Home » அழிவிலிருந்து மீண்டு புதிய பரிமாணத்தில் NPP யாக விஸ்வரூபமெடுத்த ஜேவிபி
காத்திருக்கும் களம்

அழிவிலிருந்து மீண்டு புதிய பரிமாணத்தில் NPP யாக விஸ்வரூபமெடுத்த ஜேவிபி

by Damith Pushpika
January 5, 2025 6:52 am 0 comment

இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மலையக மக்களின் மீட்சிக்கெனவும் ஈழமக்களின் விடுதலைக்காகவும் என்று உருவாக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்புக்கு (EROS) இது 50 ஆவது ஆண்டு.

1975 ஜனவரி 03 ஆம் நாள் இளையதம்பி இரத்தினசபாபதி (ரட்ணா) உடன் அழகிரி, Dr. ஆறுமுகம், Dr. நித்தியானந்தம், அருளர் – அருட்பிரகாசம், நேசதுரை (சங்கர் ராஜி), குகனேந்திரன் (குகன்), மனோகரன், உட்பட இன்னும் சிலர் இணைந்து ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students) என்ற அமைப்பை லண்டனில் உருவாக்கினர்.

மார்க்சிஸ, லெனினிஸ சிந்தனைகளை வழிகாட்டியாகக் கொண்ட இவ்வமைப்பு, பருத்தித்துறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டக்களப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ‘ஈழம்‘ எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பின்னர் ஈழப்புரட்சி அமைப்பாக ஈரோஸ் – EROS) பரிணாமம் அடைந்தது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் (EPRLF) தலைவரான க.பத்மநாபா மற்றும் சுரே‌ஷ் பிரேமச்சந்திரன், சின்னவன், குணசேகரன், சாந்தன் (தம்பா) (குண்சி) தற்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் தமது விடுதலைப் போராட்டத்துக்கான பயணத்தை ஈரோஸிலேயே ஆரம்பித்திருந்தனர். பின்னர் இந்த அமைப்பிலிருந்து அரசியல் முரண்பாடு காரணமாக மேற்கூறிய தரப்பினர் பிரிந்து சென்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி (EPRLF) யை உருவாக்கினர். இவர்கள் அனைவரும் ஈரோஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஈழமாணவர் பொது மன்றத்தின் செயற்பாட்டை முன்னெடுத்தவர்களாவர்.

ஈரோஸ் அமைப்பிலிருந்த விச்வேஸ்வரன், அதிலிருந்து விலகி விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டார்.

ஆனாலும் ஈரோஸ் இயக்கம் வலுவான முறையில் தன்னுடைய போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டது. வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, நேசன் (விக்னேஸ்வரன்) ஆகியோர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களோடு சுந்தர் (கிறிஸ்தோபர் – பிரான்ஸிஸ்), அன்னலிங்கம், சண்முகநாதன் (சண்), நிரஞ்சன் (கரன்), மாதவன் (கைலாஸ்) ரவி சுந்தரலிங்கம், பவானந்தன், சின்னபாலா (பாலநடராஜன்), அருளர், பர்ராஜசிங்கம் (பரா), வரதராஜன் (IPT – வரதன்) இராஜநாயகம், குகன், ராஜேந்திரா, ராஜா, ரமேஸ், ஜீவன், முகிலன், கபிலன், கருணா, ராம், கர்ணன், பஸீர், தில்லை, யோசேப் எனப் பலர் ஈரோஸின் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக இருந்தனர்.

1970 களிலிருந்து 1985 வரையிலான காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பன்னாட்டு ரீதியாக அரசியற் தொடர்பாடற் கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்தது. 1975 இலிருந்த 1990 வரையில் இந்தியாவிலும் ஈரோஸ் இயக்கத்தின் செயற்பாட்டுக்களமிருந்தது. அதாவது பின்தளமாக.

