இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினை ஊடகங்களில் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசாங்கத்தினால் சென்னையில் நடத்தப்பட்ட அயலகத் தமிழர் மாநாட்டுக்குச் செல்வதற்காக அவர் விமான நிலையம் சென்றபோது, தனக்குப் பயணத்தடை இருப்பதாகக் கூறி குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தன்னைத் தடுப்பதற்கு முற்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பாராளுமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று விசேட விருந்தினர்களுக்கான பகுதியின் ஊடாக அவர் சென்னை செல்ல முற்பட்ட போது, பயணத்தடை இருப்பதால் அவரை தொடர்ந்து செல்ல இடமளிக்க முடியாது என அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாக சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு சென்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதன் பின்னரே சிறிதரன் சென்னை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பியிருந்தார். ‘நீதிமன்றத்தினால் தனக்கு எந்தவொரு பயணத்தடையும் விதிக்கப்படாத நிலையில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் எவ்வாறு பயணத்தடை இருப்பதாகக் கூற முடியும்?’ என அவர் கேள்வியெழுப்பியதுடன், தான் நாடு திரும்பிய பின்னர் இதுபற்றி விசாரித்தபோது, அவ்வாறான பயணத்தடை இல்லையென விமான நிலைய அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தனது சிறப்புரிமைப் பிரச்சினையில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பியபோது முன்வைத்த மற்றுமொரு விடயமாக, விமான நிலையத்தில் தான் தடுக்கப்பட்டமை குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் விசாரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
“கடனாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சந்திக்கச் சென்றதாலேயே விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சில ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தி வெளியிட்ட ஊடகங்கள் யாவை? ஏன் அவ்வாறு செய்திகளை வெளியிட்டார்கள்? என்பதை சுமந்திரனை விசாரிப்பதன் ஊடாகத் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன், அரசாங்கத்தின் பேச்சாளர் அல்லது புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் போன்று ஊகத்தின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் விசாரிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் சிறிதரன் எம்.பி சபையில் முன்வைத்திருந்தார்.
இதற்கும், அப்பால், இதுவரை காலமும் தனது மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டுவந்த பொலிஸ் அதிகாரி மாற்றப்பட்டிருப்பதாகவும், குறித்த பொலிஸ் அதிகாரியை மீண்டும் தனக்கு வழங்குமாறு விடுத்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், சிறிதரன் எம்.பிக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்னாயக்க சபையில் உறுதியளித்தார். அதேநேரம், பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு இந்த முறைப்பாட்டை ஆற்றுப்படுத்தி உரிய விசாரணைகளை நடத்தவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உள்வீட்டுப் பிரச்சினையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த வருடத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக தலைவர் பொறுப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இதில் சிறிதரன் வெற்றி பெற்றிருந்தார். இருந்தபோதும், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அனைத்துத் தெரிவுகளும் ரத்துச் செய்யப்பட்டன.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தக் குழப்பங்களால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் மாவை சேனாதிராஜாவே நீடித்தார். இவ்வாறான பின்னணியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற விடயத்தில் ஏற்பட்ட இழுபறியினால் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
இருந்தபோதும், தான் அவ்வாறு பதவி விலகவில்லையெனக் கூறி அவர் மீண்டும் கட்சியின் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். எனினும், கட்சியின் பதில் தலைவராக சீ.வி.கே.சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் தெரிவு செய்யப்படும்வரை இவர் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டி மீண்டும் தலைதூக்கியுள்ள பின்னணியிலேயே சிறிதரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடு தற்போது வெளிப்படுவதாக கட்சியில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கியஸ்தர் தெரிவித்தார். அதேவேளை உள்வீட்டு முரண்பாடு தற்போது படிப்படியாக தீவிரமடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமஷ்டியை வலியுறுத்தும் தமிழரசுக் கட்சி:
அது மாத்திரமன்றி, கடந்த காலத்தில் கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றியும் முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சுமந்திரனுக்கு சார்பானவர்களுக்கே இடம் இருப்பதாகவும், இதனால் பலர் ஓரங்கட்டப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான பின்னணியில் திருகோணமலையில் கூடிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளன. அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்தால் அது பற்றி ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சி ஏழு பேரைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. இந்தக் குழு அரசியலமைப்புக் குறித்த விடயங்களில் ஆய்வுகளை நடத்தி உரிய தலையீடுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சமஷ்டி முறையே தீர்வாகும் என்பதை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சமஷ்டி முறையிலான ஆட்சியையே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கியமான அரசியல் தீர்வாக வலியுறுத்துகின்றது என்றார் அவர்.
‘கட்சியின் ஒரே இலக்கு சமஷ்டி முறை தீர்வே ஆகும். தற்போது ஒற்றையாட்சி என்றால் என்ன?, சமஷ்டி முறை என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் தெரிகிறது. எழுபது வருட காலமாக பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அரசியல் தீர்வாக இதனையே வலியுறுத்தி வருகின்றோம்’ என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
இது விடயத்தில் தமிழரசுக் கட்சி கடந்த காலத்தில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் தயாரிப்பு முயற்சிகளிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் சமஷ்டி முறையை தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எதுவாக இருந்தாலும், கட்சிக்குள் ஒற்றுமையை நிலைநாட்டி, ஏனைய தமிழ் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் பட்சத்திலேயே தமிழ் மக்கள் சார்பில் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உரிய தலையீடுகளை மேற்கொள்ள முடியும் என்பதுதான் அம்மக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
பி.ஹர்ஷன்