சவூதி அரே பியா புனித அல் குர்ஆனுக்கு சேவை செய்வதிலும் அதன் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதிலும் மிகுந்த கவனம் செலுத்தும் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாகும். அந்த வகையில் அல்குர்ஆனுக்கு சவூதி அரேபியா ஆற்றிய பங்களிப்பின் சிலதை பின்வருமாறு நோக்கலாம்.
இரு புனித இல்லங்கள்:
ஹஜ், உம்ரா செய்யும் முஸ்லிம்களுக்கான உலகளாவிய மையமாக சவூதி அரேபியா உள்ளது, உலகின் நாலாபாகங்களிலிருந்தும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்ற மக்கா, மதீனாவுக்கு வருகின்றார்கள். அவ்வாறான மக்களின் மொழிகளுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு தர்ஜுமாக்கள் மற்றும் அல் குர்ஆன் பிரதிகளை அன்பளிப்புச் செய்கின்றனர்.
புனித அல்குர்ஆனின் வெளியீடு:
புனித அல்குர்ஆனை அச்சிட்டு வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய முதல் நாடுகளில் சவூதி அரேபியா ஒன்றாகும். மதீனாவில் உள்ள புனித அல்குர்ஆன் அச்சிடும் மன்னர் ஃபஹத் மையம் மிகத் துல்லியமான மற்றும் நம்பகமான முறையிலும் பல சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்ப்புகளை வெளியிடுகின்றது. இந்த நிறுவனத்தின் மூலம் உலகில் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக அல்குர்ஆன் பிரதிகள் விநியோகித்தும் அன்பளிப்பாகவும் வழங்கி வருகின்றது.
அல்குர்ஆன் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள்:
புனித குர்ஆனை கற்பிக்க பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி அல்குர்ஆனை கற்பிப்பதில் பங்களிப்பை வழங்குகின்றது. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் அல்குர்ஆன் உயர் கற்கைப் பாடப்பிரிவு என அமைத்து அதனூடாக சேவை செய்கின்றது. குர்ஆனை மனனம் செய்யவும் விளங்கி படிக்கவும் உதவுகின்றது.
அல்குர்ஆன் மனனப் போட்டிகள்:
புனித அல்குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கான மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் சர்வதேசப் போட்டி உலகில் மிக முக்கியமான குர்ஆன் போட்டியாகும். இது ஆண்டுதோறும் புனித மக்காவில் நடாத்தப்படும் இப்போட்டியில் பல நாட்டிலுள்ள ஹாபிழ்கள் பங்கேற்கின்றார்கள். தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு, பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவித்து இஸ்லாமிய வாலிபர்களை புனித குர்ஆனுடன் தொடர்புபடுத்தி மனனம் செய்வதில் ஊக்கமளிக்கின்றது. இவ்வாறான ஊக்குவிப்புகான இரண்டாம்கட்ட முயற்சியாக நமது நாட்டிலும் இரண்டாவது தடவையாக இப்போட்டி நாளை 18ஆம் திகதி நடைபெற்று திங்கட்கிழமை 20ஆம் திகதி பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அல் ஹம்துலில்லாஹ்.
சவூதி அரேபியாவின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
சவூதி அரேபியா ஊடகங்கள் மூலம் புனித அல்குர்ஆனை பரப்புவதில் பெரும் பங்களிப்பைச் செய்கின்றது. சவூதி வானொலி 24 மணிநேர சிறப்பு சேனலை புனித குர்ஆன் ஓதலுக்காக ஒதுக்கியுள்ளது. மேலும் தொலைக்காட்சி சேனலை குர்ஆனோடு தொடர்பான மார்க்க நிகழ்வுகளை ஒளிபரப்புகின்றன. அதனூடாக உலக முஸ்லிம்கள் குர்ஆனை சரியாக ஓதவும், விழங்கவும் பெரிதும் உதவுகிறது. இது புனித குர்ஆனை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட குர்ஆனிய கல்வித் திட்டங்களில் ஒன்றாகும்.
நவீன தொழில் நுட்பங்கள்:
நவீன காலத்தில் சவூதி அரேபியா புனித குர்ஆனை மேலும் பரப்ப நவீன தொழில் நுட்பங்களை நாடியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்கள் மூலம் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் பனித குர்ஆனை எளிதாக அணுக முடிகின்றது.
புனித மஸ்ஜிதுகளை புனரமைத்து புனித குர்அன் பிரதிகளை வழங்கள்:
சவூதி அரேபியாவின் உள்ளேயும் வெளியேயும் மஸ்ஜிதுகளை புனரமைத்து புனித குர்அன் பிரதிகளை வழங்குதல், ஓதுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் பொருத்தமான சூழலை வழங்க முதலீடு செய்கின்றது.
புனித குர்ஆனை மனப்பாடம் செய்வதில் கூடிய அக்கறை:
சவூதி அரேபியா ஆண், பெண் மாணவர்களுக்கு புனித குர்ஆனை மனப்பாடம் செய்யவும், மற்றவர்களுக்கு அதை கற்றுக்கொடுக்கவும் வாய்ப்பளிக்கும் பல குர்ஆன் மனன இல்லங்கள், மையங்கள் நிறுவி மனப்பாடம் செய்வோருக்கு ஊக்குவிப்பு செய்ய ஊக்கத் தொகை மற்றும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வாறான அமைப்பில் சவூதி அரேபியாவின் சேவை புனித அல்குர்ஆனுக்கு முன்னோடியாக அமைவதுடன் புனித மக்கா மதீனா புனித குர்ஆனை ஓதுவதற்கும் கற்பதற்கும் மனனம் செய்வதற்கும் முன்னுதாரணமாகும். அல்லாஹ் சவூதி அரேபியாவின் மன்னர், இளவரசர் மற்றும் இம்மக்களின் இச்சேவைகளைப் பொருந்திக் கொண்டு நல்லருள் பாலிப்பானாக!
ஏ.சீ. தஸ்தீக் (மதனி) MA பணிப்பாளர், தாருல் ஹிக்மா கலாபீடம், சவளக்கடை, மத்திய முகாம்.