இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள் கலவையான விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள ஒரு சூழ்நிலையில் எதிர்காலத்தில் இலங்கை பல உள்ளக மற்றும் வெளியக சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலாவதாக ஆட்சிமாற்றத்திற்கு முன்னர் இப்போதைய ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சவால் நிலை. எதிர்க்கட்சியில் இருக்கும் போது விமர்சித்த பலவிடயங்களை ஆட்சிக்கு வந்தபின் உடனடியாக செய்ய முடியாதுள்ளமை ஒரு பிரச்சினையாகும். மின்கட்டணக் குறைப்பு, நீர்க் கட்டணக்குறைப்பு, வாழ்க்கைச் செலவுக்குறைப்பு போன்றன இதில் உள்ளடங்கும். அதுமட்டுமன்றி மத்தியதர வகுப்பினர் மீது மற்றும் வியாபாரத்துறையினர் மீது விதிக்கபட்ட வரிகளைக் குறைப்பதும், வறிய தரப்பினருக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதும் மிகப் பாரிய உள்ளக சவால்களாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகாமல் இது வரை எய்தப்பட்ட முன்னேற்றங்களின் அடிப்படையில் தொடர்ந்து பயணிக்க அரசாங்கம் எடுத்த முடிவானது விவேகபூர்வமானதாக இருந்தாலும், ரணிலின் கொள்கைகளை புதிய அரசாங்கம் தொடர்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. பொதுமக்களும் இதற்காகவா நாம் வாக்களித்தோம் என்றும் பேசத்தொடங்கியுள்ளனர். ஆகவே இந்த சவால்களுக்கான எதிர்வினைகளை உடனடியாக காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தொடங்கப்பட்ட விடயங்களை 180 பாகை திசைதிருப்பாமல் அதன்வழியே பயணித்து திருப்புவதே சரியானது என்பதை அரசாங்கம் மக்களுக்கு முறையாகப் புரிய வைக்க வேண்டும். தேர்தல் மேடைகளிலே இப்போதைய கொள்கைகளை கடுமையாக விமர்சித்து விட்டு அதே கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுமாயின் வாக்காளர்கள் கேள்வி கேட்பது நியாயமானது தான். அதிலும் குறிப்பாக சாதாரண பொதுமக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த உடனடி மாற்றங்களை செய்யாவிட்டால் மிகப்பெரிய அதிருப்தியையும் எதிர்நோக்க நேரிடும். அரசாங்கம் அண்மையில் அறிமுகப்படுத்திய கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் சிங்கப்பூரின் சிற்பி லீக்குவான் யூ ஆரம்பித்த அதே திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நல்ல திட்டமாகும். ஆனால் அந்த திட்டம் இப்போது வெறுமனே பேருந்துகளிலும் முச்சக்கர வண்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அகற்றும் வேலைத்திட்டமாக சமூகஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. உண்மையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள பாகங்களை கழற்றுவதிலிருந்து ஆரம்பிக்காமல் சாலை ஒழுங்குவிதிகளை முறையாக பின்பற்றும் திட்டமாக அதை ஆரம்பித்திருந்தால் யாரும் அதை விமர்சித்திருக்க முடியாது. முச்சக்கர வண்டி சாரதிகள், பேருந்து சாரதிகள் போன்றோர் தற்போது அதிருப்தியில் உள்ளமை தெரிகிறது. இவற்றை சமாளித்து தொடங்கிய திட்டத்தை வெவ்வேறு திசைகளில் முன்னகர்த்த வேண்டியது அடுத்த சவால். அடுத்த வரவு செலவுத்திட்டத்திலே மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டியது அரசாங்கம் எதிர்நோக்கும் மிகமுக்கிய சவாலாகும். அதிக வரிவீதங்கள் காரணமாக மூளைசாலிகள் வெளியேற்றம் பெரியளவில் இடம் பெற்றுள்ளது. கடவுச்சீட்டு வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அந்தளவில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண நிலைமைகளின் போது உள்ளதைப் போல கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமாயின் இலங்கையில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். மறுபுறம் அதிக வரிவீதங்கள் முதலீட்டாளர்களின் உத்வேகத்தைக் குறைத்துள்ளது. ஆகவே வரிகளில் மாற்றங்களை கொண்டுவருவது அரசாங்கம் எதிர்நோக்கும் முக்கிய சவால். ஐ.எம்.எப் உடன் இணங்கிய வருமான இலக்குகளை மீறாத வகையில் வரிக்கட்டமைப்பை மாற்றவேண்டியுள்ளது. வாகன இறக்குமதிகளை அனுமதிப்பதன் ஊடாக அரசாங்கம் கணிசமான வருவாய் அதிகரிப்பை எதிர்பார்த்தாலும் அரச செலவினங்களின் அதிகரிப்பிற்கேற்ப வருவாய் இலக்குளை பேணமுடியுமா என்பது ஒரு முக்கிய கேள்விக்குறியாக உள்ளது. 2025 வரவு செலவுத்திட்டம் புதிய அரசாங்கத்திற்கு ஒரு பிரதான சவாலாகவும் அடுத்துவரும் ஆண்டுகளில் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் செல்திசையைத் தீர்மானிப்பதாகவும் அமையும். மக்களின் அதீத எதிர்பார்க்கைளில் ஒன்று திருடர்களைப் பிடித்து தண்டணை வழங்கவேண்டும் என்பது. இது அரசாங்கத்திற்கு ஒரு மிகப்பெரிய சவால். பைல்கள் பல கைவசம் இருப்பதாகச் சொன்னாலும் கூட அவற்றின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது இலகுவானதல்ல. ஆனால் இதைச் செய்யாவிட்டால் பொதுமக்களின் அதிருப்தியை வெகுவிரைவில் சந்திக்கும் அபாயநிலை உள்ளது. இப்போது பிரமுகர்கள் அடிக்கடி சென்றுவருவதும் வந்தபின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதும் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகிறது. நல்லாட்சிக்காலத்திலும் கூட இதேபோல பலர் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு நாளாந்தம் அழைக்கப்பட்டார்கள் ஆனால் அந்தநடவடிக்கைகள் ஒரு கட்டத்திற்கு அப்பால் நகரவில்லை.
ரணில் விக்கிரமசிங்க அந்தவிசாரணைகள் முன்னகரவிடாது தடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது ஒருவரையும் விடமாட்டேன் என்ற சூளுரையுடன் பதவிக்கு வந்த அநுர குமார ஜனாதிபதியைத் தடுப்பதற்கு மேலே எவருமில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே மக்களுக்க கொடுத்த கொடுத்த இந்த வாக்குறுதியை நிறைவேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு. வெளியக ரீதியில் மூன்று முக்கிய வலுசக்தி மையங்களை சமாளிக்க வேண்டிய சவாலை அரசாங்கம் எதிர்கொள்கிறது.
இந்தியா சீனா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்குலக நாடுகள். அநுர குமார திசாநாயக்கவின் இந்தியா மற்றும் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களும் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புகளும் இந்தப் புதிய ஆட்சியாளரை இவ்விரு நாடுகளும் எவ்வாறு கையாள விரும்புகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. மேற்குலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் தலைமை மாற்றம் இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடும். இதை எவ்வாறு புதிய அரசாங்கம் கையாளும் எப்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.