வழக்கம்போல் 2025 ஆம் ஆண்டும் இலங்கை விளையாட்டுக்கு பரபரப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. இலங்கை கால்பந்து மற்றும் கிரிக்கெட் கடந்த ஆண்டு சாதகமான முடிவுகளை தந்த நிலையில் இந்த ஆண்டு அதில் மேலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். தடகள போட்டிகளில் கடந்த ஆண்டு பெரிதாக சாதிக்காதபோதும், இளம் வீரர்களின் வருகை இந்த ஆண்டு ஓரளவுக்கு நம்பிக்கையை தரக்கூடும். ரக்பி, வலைப்பந்து போன்ற விளையாட்டுகள் இலங்கையால் சர்வதேச மட்டத்தில் சாதிக்க முடியுமான விளையாட்டுகள் என்பதால் 2025 இல் அந்த விளையாட்டுகள் தொடர்பில் ஒரு கண் வைத்திருப்பது நல்லது.
தடகளம்
கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி இலங்கை இன்னும் சாதிக்கும் மட்டத்திற்கு வரவில்லை என்பதைக் காட்டியது. இன்னும் பங்கேற்போடு ஆறுதல் அடையும் மட்டத்திலேயே இலங்கை ஒலிம்பிக் விளையாட்டுகள் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக 2025 இல் இலங்கை தடகள வீர, வீராங்கனைகள் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்கப் போகிறார்கள். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருந்தாலும் அதற்கான கடுமையான பயணத்தின் ஆரம்பப் புள்ளியாக பார்த்தாலேயே ஓரளவுக்கு சாதிக்க முடியும்.
இந்த ஆண்டிலும் இலங்கை பங்கேற்கும் மிகப்பெரிய தடகள போட்டியாக எதிர்வரும் செப்டெம்பர் 13–21 ஆம் திகதிகளில் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறும் உலக தடகள சம்பியன்சிப் போட்டியை குறிப்பிடலாம்.
இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன், மத்திய தூர ஓட்ட வீராங்கனை தரூஷி கருணாரத்ன ஆகியோரால் இதில் முயன்றால் சாதிக்க முடியும்.
அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்தியாவின் ராச்சியில் நடைபெறப்போகும் தெற்காசி சிரேஷ்ட தடகள சம்பியன்சிப் போட்டி இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு பிராந்திய மட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக கருதலாம். உலக அரங்கில் எப்படி இருந்தபோதும் பிராந்திய மட்டத்தில் தடகளத்தில் இலங்கை தனது ஆதிக்கத்தை இன்னும் விட்டுக்கொடுக்கவில்லை என்பதை நிரூபிக்க இந்த போட்டி போதுமானது.
அதேபோன்று இந்த ஆண்டில் இலங்கை தடகள வீர, வீராங்கனைகள் இன்னும் இரு முக்கிய சர்வதேச போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். அதில் ஒன்று சீனாவின் நான்ஜிங்கில் எதிர்வரும் மார்ச் 21–23 ஆம் திகதிகளில் நடைபெறும் உலக தடகள உள்ளக சம்பியன்சிப் போட்டி. மற்றது சீனாவின் குவான்சுவில் மே 10, 11இல் நடைபெறப்போகும் உலக தடகள அஞ்சலோட்ட சம்பியன்சிப் போட்டி.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்வரும் பெப்ரவரியில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறப்போகும் தெற்காசிய விளையாட்டுப் போட்டி என்பது இலங்கைக்கு மிக முக்கியமானது. அதேபோன்று எதிர்வரும் செப்டெம்பரில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியும் நடைபெறப்போகிறது. அதில் இலங்கையின் பங்கேற்பு எதிர்காலத்திற்கு தீர்க்கமானதாக இருக்கும்.
தாய்லாந்தின் பட்டாயாவில் எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் ஆசிய மரதன் சம்பின்சிப் போட்டியில் இலங்கையின் பங்கேற்பை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் உறுதி செய்திருக்கிறது. தவிர இலங்கை தடகள வீர, வீராங்கனைகள் அவுஸ்திரேலிய, சீன தாய்ப்பே மெய்வல்லுனர் போட்டிகள், ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.
தவிர, உள்ளூர் மட்டப்போட்டிகள் வழக்கம்போல் இடம்பெறும்.
கால்பந்து
இலங்கை கால்பந்து கடந்த பல ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்த நிலையில் ஓரளவுக்கு சாதித்த ஆண்டாக கடந்த ஆண்டை குறிப்பிடலாம். சர்வதேச மட்டத்தில் பல போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கால்பந்து அணி பல வெற்றிகளையும் சேர்த்தது.
இதனால் கடந்த 12 மாதங்களுக்குள் உலக கால்பந்து சம்மேளன தரவரிசையில் இலங்கை கால்பந்து அணி 205 ஆவது இடத்தில் இருந்து 200 ஆவது இடத்திற்கு முன்னேற முடிந்ததே பெரும் சாதனை தான். இந்நிலையில் 2025 இல் குறைந்தது எட்டு சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 2027 இல் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றில் ஆடும் இலங்கை கால்பந்து அணி டி குழுவின் இறுதிச் சுற்றில் எதிர்வரும் மார்ச் 25 தொடக்கம் நவம்பர் 18 வரையில் ஆறு சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி இலங்கை அணி தாய்லாந்தை எதிர்கொள்ளப்போகிறது. இந்தப் போட்டி தாய்லாந்தில் நடைபெறும். அதேபோன்று எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி சீன தாய்ப்பேயில் அந்நாட்டு அணியை இலங்கை எதிர்க்கப்போகிறது. தொடர்ந்து ஜூன் 10 ஆம் திகதி சீன தாய்ப்பேயை இலங்கை சொந்த மண்ணில் எதிர்த்தாடும்.
