ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஏற்பாடுகளுக்கு அரசியல் கட்சிகள் தயாராகத் தொடங்கியுள்ளன.
2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாரான போதும், அப்போது ஆட்சியிலிருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைத் தடுத்து நிறுத்தியது. பொருளாதார நிலைமைகளைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தப் போதியளவு பணம் இல்லையெனக் கூறி தேர்தலை நடத்த அன்றைய அரசு இடமளிக்கவில்லை.
அது மாத்திரமன்றி, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரைப் பயன்படுத்தி தேர்தலுக்கான முட்டுக்கட்டையை கடந்த அரசு ஏற்படுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருந்தபோதும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாமல் விட்டமை அடிப்படை உரிமை மீறல் என்றும், மிக விரைவில் இதற்கான தேர்தலை நடத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
கடந்த வருட இறுதிக் காலாண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன நடத்தப்பட்டமையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வருடத்தின் முதல் காலாண்டுக்குள் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆணைக்குழு உத்தியோகபூர்வ அறிவித்தல்களை விடுக்காதபோதும், அரசியல் கட்சிகள் தேர்தலுக்காகத் தம்மை ஆயத்தப்படுத்தத் தொடங்கியுள்ளன.
அதேநேரம், 2023ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டமையால், அது குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டியிருந்தது. இது பற்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், முன்னர் கோரிய வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதற்கு அமைய, முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோருவது குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டு அது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளது. இதன் அடிப்படையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆணைக்குழுவினால் ஆரம்பிக்க முடியும்.
மீள்கட்டமைக்கப்படும் கட்சிகள்:
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்கள் காரணமாக பழம் பெரும் கட்சிகள் எனக் கூறப்படும் பல கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி பிரதான எதிர்க்கட்சிகளாகவிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்றவையும் கடுமையான பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்தன. இந்த நிலையில் கட்சிகள் தற்போது தம்மை மீளக்கட்டமைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தயாராகத் தொடங்கியுள்ளன.
கடந்த காலங்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்த, தற்பொழுது செல்ல வழியில்லாமல் தவிக்கும் முன்னாள் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தம்முடன் மீண்டும் இணைந்துகொள்ள முடியும் என சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி தம்மை நம்பிச்சென்ற பலரைக் கைவிட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் துமிந்த திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியும் மறுசீரமைப்புக்குச் சென்றுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளராகவிருந்த பாலித ரங்கே பண்டார பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவை அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சென்றிருந்த நிலையிலேயே பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்படவுள்ள பேச்சுவார்த்தை:
எதிர்க்கட்சித் தலைவருடன் இருந்து விலகிச் செல்லும்போது பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை முன்னிலைப்படுத்தி இரு கட்சிகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து செயற்படுவதா தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கடந்த பொதுத்தேர்தல் காலத்திலும் அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடியிருக்கவில்லை.
எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகள் இரு கட்சிகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானவையாக அமையும். அதேபோல, ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது மற்றும் கட்சிக்குள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கட்சியின் தலைமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கட்சியில் பதவிகளை வழங்கும்போது நீண்ட காலம் இருந்தவர்களுக்குப் பதவிகளை வழங்காது, பரசூட்டில் வந்திறங்கியவர்களுக்கு பதவிகளை வழங்கி அவர்களை வளர்த்து விடுவது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தி கட்சிக்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் அவசியத்தை இம்தியாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கீழ் மட்டங்களுக்கிடையிலான உறவை விரிவாக்கி மற்றும் தொடர்பாடலை விரிவுபடுத்தியே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனூடாகவே கட்சியைப் புனரமைக்க முடியும். இதற்காக கட்சியின் சித்தாந்தம் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் குழுவாக மேலிருந்து கீழாக செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒன்று திரள்வது அவசியம்.
கட்சி என்ற ரீதியில் அதற்கேற்ப முடிவுகளையும் எடுக்க வேண்டும். கட்சிப் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது முடிந்தவரை கருத்து ஒருமைப்பாட்டை பெறுதல் மற்றும் முதல்நிலை தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களில் கட்சியின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும். இந்த மறுசீரமைப்புக்காக 12 பரிந்துரைகளை இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு விடயத்தில் கட்சிக்குள் நீண்ட இழுபறி நிலவியது. குறிப்பாக கடந்த காலங்களில் அரசியலில் இருந்து விலகியிருந்த சுஜீவ சேனசிங்க ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்துக்காக மீண்டும் தீவிர அரசியலில் இணைந்தார். இதன் பின்னர் பொதுத்தேர்தலிலும் பிரசாரம் செய்திருந்தார். இந்தக் காரணத்திற்காக கட்சியில் பல வருடங்களாகத் தொடர்ந்திருந்த பலரையும் விடுத்து சுஜீவ சேனசிங்கவுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இது போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இம்தியாஸ் இக்கடிதத்தை எழுத்தியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்று, ஒவ்வொரு அரசியல் கட்சியும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தம்மை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.
பி.ஹர்ஷன்