‘ஆட்சி மாறினாலும் சில காட்சிகள் மாறாது’ என்பார்கள். அப்படித்தானுள்ளது வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும். முந்திய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் தமக்கு ‘அரசாங்கம் வேலை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடினார்கள். இப்போதைய ஆட்சியின்போதும் போராடுகிறார்கள். இதற்காக ‘வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பே உண்டு. அந்தச் சங்கம் தொடர்ந்தும் புதுப்பிக்கப்படுகிறது. அதுவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராட்டங்களை நடத்துகிறது.
பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வரும் ஒவ்வொரு தலைமுறையினரும் அந்தச் சங்கத்தில் இணைகிறார்கள். அதாவது பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மாணவர் அமைப்பில் செயற்படுகின்றவர்கள், பட்டம் பெற்றவுடன் அப்படியே வந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் இணைந்து விடுகிறார்கள். இதுவொரு தொடர் செயற்பாடாக உள்ளது. இதனால் இந்தச் சங்கம் தொடர்ந்தும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து உயிர்வாழ்கிறது.
இந்தச் சங்கமே யாழ்ப்பாணத்தில் விளக்குமாற்றை ஏந்தியும் தெருவைக் கூட்டியும் ஒரு அடையாளப் போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன் நடத்தியுள்ளது. முன்பு ஆளுநர் அலுவலகத்தைச் சுற்றி வளைப்பார்கள். அல்லது மாவட்டச் செயலகத்துக்கு முன்னே நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இப்பொழுது சற்று வித்தியாசமாகத் தெருவைக் கூட்டியிருக்கிறார்கள். அதாவது தெருக்கூட்டுவதற்கே தமக்கு வழங்கப்பட்ட பட்டம் உள்ளது என்று காட்ட முற்பட்டிருக்கிறர்கள். அல்லது தாம் பெற்றுக் கொண்ட பட்டம் தெருக்கூட்டும் நிலையிலேயே உள்ளது என்ற விதமாக.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகவே இந்தத் தெருக்கூட்டும் காட்சி எதிர்விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத் தரப்பிலிருந்து மட்டுமல்ல, சமூக மட்டத்திலிருந்தும் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வேலையற்ற நிலையை வெளிப்படுத்துவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் பல வழிமுறைகள் இருக்கும்போது, தெருக் கூட்டுவதாகக் காட்டுவது அந்தத் தொழிலையும் அதைச் செய்யும் தொழிலாளர்களையும் அவமதிப்பதாகும் என்று பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரையும் இவர்களுடைய வேலையில்லாப் பிரச்சினையையிட்டுக் கவலைப்பட்டவர்களும் அதற்காக அனுதாபப்பட்டவர்களும் கூட இந்தக் காட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ளனர். வேண்டுமானால், நகரத்தையோ தெருவையோ ஒரு கடற்கரைப்பகுதியையோ அடையாளமாகச் சுத்தப்படுத்துவதாக – முற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தால், அது வரவேற்பைப் பெற்றிருக்கும். மதிப்பைக் கூட்டியிருக்கும். அந்தக் கவனம் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கும் என. அப்படியெல்லாம் நடக்காமல் ஆவேசத்தைக் காட்ட முற்பட்டு மூக்குடைபட்டிருக்கிறார்கள், பட்டதாரிகள்.
ஆக, மக்களின் ஆதரவையும் இழந்த நிலையிலிருக்கும் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? போராட்டத்தை முன்னெடுத்தோரின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் புதிய அரசாங்கம் இந்த விடயங்களை (வேலையில்லாப்பட்டதாரிகளை) என்ன செய்யப்போகிறது? அதனுடைய கொள்கை வகுப்பில் இதற்கான தீர்வு என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பணி வழங்குதலே இதுவரையான நடைமுறையாக இருந்துள்ளது. குறிப்பாக அந்தந்தக் காலத்தில் ஆட்சியிலிருக்கும் அரசியற் தரப்பினர் தமது அரசியற் தேவைகளோடு இணைந்ததாக இந்தப் பணிச் சேர்ப்பைச் செய்துள்ளனர். ஏறக்குறைய அரசியல் நியமனங்களாக. இதனால், பணியில் சேர்ந்தவர்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைப்போலச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகியிருந்தது. அதோடு ஆட்சியைப் பிடிப்பதற்காக வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய பணிச் சேர்ப்பைச் செய்ததால், அரச நிறுவனங்களில் தேவைக்கு அதிகமானவர்கள் குவிந்து போயுள்ளனர். மட்டுமல்ல, வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே புதிய புதிய வேலைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. உண்மையில் இவற்றில் பலவும் தேவையற்றவை. இதெல்லாம் அரசாங்கத்துக்கு (மக்களுக்கு) சுமையாகவே இன்று மாறியுள்ளன. மட்டுமல்ல, அரசியல் மற்றும் நிர்வாகச் சீரழிவுக்கும் பொறுப்பின்மைக்கும் இது வழியேற்படுத்தியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
இதனால்தான் அரச பணிகளில் உள்ளோரின் தொகையைக் குறைக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனை ஏற்புடையதே.