இலங்கையில் நடைபெறும் மற்றொரு சர்வதேச போட்டியாக ஒக்டோபர் 9 ஆம் திகதி துர்க்மனிஸ்தானுடன் இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தும். தொடர்ந்து ஒக்டோபர் 14 இல் துர்க்மனிஸ்தான் சென்ற அந்த அணியை இலங்கை எதிர்த்தாடும். கடைசியாக நவம்பர் 18 ஆம் திகதி தாய்லாந்து அணியை சொந்த மண்ணில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.
2027 ஆசிய கிண்ணத்திற்காக எஞ்சியிருக்கும் ஆறு இடங்களுக்கு மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 24 அணிகளும் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டே ரவுன்ட் ரொபின் அடிப்படையில் போட்டிகளில் ஆடுகின்றன. குழுநிலையில் வெற்றிபெறும் அணிகள் மாத்திரமே ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெறும்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை கால்பந்து அணி அதிக போட்டிகளில் பங்கேற்றதற்கு என்ன உள்ளூர் மட்டத்தில் கடந்த பல ஆண்டுகளில் முக்கிய போட்டித் தொடர்கள் நடத்தப்படாமல் உள்ளன.
இந்நிலையில் உள்ளூர் மற்றும் இளையோர் கால்பந்து போட்டிகளை ஜனவரி பிற்பகுதியில் ஆரம்பிப்பதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக சுப்பர் லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயாராகி வருவதாக தெரிகிறது.
ஜனவரி முடிவில் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான தயார்நிலையை 14 சம்பியன்ஸ் லீக் கழகங்களும் வெளியிட்டுள்ளன. ஆனால் சுப்பர் லீக் கழகங்கள் தயார்படுத்தலுக்கு மேலும் கால அவகாசம் கேட்டிருப்பதாக தெரிகிறது.
புதிய இளையோர் போட்டியாக ‘வை19 லீக்’ தொடரை 55 பிராந்திய லீக்குகளிலும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தவிர இளையோர் லீக், பாடசாலை போட்டிகள், மகளிர் கால்பந்து போட்டிகள், புதிய மகளிர் லீக், பயிற்சியாளர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மத்தியஸ்தர் பயிற்சி திட்டங்களையும் நடத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டிருக்கிறது. இவை அனைத்தும் இலங்கை கால்பந்து எதிர்காலத்திற்கு தீர்க்கமானது என்பதை புரிந்து செயற்பாட்டால் நல்லது.
கிரிக்கெட்
2025 ஆம் ஆண்டின் முக்கிய கிரிக்கெட் நிகழ்வாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை குறிப்பிடலாம். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் இந்தத் தொடருக்கு எட்டு அணிகள் பங்கேற்கின்றன. என்றாலும் இலங்கை அணியால் இந்தத் தொடருக்கு தகுதி பெற முடியாமல்போனது.
அதேபோன்று ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறப் பெறப்போகிறது. இதற்கு தென்னாபிரிக்கா ஏற்கனவே தகுதி பெற்றிருக்கும் நிலையில் இலங்கை அணிக்கான வாய்ப்பு மிகக் குறுகியது. சாகசம் ஒன்று நிகழ்ந்தாலே சாத்தியம் உண்டு.
டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இலங்கை அதிக வாய்ப்பு இருந்தது. என்றாலும் கடந்த நவம்பர், டிசம்பரில் தென்னாபிரிக்கா சென்ற இலங்கை அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் முழுமையாக தோற்றதை அடுத்து அந்த வாய்ப்பை இழந்தது. எனவே இலங்கை லோட்ஸ் செல்வதற்கான எதிர்பார்ப்புக் குறைவு.
மற்றபடி இலங்கை அணி இந்த ஆண்டில் மொத்தமாக நான்கே நான்கு டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடப்போகிறது. இந்த மாத (ஜனவரி) கடைசியில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடும். தொடர்ந்து ஒரு முழுமையான கிரிக்கெட் தொடருக்காக எதிர்வரும் ஜூன், ஜூலையில் பங்களாதேஷ் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அப்போது அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறும்.
மற்றபடி இலங்கை அணி இந்த ஆண்டில் அதிக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலேயே ஆடவுள்ளது. தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி இந்த மாதத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடும்.
அதேபோன்று இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் போக பெப்ரவரி 13 ஆம் திகதி ஒரே ஒரு ஒருநாள்; போட்டியில் ஆடப்போகிறது.
இந்நிலையில் இலங்கை வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தலா மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடப்போகும் இலங்கை அணி அந்தத் தொடர் முடிந்த கையோடு சிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடுகிறது.
அதன் பின்னர் ஒக்டோபர் மற்றும் நவம்பரில் இலங்கை அணி அயர்லாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடும் இலங்கை அணி தொடர்ந்து நவம்பர் கடைசியில் பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடப்போகிறது.
இதில் இந்த ஆண்டி இலங்கை டி20 கிரிக்கெட்டிலும் முக்கியமானது. அதாவது ஆசிய கிண்ண டி20 போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பரில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறப்போகிறது.
இலங்கை மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியமான ஆண்டாக இந்த ஆண்டை குறிப்பிடலாம். மகளிர் உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறப்போகிறது. இதற்கு இலங்கை மகளிர் அணி தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்காது முதல் முறை நேரடி தகுதியை உறுதி செய்திருக்கிறது. எனவே சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் சாதிப்பதானால் இது தான் சந்தர்ப்பம்.
எஸ்.பிர்தெளஸ்