இலங்கையில் அண்மைக் காலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழை நகரங்களையும், கிராமங்களையும், விவசாய நிலங்களையும், மரங்களையும் அழித்து வெள்ளக்காடாக்கியதுடன், பல மனித உயிர்களையும் பலியெடுத்துள்ளது. பல இலட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து தடைப்பட்டது. நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர். பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு நிலைமை இன்னும் பூரணமாக சீராகாத நிலையில் உள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை வெள்ள நீரினால் அழிந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரும் விரக்தியில் காணப்படுகின்றனர்.
இதேவேளை சேனநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகளும் அண்மையில் திறக்கப்பட்டதையத்து இதனை அண்மித்துள்ள சேனையாறு, பேராறு ஆகிய சில பிரதான ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் அம்பாறை மாவட்டத்தின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கால்நடைகளும் பாதிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக, 10 க்கும் மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், இறக்காமம் மற்றும் உகண, பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் 20000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் பலத்த மழை ஓரளவு ஓய்ந்து காணப்பட்டாலும் மழையுடனான வானிலையே தற்போதும் காணப்படுகிறது. அதனால் வெள்ள நிலைமை பூரணமாக குறையவில்லை.
மழை வெள்ளம் என்றாலே இலங்கையில் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதும் நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குவதும் தொடர் கதையாகிவிட்ட நிலையில், இது இயற்கை சீற்றத்தின் விளைவா அல்லது மனிதத் தவறுகளுக்கான இயற்கையின் தண்டனையா என நோக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் எமது சுற்றுச் சூழலுக்கு, இயற்கைக்கு செய்த துரோகங்கள், குற்றங்களுக்கான தண்டனையாக வெள்ளப்பெருக்கு, அழிவுகள் வருகின்றன என்பதை உணர முடியும்.
வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு அதிகரித்த மழைவீழ்ச்சி மட்டுமல்லாது, முறையற்ற பல மனித நடவடிக்கைகளும் காரணமாக அமைவதாலேயே இலங்கையும் இன்று அடிக்கடி வெள்ளப் பெருக்கு அபாயத்தை எதிர்நோக்கி வரும் நாடாக மாறி வருகின்றது. இலங்கை ஆண்டுதோறும் ஏதாவது ஒரு அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து வருகின்றது. அவ்வப்போது வருகின்ற அரசாங்கங்கள் சரியான திட்டமிடலுடன் கூடிய முன்னாயத்தங்களை செய்வதை விடுத்து, வெறும் கண்துடைப்பான அவற்றின் செயலாற்றுகை காரணமாகவே இவ்வாறு இலங்கை முழுவதும் வெள்ள அனர்த்த நிலமைகளின்போது நாடும் நாட்டு மக்களும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.
இலங்கையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களை பாதித்தது. அத்துடன் 203 பேரை கொன்றதுடன் 96 பேர் காணாமல் போயிருந்தனர். 9000 வீடுகள் அழிக்கப்பட்டன. 75,000 மக்கள் இடம்பெயர்ந்தனர். 2017 வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் விவசாயம், போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளை பாதிப்புக்குள்ளாக்கியது.
இதன் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தமாக தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தை குறிப்பிட முடியும். எனினும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள், அதிகாரிகள் இவ்வாறு அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவிதமான தூரநோக்கான செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டவுடன் மக்களுக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்குவதோடு மாத்திரம் அரசாங்கம் தனது பணியை முடித்துக்கொள்வது கூடாது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள்நலன் பக்கம் நின்று சேவையாற்றும் அரசாங்கமாக தன்னை அடையாளப்படுத்த
முனைகின்ற இந்தக்கால சூழ்நிலையில், பாதிப்புக்களை தடுப்பதற்கான உச்சபட்ச வேலைத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது காலக் கட்டாயமானதாகும்.
வெள்ள நிலமைகளில் கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை செய்கை பாதிப்புற்றுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய தொடர்ச்சியான மழைவீழ்ச்சி மற்றும் பெரிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட காரணத்தினால் படுவான் கரை பகுதியில் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
அறுவடைக்கு தயாரான வயல் நிலங்களில் நீர் காணப்படுவதனாலும் இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பனியுடனான காலநிலை காரணமாகவும் அறக்கொட்டி நோய்த் தாக்கத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்குரிய நஷ்ட ஈடுகளை தருமாறு அரசாங்கத்திடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டபத்தடி, கொக்கட்டிச்சோலை, பழுகாமம், வெல்லாவெளி, கிரான், வாகரை ஆகிய கமல சேவை பிரிவுக்குட்பட்ட வயல் நிலங்களில் இவ்வாறு அறக்கோட்டி நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கு உள்ளான வயல் நிலங்களில் உள்ள நெற் கதிர்கள் பாதிக்கப்படுவதுடன் விளைச்சலும் பெருமளவு குறையும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அறுவடைக் காலங்களில் மாவட்டத்தில் பெரிய குளங்களின் வான் கதவுகளை திறப்பதனை தடுக்குமாறும் அதற்குரிய திட்டங்களை எதிர்காலத்தில் அரசாங்கம் வகுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதுடன் தங்களுக்குரிய நிவாரணங்களை தந்து உதவுமாறு அரசாங்கத்திடம் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதுபோன்றுதான் மக்களின் குடியிருப்புக்களை வெள்ளம் ஆக்கிரமித்ததால் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. அதனால் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர்களின் வீடுகள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தமது வீடுகளுக்கு திரும்பும் நிலை காணப்படுகிறது.
ஆனால் இம்முறை பாடசாலைகள், மத்ரஸாக்கள், மார்க்க கல்விக் கூடங்கள் மற்றும் சமயஸ்தலங்கள் பலவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
இவ்வாறு இலங்கை பூராகவும் வெள்ளத்தினால் பாரிய இன்னல்களை அனுபவித்துவரும் மக்களின் துயர் துடைக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையல்லவா?
இன்று இயற்கை அனர்த்தங்களை எதிர்வு கூறுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள், முறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. எங்கு? எப்போது? எத்தனை? மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்படும் என்பதை சாதாரண பொது மக்கள் கூட அறிந்து கொள்ளுமளவுக்கு தொழில்நுட்பங்கள் மிகச் சிறப்பாக முன்னேற்றமடைந்து காணப்படுகிறது.
அவ்வாறான நிலையில் அனர்த்தங்கள் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கான பல வழிகள் காணப்படுகின்றன. அதனை கருத்திலெடுத்து அரசாங்கம், குறிப்பாக வெள்ள அனர்த்த நிலைமைகளின்போது மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும். அதற்காக முனாயத்தங்களை செய்ய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் முன்வர வேண்டும்.
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்) எஸ்.அஷ்ரப்கான்