இதையும் பட்டதாரிகள் அறிந்திருப்பார்கள். ஏற்கனவே பணியாளர் சுமையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் (நாடு) எப்படிப் புதிதாக நியமனங்களை வழங்கும் என்ற தெளிவு அவர்களுக்கு வந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இந்தக் கேள்வியாவது எழுந்திருக்க வேண்டும். எப்படிப் பழைய ஆட்களை – தேவைக்கு அதிகமாக இருப்போரை – வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது வேறு வழிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம் என்று அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பிடிவாதம் செய்தால் அதற்கு எவரால், என்னதான் செய்ய முடியும்?
இங்கேதான் நாம் படிப்பைப் பற்றியும் பட்டத்தைப் பற்றியும் கல்விச் சமூகத்தைப்பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
கல்வி என்பதும் உயர் கற்கை என்பதும் மனித அறிவையும் ஆற்றலையும் விருத்தி செய்வதற்கான ஒரு பொறிமுறையும் ஏற்பாடுமேயாகும். குறிப்பாகச் சுயாதீனத்தை உருவாக்குவதாகவும் தாற்பரியங்களை விளங்கிச் செயற்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், கவலைக்குரிய விடயமாக இருப்பது, படிக்காதவர்கள் சுயாதீனமாக இயங்குகின்ற அளவுக்குப் படித்தவர்களிற் பலரும் இயங்க முடியாமல் அரசாங்கத்தையும் சமூகத்தையும் குடும்பங்களையும் சார்ந்திருக்கவும் தங்கி வாழவும் முற்படுவதாகும். அந்தளவுக்குத்தான் இவர்களுடைய அறிவுத்திறனும் ஆளுமை விருத்தியும் குறைந்து நலிந்து போயுள்ளது.
இதனால் பலர் இன்று வேலையில்லாமல், வேலைகளை உருவாக்க முடியாதோராய், மாற்று வழியற்றோராய் உள்ளனர்.
இவர்களைப் பொறுப்புடையோராக, சமூக நிலவரத்தைப் புரியக் கூடியோராக, திறனாளராக, சுயாதீனமுடையோராக மாற்றுவதற்கு அரசும் கல்வி நிறுவனங்களும் தவறியுள்ளன.
என்பதால்தான் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காத, முகம் கொடுக்க முடியாதவர்களாக ஒரு சமூகம் உருவாகியிருக்கிறது. இது தன்னைத் தப்ப வைக்கவே விரும்புகிறது. இதனால்தான் பலரும் நாட்டைவிட்டுத் தப்பியோடுவோராக மாறியுள்ளனர். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நாட்டினராக, சமூகத்தினராக, மனிதர்களாக, இலங்கையர்களை உருவாக்கியுள்ளது. இந்தப் போக்கும் பண்பும் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல. உண்மையில், நாடோ, வீடோ நெருக்கடிக்குள்ளானால், அதை மீட்பதற்கு அதனுடைய புதல்வரும் புதல்வியரும் முன்வர வேண்டும். வீட்டை விட்டும் நாட்டை விட்டும் தப்பியோடுவதல்ல. திரைகடலோடித் திரவியம் தேடலாம்தான். அப்படியானால் அவ்வாறு தேடித் திரட்டிய திரவியத்தோடு அவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் திரும்ப வேண்டும். அப்படித்தான் பிற நாடுகளில் நடந்துள்ளன. இரண்டாம் உலகப்போரில் அழிவைச் சந்தித்த ஜப்பான் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. அதற்காக ஜப்பானிய மக்கள் நாட்டைவிட்டுத் தப்பியோட முற்படவில்லை. தேசமாகத் திரண்டு நாட்டைக் கட்டியெழுப்பினர். இப்படிப்பல சமூகங்கள் வரலாற்றில் உள்ளன. ஆனால் இலங்கையிலோ நிலைமை வேறு. இங்கே அரசாங்கமே மக்களைத் தப்பியோடத் தூண்டியது. கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் இது பகிரங்கமாகவே நடந்தது.