தமிழ், முஸ்லிம், மலைய மக்களுடன் முற்போக்குச் சிந்தனையைக் கொண்ட சிங்கள மக்களையும் போராட்டத்தில் இணைத்துச் செல்வதே ஈரோஸின் செல்நெறியும் செயல்நெறியுமாகும். வர்க்க விடுதலைக்கு இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற வேறுபாடுகள் இல்லை என்பதே ஈரோஸின் நிலைப்பாடு. அதேவேளை இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைபெறுதலை அது முதன்மைப்படுத்தியிருந்தது.

மாக்ஸிஸ, லெனினிஸ அடிப்படையில் புரட்சிகர அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக 1970 களில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் போராட்ட அனுபவத்தை ஈரோஸ் படிப்பினையாகக் கொண்டிருந்தது. அந்தப்போராட்டம், வர்க்க விடுதலையை மையப்படுத்தி, முழு இலங்கையையும் தழுவியதாக விரிவடைந்திருக்க வேண்டும். அப்படி அமைந்திருந்தால், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கான அவசியமே ஏற்படாமல் கூடப் போயிருக்கலாம். இலங்கை ஒரு மோசமான உள்நாட்டுப் போரில் சிக்காமல் தப்பியிருக்கும் என்றார் இரத்தினசபாபதி. ஆனால், அப்படி அமையாமல் அது சிங்கள மக்களின் பங்களிப்பையே முதன்மையாகக் கொண்டிருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது போராட்ட முயற்சி முறியடிக்கப்பட்டபோது இதைக்குறித்த தன்னுடைய விமர்சனப் பார்வையை முன்வைத்த ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் இ.இரத்தினசபாபதி, முழு இலங்கையையும் விடுதலைக்குரியதாக மாற்றும் ஒரு சிந்தனை வளர்த்தெடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார். இதைக்குறித்து ‘ஈழவர் இடர்தீர‘ என்ற நூலில் அவர் விரிவாக இதைப்பற்றி எழுதினார்.

ஈழவிடுதலையை முன்னெடுத்த ஈரோஸ் இயக்கத்தில் தமிழ், முஸ்லிம், மலையக இளைஞர்களும் யுவதிகளும் பெருமளவில் இருந்திருந்தனர். சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் நெருக்கமான உறவை ஈரோஸ் பேணியது. 1980 களின் முற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினர்களுடன் அது சென்னையில் ஒரு சந்திப்பையும் செய்திருந்தது. இந்தச் சந்திப்பில் சோமவங்ச அமசிங்க, கே.டி. லால்காந்த உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அதற்கப்பால் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள இடதுசாரி அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், உறுப்பினர்களுடன் எல்லாம் நெருக்கமான – சாத்தியமான உறவைக் கொண்டிருந்தது. 1983 இல் நடந்த இனவன்முறையோடு ஏனைய ஈழ விடுதலை இயக்கங்களின் செயற்பாட்டு முறைமையில் உண்டாக்கிய மாற்றம் ஈரோஸையும் பாதித்தது. அதனுடைய தொலைநோக்குடனான அரசியற் செயற்பாடும் செல்நெறியும் நெருக்கடிக்குள்ளாகியது. தவிர்க்க முடியாத சூழலில் ஆயுத நடவடிக்கைகளில் ஈரோஸ் கவனம் செலுத்தியது.

இந்தச் சூழலில் 1985 இல் ஈழ விடுதலை இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றோடு ஈரோஸூம் இணைந்து ஈழதேசிய விடுதலை முன்னணி (ENLF) என்ற அமைப்பை உருவாக்கியது. 1985 இல் பெங்களுரிலும் 1987 இல் புதுடெல்லியிலும் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஈரோஸ் இயக்கமும் பங்கேற்றது.

இலங்கை – இந்திய உடன்படிக்கையை அடுத்து ஆயுதங்களைக் கையளித்த ஈரோஸ் இயக்கம், பின்னர் ஜனநாயக அரசியற் பாதையில் பயணித்தது. இதற்கென அது ‘ஈழவர் ஜனநாயக முன்னணி‘ என்ற அரசியற் கட்சியை ஸ்தாபித்தது. ஈழவர் ஜனநாயக முன்னணி, 1989 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் போட்டியிட்டு, 13 ஆசனங்களைக் கைப்பற்றியது. தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவருமாகச் சேர்த்து 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் வகித்தனர்.

