தால் உதிரி ஆட்டம் தான்.

சொந்த மண்ணில் ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை 3–1 என மண்டியிடச் செய்த அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணிக்கு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதைத் தவிர வேறு எந்த அழுத்ததும் இல்லை.

எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் ஆரம்பமாகிறது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6 தொடக்கம் 10 வரை நடைபெறும். இரு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறப்போகிறது. இதுவே அவுஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரில் பிரத்தியேகமாக அவதானம் செலுத்துவதற்கு காரணம்.

இலங்கை வருவதற்கு முன்னர் டுபாய் சென்றிருக்கும் ஆஸி. டெஸ்ட் குழாம் அங்கே ஒரு வாரத்துக்கு மேல் பயிற்சி பெற்றுவிட்டே இலங்கை வருகிறது. டுபாயில் இருக்கும் ஐ.சி.சி. அகடமி வளாகத்தில் இலங்கை ஆடுகளத்துக்கு ஒப்பான பத்து ஆடுகளங்களை தயாரித்து அதிலே ஆஸி. வீரர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.

அதாவது இலங்கையில் அதுவும் காலி ஆடு களத்தின் சுழற்பந்துக்கு சாதகமான சூழலை எதிர்கொள்வதற்கே அவுஸ்திரேலிய அணியினர் இப்படி விசேட பயிற்சிகளை பெறுகிறார்கள். இலங்கை வரும் அவுஸ்திரேலிய குழாத்தை பார்த்தோம் என்றால் நதன் லியோன் உட்பட சுழற்பந்து வீசக்கூடிய ஆறு வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்.

நிரந்தர அணித் தலைவர் பட் கமின்ஸ் இல்லாதபோதும் அனுபவ வீரரான ஸ்டீவன் ஸ்மித் அணியை வழி நடத்தவுள்ளார். அண்மையில் நடந்த பிக் பாஷ் லீக் தொடரில் முழங்கையில் உபாதைக்கு உள்ளானதற்கு என்ன, அவருக்கு போட்டிகளில் ஆட முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுவிட்டார்கள். எனவே ஸ்மித்தின் பங்கேற்பு நிச்சயமாகிவிட்டது.

ஸ்மித்துக்கு இந்த டெஸ்ட் தொடர் தனிப்பட்ட முறையிலும் முக்கிமானது. ஏனென்றால் அவர் தற்போது 9999 டெஸ்ட் ஓட்டங்களுடன் இருப்பதோடு 10,000 ஓட்டங்களுக்கு தேவைப்படுவது இன்னும் ஒரே ஒரு ஓட்டம் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் என்பது முக்கியமான சாதனை. ஒட்டுமொத்தமாக டெஸ்ட் வரலாற்றிலும் இதுவரை 14 வீரர்கள் தான் 10,000 ஓட்டங்களை தாண்டி இருக்கிறார்கள். அதிலும் அவுஸ்திரேலிய வீரர்கள் என்று பார்த்தால் ரிக்கி பொண்டிங் (13,378), அலன் போடர் (11,174) மற்றும் ஸ்டீவ் வோ (10,927) ஆகிய மூவர் தான் உள்ளார்கள்.

எனவே அந்த ஒரு ஓட்டத்திற்கான காத்திருப்பு என்பது ஸ்டீவன் ஸ்மித்துக்கு பல யுகங்களாக இருக்கும். எந்த உபாதையாக இருந்தாலும் போட்டியில் ஆடுவதற்கு முடியுமானவரை முயற்சிப்பார். டுபாய் பயிற்சிக்குக் கூட அவர் கையில் கட்டோடு தான் வந்திருந்தார். என்றாலும், பின்னர் அவர் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தார்.

பிக் பாஷ் லீக்கில் ஆடியபோது சுழல் வீரர் மட் குன்மனுக்கும் விரலில் காயம் ஏற்பட்டது. பந்தை தடுக்கப்போன அவரின் வலது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. என்றாலும் அவர் இடது கை சுழல் வீரர் என்பது ஆறுதல் செய்தியாக இருந்தது. அவர் குணமடைந்து வரும் நிலையில் இலங்கை தொடரில் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.

அவுஸ்திரேலிய அணி இலங்கை டெஸ்ட் தொடரை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது மாத்திரம் நன்றாக தெரிகிறது. கடந்த காலத்தில் கற்ற பாடமும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இலங்கை மண்ணில் அவுஸ்திரேலிய அணி கடைசியாக டெஸ்ட் தொடர் ஒன்றை வென்றது 13 ஆண்டுகளுக்கு முன்னர் 2011 இல் ஆகும். அதற்குப் பின்னர் இலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடர்களில் இரண்டு தொடர்கள் சமநிலை பெற்றதோடு ஒரு தொடரை ஆஸி. இழந்தது. 2016 ஆம் ஆண்டு நடந்த அந்தத் தொடரில் அவுஸ்திரேலிய அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் தோற்றே தொடரை இழந்தது. எனவே இம்முறை அந்த அணி இலகுவாக விட்டுக்கொடுக்காது என்பதையே அதன் தடல்புடல் ஏற்பாடுகளை பார்த்தால் தெரிகிறது.

இலங்கையை பொறுத்தவரை அது கடைசியாக தென்னாபிரிக்காவை தென்னாபிரிக்க மண்ணில் எதிர்கொண்டபோது தொடரை 0–2 என முழுமையாக இழந்தது. என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி சொந்த மாண்ணில் ஆடும்போது இந்த போட்டி முடிவு செல்லாது. தனக்கு சாதகமான சூழல் இருந்தால் எந்த எதிராணியையும் சாய்க்கும் வல்லமை இலங்கை அணிக்கு இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது.

கடைசியாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை இலங்கை எதிர்கொண்டபோது இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது. அதில் காலி மைதானம் என்று வரும்போது சொல்லவே தேவையில்லை. காலியில் இலங்கை அணி கடைசியாக ஆடிய பத்து டெஸ்ட் போட்டிகளில் ஏழில் வென்று மூன்று போட்டிகளில் தான் தோற்றிருக்கிறது.

உபாதைக்கு உள்ளான ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க முதல் டெஸ்டில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றபோதும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஓஷத பெர்னாண்டோ போன்ற வீரர்கள் அவரது இடத்தை நிரப்புவதற்கு போதுமானவர்கள். அண்மையில் நடந்த முதல்தர போட்டியின்போது கமிந்து மெண்டிஸுக்கு காயம் ஏற்பட்டிருந்தபோதும் அது அதிக தீவிரமானதாக தெரியவில்லை. எனவே இலங்கை அணி தனது முழு பலத்துடனேயே இந்த டெஸ்ட் தொடரில் ஆடும்.

எனவே இந்த டெஸ்ட் தொடர் என்பது இரு அணிகளுக்கும் ‘சரியான போட்டியாக’ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division