ஆக ஒருபக்கம் நாட்டை விட்டுத் தப்பியோடுவோரையும் படித்தவர்களுக்கு அரசாங்கமே வேலை வழங்கவேண்டுமெனச் சிந்திப்போரையுமே நாடு உருவாக்கியுள்ளது. அதாவது நாட்டை மீட்போருக்குப் பதிலாக, அதை மூழ்கடிப்போராக.
இதேவேளை ஒரு பக்கம் வேலையில்லாப் பட்டதாரிகள் என்றால், இன்னொரு பக்கம் வேலையில்லாப் பணியாளர்கள் என்ற நிலையும் உண்டு. வகை தொகையல்லாமல் செய்யப்பட்ட அரசியல் நியமனங்களால், பல பொருத்தமற்ற உத்தியோகத்தர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக வெளிக்கள உத்தியோகத்தர்கள் என்ற பேரில் நியமிக்கப்பட்டோரில் பலரும் உரிய வேலைகளைச் செய்வதுமில்லை. பணியிடங்களில் இருப்பதுமில்லை. அவர்கள் அரசாங்கத்தின் (மக்களின்) சம்பளத்தில் தங்களுடைய தனிப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபோலப் பல பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள் பணிப் போதாமையினால் வேலையற்ற நிலையில் – சும்மா – இருக்கிறார்கள். இதேவேளை பல பணிகளுக்கு ஆட்களே போதாமலுள்ளது. குறிப்பாக தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், சில பாடங்களுக்கான ஆசிரியர்கள், கிராம அலுவலர்கள், சாரதிகள், காவலர்கள் போன்ற பணிகளுக்கான வெற்றிடங்கள் தாராளமாக உள்ளன.
இதனால் மக்களும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேநேரம் பல பணிமனைகளில் தேவைக்கு அதிகமான பணியாளர்கள் உள்ளனர். இதற்குக் காரணம், பணிச் சேர்ப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளாகும். எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேவை என்ற மதிப்பீட்டைச் செய்து, அதற்கேற்ப பணிச் சேர்ப்பைச் செய்தால் இந்தக் குறைபாடும் பிரச்சினையும் நேராது.
அதற்குப் பொருத்தமான கல்வித் தகமை, துறைசார் படிப்பு போன்றவை அவசியமாகும். அதற்கமைய பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்களை வழிப்படுத்தவும் அறிவூட்டவும் வேண்டும். அதற்கு முன் தொழிற் கல்விக்கேற்ற வகையில் பிள்ளைகளை வழிப்படுத்துவதற்குப் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டப்படுவது அவசியமாகும்.
படிப்பு அல்லது கற்கை என்பதும் அறிவூட்டல் என்பதும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வளர்ச்சியோடு, சமூக அபிவிருத்தியையும் அதன் மூலமாகத் தேச வளச்சியையும் நிறைவு செய்வதற்கானதாக அமைய வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதே சிறந்த கல்விக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையுமாகும். இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
ஆனால், எமது நாட்டில் துரதிருஷ்டவசமாக அப்படியான நிலை இல்லை. இங்கே பல பாடசாலைகளிலும் மாணவர்கள் மீது விருப்பத்துக்கு அப்பாலான – தேவைக்கு வெளியேயான பாடங்கள் திணிக்கப்படுகின்றன.
இப்படியே இந்தப் பிரச்சினையின் நீளம் பெரியது. இதை மேலும் வளர விடக்கூடாது. இதேவேளை பல்கலைக்கழக அனுமதியின்போதோ, கற்கையின்போதோ எவர் ஒருவருக்கும் அரச நிறுவனங்களில் தொழில். வழங்கப்படும் என எங்கும் சொல்லப்படவில்லை. ஆகவே யாரும் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முடியாது. ஆனால், சுயாதீனமாகத் தொழில்களைத் தொடங்கவும் நடத்தவும் கூடிய பொருளாதாரக் கொள்கையும் உத்தரவாதமும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும். அப்படியான சூழல் கனிந்தால் அரசுக்கு நெருக்கடிகளும் குறையும். நாடும் முன்னேற்றமடையும் பட்டதாரிகளும் புதிய சூழலில் தம்மை ஈடுபடுத்துவர்.
பிற நாடுகள் அனைத்திலும் இதுவே நடைமுறையாக உள்ளது. மாற்றங்களை உருவாக்க விரும்பும் அரசாங்கம் இதை மனதில் கொள்வது அவசியம். மக்களைப் பாதுகாப்பதென்பது, அவர்களைச் சரியான திசையில் வழிநடாத்துவதேயாகும். அதுவே வேண்டிய மாற்றம். அதுவே தேவையான பணி. அதுவே விடுதலைக்கான, நெருக்கடியிலிருந்து தீர்வுக்கான வழி.
கருணாகரன்