Home » தமிழகத்தில் புதிதாய் முளைக்கும் அரசியல் தெளிவற்ற கட்சிகள்

தமிழகத்தில் புதிதாய் முளைக்கும் அரசியல் தெளிவற்ற கட்சிகள்

by Damith Pushpika
January 26, 2025 6:00 am 0 comment

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக புதிதாத முளைத்திருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அரசியலில் தொலைநோக்குப் பார்வையோ, தெளிவான சிந்தனையோ, சரியான கொள்கையோ இல்லாமலே மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்று போராடி வருகின்றன, எட்டுக் கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், நூற்றுக்கான ஆதரவாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டு கனவு காண்கின்றனர். கனவு காண்பது அவரவருக்கான உரிமை, நடைமுறைக்கு சாத்தியமாகுமா?

கொள்கையில் பிடிப்பு இல்லாமல் நேரத்துக்கு ஒரு பேச்சுப் பேசும் இவர்களை எப்படி நம்புவது, இதுதான் எங்களின் பாதை என்ற தெளிவு இல்லாமல் குழப்ப வாதிகளான இவர்களை நம்பி எப்படி அதிகாரத்தை ஒப்படைப்பது என்று ஒரு சாதாரண எளிய மனிதனின் மன நிலையிலிருந்தே இந்தக் கேள்வியை எழுப்புகிறேன், ஊடக வெளிச்சத்தில் அடிக்கடி தெரிவதால் மக்கள் நம்புவார்கள் என்பதும் தவறான போக்கு, தெளிவற்ற அரசியல்வாதிகளின் பேச்சு ஊடகங்களுக்கு பரபரப்புச் செய்தி அவ்வளவுதான். மக்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள் என்பது கேள்வியானது? முரண்பட்ட கருத்தைப் பேசிப்பேசி மக்களை திசைதிருப்பிவிடாலாம் என்ற தப்புக்கணக்கு அவர்களுக்கே எதிர்மறையாக மாறிவருகிறது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னெடுத்துவரும் பெரியார் மீதான விமர்சனங்களால் தமிழ்நாட்டு மக்களை தன்பக்கம் திருப்பி விட முடியுமா?. இல்லை மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் என்பதை சீமான் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாரா? அல்லது எதிர்மறை சிந்தனையை விதைப்பதன் மூலம் ஆட்சியை பிடித்து விடலாம் என்றும் நம்புகிறாரா? அப்படியானால் கடந்த பத்தாண்டுகளாக ஒரு தொகுதியில் கூட ஏன் அவரது கட்சியால் வெற்றி பெற முடியவில்லை, வாக்கு விழுக்காடு உயர்த்திருக்கிறது. தேர்தல் அங்கீகாரம் செய்துள்ளது, என்று நியாயப்படுத்தலாம். ஆனால், பத்து வருடமாக போராடியும் மக்களிடம் முழுமையான நம்பிக்கையைப் பெற முடியவில்லையே ஏன்?

சீமான் முன் வைத்துள்ள பெரியர் விமர்சனத்திற்கு பெரியார் பற்றாளர்களும் கடுமையான எதிர்ப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர், சீமானின் வீட்டையும் முற்றுகையிடச் சென்று கைதாகியுள்ளனர். பெரியாரா? பிரபாகரனா? பார்த்து விடுவோம் என்று சீமான் சவால் விட்டிருக்கிறார், பெண்களின் கைகளில் புத்தகங்களை கொடுக்க வேண்டும் என்று பேராடியவர் பெரியார். ஆனால், சீமான் தன் வீட்டுக்குமுன் பெண்கள் கைகளில் உருட்டுக் கட்டைகளைக் கொடுத்து நிற்வைக்கிறார். வன்முறையைத் தூண்டுவதுதான் அவர் முன்னெடுக்கும் தமிழ் தேசியமா?

