சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடொன்றில் ஜனநாயகத்தை மதிப்பிடும் ஓர் ஆயுதமாக தேர்தல் கருதப்படுகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சியில் இருந்தவர்களால் தேர்தல்கள் அவர்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தை எடுத்து நோக்கினால், மக்கள் செல்வாக்குச் சரிந்துசெல்லும்போதெல்லாம் ஒவ்வொரு தேர்தலாக நடத்தப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் தேர்தல்கள் பிற்போடப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும், ரணில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியிலும் தேர்தல்கள் நடத்தப்படுவதற்குப் பதிலாக ஒத்திவைக்கப்பட்டமையே அதிகம்.
பதவிக்காலம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல, பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி 2023ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஒத்திவைத்தது.
தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைய தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுத்தபோதும், ஆட்சியிலிருந்தவர்கள் அரசாங்க அதிகாரிகளைப் பயன்படுத்தி தேர்தலை நடத்துவதற்கு முட்டுக்கட்டையிட்ட சம்பவங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதாக அரச தரப்பில் கூறப்பட்டதாக, எதிரணி தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இருந்தபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்க காலத்தில், இந்தத் தேர்தலை ஒத்திப்போடும் முயற்சிக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது.
கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. எனினும், பொதுத்தேர்தல் நடத்தப்பட்டமையால் இந்த வருடத்தின் முற்பகுதியிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த ஆணைக்குழு தீர்மானித்தது. இருந்தபோதும், 2023ஆம் ஆண்டு வேட்புமனுக்கள் கோரப்பட்டமையால், இது தொடர்பில் பாராளுமன்றத்தினாலேயே தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
குறிப்பாக குறித்த தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிலர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருப்பதுடன், மேலும் சிலர் இயற்கை எய்தியுள்ளனர். இதனால் இந்த வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் தீர்மானித்தனர். இதற்கு அமைய உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டரீதியான தடை நீக்கப்படும். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் உள்ளது. தேர்தலுக்கான தயார்படுத்தல்களும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டமும் விமர்சனங்களும்:
மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் காரணமாக உருவான அமைப்பு மாற்றம் அல்லது ‘சிஸ்டம் சேஞ்ச்’ என்ற கோஷத்தை அடிப்படையாகக் கொண்டே நாட்டில் அரசியல் மாற்றமொன்று ஏற்பட்டிருந்தது. இந்த மக்கள் எழுச்சியின் போது முன்வைக்கப்பட்ட இந்த அமைப்பு மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் கிளீன் ஸ்ரீலங்கா என்ற தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ‘கிளீன்’ எனும்போது வெறுமனே பௌதீக ரீதியான சுற்றுச் சூழல்களை சுத்தம் செய்வது மாத்திரமன்றி, ‘சிஸ்டத்தை’ சுத்தப்படுத்தும் திட்டமாகவே இது அமையும் என அரசாங்கம் விளக்கமளித்தது.
எனினும், இது வீதிகளைச் சுத்தப்படுத்தும், பஸ்களில் இருக்கும் மேலதிக பொருத்தங்களை அகற்றும் குறுகியகால நடவடிக்கை என்பது போல சித்திரிப்பதற்கு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் முயற்சித்தன. கடந்த காலங்களில் சுத்தப்படுத்தும் செயற்பாடுகளில் முப்படையினர் மற்றும் பொலிஸாரைப் பயன்படுத்திய போது எதிர்ப்புத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியினர், தற்பொழுது அவர்களைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை முன்வைப்பதாக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விமர்சித்திருந்தார்.
அது மாத்திரமன்றி, இந்தத் தேசிய திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே சரியான புரிதல் இல்லையென்றும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். எனினும், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பௌதீக ரீதியான மறுசீரமைப்புக்களுக்கு அப்பால், அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள், அரசாங்க பொறிமுறையின் மறுசீரமைப்புகள் எனப் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அரசாங்கம் சபையில் விளக்கமளித்திருந்தது.