அன்று வடக்குக் கிழக்கில் முதன்மையிடத்தை ஈரோஸே (ஈழவர் ஜனநாயக முன்னணியே) பெற்றிருந்தது. தனக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்பினராக மலையகத்தைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவரை நியமித்தது. இது மலையக மக்களுடைய விடுதலையையும் தன்னுடைய அரசியல் இலட்சியப் பயணத்தில் இணைத்துக் கொண்டமையை ஈரோஸ் மனதிற்கொண்டு செயற்பட்டதற்கான அடையாளம் என்று அப்பொழுது பத்திரிகைகள் குறிப்பிட்டன. மலையக மக்கள் தொடர்பான இன்னொரு கவனப்படுத்தலாக, அந்த மக்களை நாடற்றவர் என்ற அரசியல் அநீதியிலிருந்து விடுவிக்க வேண்டும் என ஈரோஸ் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தியது. அதில் வெற்றியும் அடைந்தது.

இதேவேளை 1988 இல் புதிதாக உருவாகிய வெலிஓயா பிரதேசம் குறித்து ஈரோஸ் ஒரு வெளியீட்டை வெளியிட்டது. அத்துடன் 1977 இல் தென்னிலங்கையில் இடம்பெற்ற இன வன்முறையினால் பாதிக்கப்பட்டு கொழும்பிலிருந்து வெளியேறி, லங்கா ராணி என்ற கப்பலில் வடக்கு நோக்கி அகதிகளாகச் சென்ற மக்களின் துயரக் கதையை லங்கா ராணி எனற பெயரில் ஒரு நாலாக ஈரோஸ் வெளியிட்டது. அருளர் அதை எழுதியிருந்தார். மலையக மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாற்றையும் அந்த மக்களுடைய வாழ் நிலையையும் வெளிப்படுத்தும் விதமாக இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் என்ற நூலையும் ஈரோஸ் வெளியிட்டது. இவ்வாறு அரசியல் ரீதியாகப் பல வெளியீடுகளை அந்தக் காலப்பகுதியில் ஈரோஸ் இயக்கம் வெளியிட்டது. ஆனால், அது ஒரு போதுமே இனவாதத்தையோ பால், மற்றும் மத, மொழி பேதங்களையோ முன்னிறுத்தவில்லை. அவ்வாறு பேதப்படுத்துவதை எதிர்த்தது.

1990 இல் நிலவிய அரசியல் நெருக்கடிச் சூழலில் (விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அழுத்தத்தினால்) ஈரோஸ் இயக்கம் உத்தியோக பூர்வமாகக் கலைக்கப்பட்டது. அதனுடைய உறுப்பினர்கள் வெளியேறிச் சென்றனர். ஒரு சிறிய தரப்பினர் மட்டும் கொழும்பில் சில காலம் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பாலகுமாரன், பரா உள்ளிட்ட சிலர் மட்டும் சுயாதீனமாக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டனர்.

2009 க்குப் பிறகு உருவாகிய புதிய அரசியற் சூழலில் ஈரோஸ் இயக்கம் மீளவும் இயங்கத் தொடங்கியது. ஆனால், அது ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான கட்டமைப்பாக இல்லாமல் இரண்டு, மூன்று அணிகளாகச் செயற்படத் தொடங்கியது. தேர்தல்களிலும் போட்டியிட்டது. இருந்தும் பாராளுமன்றத் தேர்தல்களில் அதனால் வெற்றியீட்ட முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியீட்டியது. ஈரோஸ் இயக்கத்தின் செல்வாக்கு மண்டலம் பெரும்பாலும் கிழக்கையும் மலையகத்தையுமே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை புலம்பெயர்ந்திருக்கின்ற ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்னெடுத்தனர். அவர்கள் ஈரோஸ் என்ற அடையாளத்துடன் அதைச் செய்யவில்லை என்றாலும் அந்த உணர்வுடன் அத்தகைய பணிகளை முன்னெடுத்தனர். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பின்தங்கிய மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மேலும் தொடர்கின்றன.

