தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசரால் ஏற்பாடு செய்யப்பட்ட அயலகத் தமிழர் தினம் “எத்திசையும் தமிழணங்கே” என்ற தலைப்பில் ஜனவரி 11, 12ஆம் திகதிகளில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
12ஆம்திகதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்து அயலக தமிழர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 11ஆம் திகதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சியினை தொடங்கி சிறப்புரையாற்றினார்.
கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையின் பீ.மரியதாஸ் எழுதிய மலையகம் இங்கிருந்து எங்கே?, சி.வி.வேலுப்பிள்ளையின் எல்லைப்புறம், விஸ்மாஜினி, சிவபாக்கியம் குமாரவேல் எழுதிய லெச்சுமி தந்த மலையக வாய்மொழி இலக்கியம், பதுளை வ.ஞானப்பண்டிதனின் கதிர்காமத் திருமுருகன், பேராசான் மு.நித்தியானந்தன் எழுதிய இந்திய இலக்கியம்: கைலாசமூர்த்தியும் அனந்தமூர்த்தியும் ஆகிய ஆறு நூல்களை அமைச்சர் சா.மு. நாசர் வெளியீட்டு வைத்ததோடு வெளியீட்டாளர் எச்.எச்.விக்கிரமசிங்கவுக்கும் காயத்ரி விக்கிரமசிங்கவுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்து சிறப்பு செய்தார். தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி, பாராளுமன்ற உறுப்பினர் எம். எம். அப்துல்லா, அரசு செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை திருமதி. ரீட்டா ஹரிஷ் தக்கர், தமிழ்நாடு சிவசேனா மாநில தலைவர் சசிகுமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த ஆறு மலையக நூல்களை அயலக தமிழர் தின விழாவில் வெளியீடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி I.O.F.S மேற்கொண்டார்.
கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை கடந்த வருடம் 2024இல் வெளியிட்ட ஆறு நூல்களையும் அயலகத் தமிழர் மாநாட்டில் வெளியீட்டு வைத்தது நூல்களை எழுதிய மலையக எழுத்தாளர்களுக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.
தமிழகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் வழிவந்தவர் பதுளை கலைஒளி முத்தையாபிள்ளை (1926-– 1991).
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த முத்தையாபிள்ளை அவர்கள், புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் கல்வி கற்று, இலங்கையில் தோட்ட நிர்வாகியாகப் பணியாற்றியவர். மலையக மக்களுக்காக அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘கலைஒளி’ என்ற மாதப்பத்திரிகை வாயிலாக அவர் வாழ்நாள் முழுதும் கலைஒளி முத்தையாபிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
அவரது மூத்த புதல்வர் முத்தையாபிள்ளை நித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றி, தற்போது லண்டனில் வாழ்கிறார். மு. நித்தியானந்தனும் எச்.எச்.விக்கிரமசிங்கவும் இணைந்து ‘கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை’ அமைப்பினை நிறுவி, மலையக இலக்கியம் சார்ந்த நூல்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் வெளியிட்ட நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்ய மண்டலப் பரிசில்கள் கிடைத்துள்ளன.
பதுளை வ.ஞானபண்டிதன் 1940 இல் வெளியிட்ட ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற அரிய நூலைத் தேடி, 82 ஆண்டுகளின் பின், அந்த நூலின் மறுபதிப்பைக் கொண்டு வந்துள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் இந்த நூலுக்கு நீண்ட ஆராய்ச்சி முன்னுரை எழுதி கனம் சேர்த்திருக்கிறார்.
லண்டனிலிருந்து மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய ‘இந்திய இலக்கியம்: கைலாசபதியும் அனந்தமூர்த்தியும்’ என்ற ஆராய்ச்சி நூலையும் வெளியிட்டுள்ளனர். கன்னடத்தின் தலையாய எழுத்தாளரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான ஆங்கிலப் பேராசிரியர் யு.ஆர். அனந்தமூர்த்தி அவர்கள் பர்மிங்காம் (Birmingham) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காகப் பயின்றுகொண்டிருந்த வேளையில், அதே காலப்பகுதியில் ‘தமிழில் வீரயுகக் கவிதை’ பற்றிய முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் க.கைலாசபதியும் இணைந்து, அப்போது லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த காமன்வெல்த் இலக்கிய மாநாடு பற்றி Times Literary Supplement என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களைத் தேடி, 60 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக இந்தக் கடிதங்கள் எழுப்பியுள்ள இலக்கிய சர்ச்சையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் மு.நித்தியானந்தன். கன்னட இலக்கிய உலகிலும் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் இந்த இலக்கியப் பங்களிப்பு அறியப்படாத நிலையில் இந்த நூல் மிக முக்கியம் பெறுகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது இலங்கைப் பாராளுமன்றத்தை அலங்கரித்த மலையகப் பாராளுமன்ற அங்கத்தவரான சி.வி.வேலுப்பிள்ளை மலையகத்தின் மூத்த ஆங்கிலக் கவிஞராவர். கவி ரவீந்திரநாத் தாகூர் 1934 இல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவரிடம் சமர்ப்பிப்பதற்காகவே எழுதப்பட்ட ‘விஸ்மாஜினி’ (Vismadgenee) என்ற ஆங்கிலக் கவிதை நூலை 90 ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்புச் செய்திருப்பதுடன், அதன் தமிழாக்கத்தையும் தமிழில் தந்திருக்கிறார் மு.நித்தியானந்தன்.
லண்டனையும் இலங்கையையும் இந்தியாவையும் இணைத்து வெளியாகியுள்ள இந்த ஆறு நூல்களையும் இந்த அரங்கில் வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை அமைப்பினர் தங்கள் வெளியீட்டுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு தமிழ் இலக்கிய உலகிற்கு அணி சேர்க்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி வாழ்த்துகளை தெரிவித்தார்.
சசிகுமார் சென்னை