அது மாத்திரமன்றி, இத்திட்டம் வெறுமனே மாதகாலத்துடன் வரையறுக்கப்படக்கூடியதொன்று அல்ல. தொடர்ச்சியாகப் பல வருடங்கள், காலத்தின் போக்குக்கு ஏற்ப புதிய விடயங்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டம் என்பதை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தியிருந்தனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நெருங்குவதால், அரசியல் இலாபம் தேடும் நோக்கில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை துரும்பாகப் பயன்படுத்தி விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
தாய்வீடு திரும்பும் ஐக்கிய மக்கள் சக்தி:
அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைக்கும் அதேநேரம், கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாகப் பெற்ற தோல்விகளைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலாவது சிறந்த பெறுபேறுகளைப் பெறும் நோக்கில் மீண்டும் தாய்வீடு திரும்புவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்பது கடந்த ஜனாதிபதித் தேர்தல் தொடக்கம் ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வரும் விடயமாகும். இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கு இணங்கியிருக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலாவது இருதரப்பும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. இதற்கு தற்பொழுது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இந்த வாரம், இரு கட்சிகளின் செயற்குழுக்களும் சாத்தியமான நல்லிணக்கம் குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்தன. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தனது கட்சியின் முக்கியஸ்தர்களுடைய கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். கட்சி இரண்டு தேசிய தேர்தல்களை எதிர்கொண்ட நேரத்தில், சுமார் பத்து மாதங்களாக செயற்குழு ஏன் கூடவில்லை என்று பிரேமதாசவிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை ஏற்றுக்கொண்டு தோல்விக்கான பொறுப்பை அவர் பொறுப்பேற்றதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் உலவுகின்றன.
கடந்த தேர்தல்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியானது தனது பங்காளிக் கட்சிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அல்லது அதன் செயற்குழுவின் ஒப்புதலுடன் செய்யப்படவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை போன்ற பிரச்சினைகள் ஆராயப்பட்ட நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனக் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மறுபக்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்தது. இதில் முக்கிய பங்கு வகிப்பவர், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள ஆகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, முன்னைய பாராளுமன்றத்தில் இருந்தும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிய தலதா அத்துக்கோரள, இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இவர் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் பெற்றிருக்கும் சூழலில், இரு கட்சிகளும் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பலத்தைக் கொண்ட தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பதற்கு பலமான எதிர்க்கட்சி தேவையென்ற விடயத்தை உணர்ந்திருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான இணக்கப்பாட்டை எட்டுவதற்குப் பல தடைகள் தாண்டப்பட வேண்டும்.
இரு கட்சிகளும் தாங்கள் மற்றொன்றை விட உயர்ந்தவர்கள் என்று கூறும் கட்சிகளின் பெருமிதம்தான் இதில் ஒரு முக்கிய பிரச்சினையாகும். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், நீண்ட வரலாற்றைக் கொண்ட, எளிதில் அங்கீகரிக்கப்பட்ட ‘யானை’ சின்னத்தை சொந்தமாகக் கொண்டது என்பதுடன், பல முறை நாட்டை ஆட்சி செய்த கட்சி என்ற கண்ணோட்டத்தில் தன்னைப் பார்க்கின்றது. அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியை விட பாராளுமன்றத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தம்மை ஐக்கிய மக்கள் கட்சி உயர்ந்த அரசியல் அமைப்பாகப் பார்க்கின்றது. இருதரப்புக்கும் இடையில் இது தன்மானப் பிரச்சினையாக மாறியுள்ளது என்பதே உண்மை. அது மாத்திரமன்றி, கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் இரு கட்சிகளும் இணைவது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கை சஜித் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டதாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன.
இந்த நிலையில் தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ள பேச்சுக்களிலும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் இணைவு என்பது வேறும் கோரிக்கை மட்டத்திலேயே முடிவுக்கு வந்துவிடும்.