1990 இலிருந்து 2024 க்கு இடைப்பட்ட 34 ஆண்டுகளில் ஈரோஸ் அமைப்புக்கு இரண்டு வகையான அரசியல் சூழல் அமைந்தது. 1990 – 2009 வரையான சூழல் ஈரோஸ் தடைப்பட்டிருந்த காலம் எனலாம். ஆனால், ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் எந்தச் சூழலையும் எதிர்கொண்டு இயங்க வேண்டியது என்பது அரசியல் அடிப்படையாகும். ஆனாலும் அந்த அடிப்படையை ஈரோஸ் பின்பற்றத் தவறி விட்டது என்ற விமர்சனம் உண்டு. 2009 க்குப் பிறகான அரசியல் சூழலில் ஈரோஸ் தன்னை மீள்நிலைப்படுத்தியிருப்பதற்கான வெளியும் அவசியமும் இருந்தது. இருந்தும் அதை அது செய்யத் தவறியது. கலைக்கப்பட்ட ஒரு அமைப்பு எப்படி தன்னுடைய வரலாற்றுப் பொறுப்பை முன்னெடுத்திருக்க முடியும் என்ற ஆழமான கேள்வியும் இந்த இடத்தில் உண்டு.

வரலாறு எப்போதும் ஒரே விதமாக இருப்பதில்லை. வரலாற்றுச் சூழலை விளங்கிக் கொண்டு, அதற்குரிய பணியை – பொறுப்பை – ஏற்க வேண்டியது முற்போக்கு (புரட்சிகர) அரசியலாளரின் கடமையாகும். ஜே.வி.பி இயக்கம் இரண்டு தடவை மிக மோசமான ஒடுக்குதலை – அழிவைச் சந்தித்தது. ஆனாலும் அது அதிலிருந்து மீண்டு, இன்று தன்னைப் புதிய பரிமாணத்தில் NPP யாக முன்னிறுத்தியுள்ளது. அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளது. அவ்வாறு ஈரோஸூம் (அதனுடைய உறுப்பினர்களும்) தன்னுடைய வரலாற்றுப் பாத்திரத்தை வகித்திருக்க வேண்டும். புரட்சிகர அரசியல் விடுதலைக்காக – அரசியல் மாற்றத்துக்காக – உருவாகிய அமைப்பொன்றின் 50 ஆண்டுகாலம் என்பது வரலாற்று ரீதியாக முக்கியமானது. அதற்குரியவகையில் ஈரோஸின் வரலாற்றுத் தொடக்கம் இருந்தபோதும் வரலாற்றுப் பங்களிப்பையோ, வரலாற்று முக்கியத்துவத்தையோ ஈரோஸ் பெறவில்லை என்பது துயரமானது. இடையில் ஏற்பட்ட அரசியல் – இராணுவ நெருக்கடிகள் ஈரோஸின் வரலாற்றுப் பாத்திரத்தில் பெரும் நெருக்கடியை – நசிவை – உண்டாக்கியது என ஒரு வாதத்தை முன்வைத்தாலும் அதைக் கடந்து அல்லது அதையெல்லாம் எதிர்கொண்டு ஈரோஸ் செயலாற்றியிருக்க வேண்டும். தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த பிராந்திய அரசியல் (இனத்துவ அரசியல்) நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதிலிருந்து அவற்றினால் மீள முடியாதுள்ளது. இந்தத் தளத்தில் அவற்றால் வெற்றியைப் பெறவும் முடியவில்லை இந்தச் சூழலில் ஈரோஸின் பங்களிப்பு அவசியமாகும்.

ஐம்பது ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஈரோஸ் அமைப்பு, தீவிர அரசியலில் செயற்பட்ட காலம், 10 ஆண்டுகள்தான். இடைவிட்ட 34 ஆண்டுகாலத்தை எதிர்வரும் காலத்தினால்தான் நிரப்ப முடியும். அதற்கான களம் திறந்தே உள்ளது. புதிய பரிணாமத்துக்கும் பரிமாணத்துக்குமாக.

கருணாகரன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division