கருத்தியல் மோதலைக் கூட நாகரீகமாக செய்தவர் பெரியார். வன்முறையைத் தூண்டியதில்லை, நான் சொல்வது தான் சரி என்று நம்ப வேண்டாம் நீயே சிந்தித்துப்பார் என்று சொன்னவர் பெரியார், ஆனால், சீமானின் பேச்சு அப்படி இல்லையே. தான் சொல்வதுதான் சரி என்று அளவுக்கதிகமான பொய்களை கூச்சம் இல்லாமல் சொல்கிறார், அரசியல் தெளிவு இல்லாத ஒருவரை எப்படி தமிழ்நாட்டு மக்கள் ஆதரிப்பார்கள்,

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் திமுக நாடகமாடுகிறது என்ற விமர்சனத்தை முன்னைத்து மக்களைச் சந்திக்க முயற்சி செய்கிறார், ஆனால், அவர் எங்கே இருந்து வருகிறார் என்பதையும் யோசிக்க வேண்டும், அவரின் வளச்சிக்கு திமுகவின் ஆதரவு அவரது தந்தை மூலமாக இருந்தது என்பதை இன்று அவர் மறந்திருக்கலாம், விஜயுடைய நோக்கம் 2026 – இல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான், இவரது கனவும் நனவாக வேண்டும் என்று முதலில் வாழ்த்துவோம். இவருடைய ரசிகர் கூட்டத்தை மட்டுமே நம்பி அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்றும் நம்புகிறார். ஆனால், மக்கள் மத்தியில் எந்தளவு இடம்பிடித்திருக்கிறார் என்று இன்னும் ஆய்வு செய்யவில்லை,

திமுக எதிர்ப்பை மட்டுமே வைத்து அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பது வெறும் கனவுதான். சீமானைப் போலவே விஜயிடமும் இன்னும் தெளிவான அரசியல் பாதை இல்லை. அரசியல் அனுபவம் உள்ளவர்களும் அவரிடம் இல்லை. மாவட்டப் பொறுப்பாளர்களைக் கூட முழுமையாக நியமிக்க முடியவில்லை. எழுதிக்கொடுத்த வசனத்தைப் பேசி நடித்து கைத்தட்டு வாங்க இது ஒன்றும் சினிமா அல்ல, மக்கள் நம்புகின்ற அளவுக்கு பேச்சுத்திறமை வேண்டும், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்திருக்க வேண்டும், தனக்காக கூட்டம் வருகிறதே என்பது நடிகர் என்பதற்காகத்தான். அரசியல் தலைவர் என்பதற்காக அல்ல, நல்ல நடிகராகவும் நல்ல அரசியல் தலைவராகவும் எம். ஜி. ஆருக்குப்பிறகு இங்கே யாரும் உருவாகவில்லை.

ரசிகர் செல்வாக்கு, மக்கள் செல்வாக்கு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இருந்தால் மட்டுமே அரசியலில் நீடிக்க முடியும், சினிமாவில் செய்ததை எல்லாம் அரசியலில் செய்துவிடலாம் என்று நம்புவதும் பிழை. மக்களின் சினிமாபார்வை வேறு அரசியல் பார்வை வேறு, ஒரு அரசியல் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டுமானால் அந்தக்கட்சி மீது முழு நம்பிக்கை வரவேண்டும் தமிழக வெற்றிக் கழகத்தை எத்தனை வீதமான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற ஆய்வு செய்த பின்பே நடிகர் விஜய் முழுமையாக அரசியல் களத்துக்கு வரவேண்டும். இல்லை என்றால் சீமானைப் போல வருடக்கணக்கில் போராடிக் கொண்டு மட்டுமே இருக்க முடியும்.

திமுக மீது பல விமர்சனங்களும், முரண்பாடுகளும் இருந்தாலும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி தொடர்ந்து ஆட்சியையும் தக்கவைத்து வருகிறார்கள், 75 ஆண்டுகளாக ஒரு கட்சி மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று வருகிறது என்றால் அவர்கள் தெளிவான பாதையில் அரசியல் செய்கிறார்கள் என்பதுதானே உண்மை, இன்று முளைத்துள்ள கட்சிகள் திமுகவை எதிர்ப்பதை விட அவர்களிடம் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், முதலில் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெறுவது எப்படி என்று சிந்திக்க வேண்டும். அதன் பிறகே ஆட்சி அதிகாரம் பற்றி கனவு காண வேண்டும்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division