Home » மேட்டுக்குடியினர் இங்கு வந்து அரசியல் செய்வதற்கு எதிரானவன் நான்

மேட்டுக்குடியினர் இங்கு வந்து அரசியல் செய்வதற்கு எதிரானவன் நான்

இலங்கை தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்

by Damith Pushpika
January 5, 2025 6:00 am 0 comment
  • தமிழரசு கட்சியில் பாரிய முறுகல் நிலை காணப்படுகின்றது என நான் சொல்லமாட்டேன். உள் முரண்பாடுகள் இருக்கின்றதென்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
  • வெளியில் இருந்து விமர்சனம் செய்பவர்களை கணக்கில் எடுக்கப் போவதில்லை.
  • பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி குறிப்பாக வடமாகாணத்தில் பின்னடைவை சந்தித்ததென்பது உண்மை தான். ஆனால், அது தனியாக தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல.

ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு, தமிழரசு கட்சியை மலினப்படுத்தும் நிலைக்கு நாங்கள் போகமாட்டோம். இன்றுள்ள நிலையில், தமிழரக்சுகட்சி தான் தனித்துவமாக இருக்கின்றது. அந்த நிலையை பேணுவதில் இருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும், கீழிறங்கமாட்டோம். எங்களுடன் இருந்தவர்கள் “விரோதிகள் அல்ல”. பேச வேண்டும் என்ற நிலை வந்தால், பேசுவோம். என இலங்கை தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வி பின்வருமாறு:-

கே:- தமிழரசு கட்சியில் பாரிய முறுகல் நிலை காணப்படுகின்றதே, அது கட்சியை மலினப்படுத்தாதா?

பதில்:- தமிழரசு கட்சியில் பாரிய முறுகல் நிலை காணப்படுகின்றது என நான் சொல்லமாட்டேன். உள் முரண்பாடுகள் இருக்கின்றதென்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் ஓரளவிற்கு கடந்து தான் வந்திருக்கின்றோம். சுமூகமாக செயற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம். ஆகையால், பாரியளவில் எங்களைப் பாதிக்காது. ஒரு ஜனநாயக கட்சிக்குள் அவ்வாறான முறுகல் எழுவதைத் தவிர்க்க முடியாது.

கே:- கூட்டமைப்பாக இருந்த கட்சிக்குள் தற்போது, திசைக்கு ஒன்றாகப் பிரிந்து, முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டமைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் காரணம் என சமூக வலைத்தளங்களிலும், ஏனைய பல இடங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:- இந்த குற்றச்சாட்டைப் பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை. ஒரு தனி மனிதனால், எல்லாமே செய்யலாம் என்றால், அரசியலும், கட்சிகளும் தேவையில்லை. அதற்கு மேல் அவற்றை விமர்சிப்பது பொருத்தமல்ல.

கே:- அமரர் இரா. சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சிக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், கட்சியை பிளவுபடாமல் நடுநிலையாக கொண்டு சென்றதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து தமிழரசு கட்சி இன்னும் பாரிய பின்னடைவை சந்திக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளதே?

பதில்:- பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி குறிப்பாக வடமாகாணத்தில் பின்னடைவை சந்தித்ததென்பது உண்மை தான். ஆனால், அது தனியாக தமிழரசு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. தமிழ் தேசியம் பேசுகின்ற ஏனைய கட்சிகளும் பின்னடைவைத் தான் சந்தித்திருக்கின்றன. இதனை ஒரு பொதுநிலையாகத்தான் நான் பார்க்கின்றேன். கட்சிகளுக்கும், சுயேச்சைக் குழுக்களுக்கும் இங்கே ஏற்பட்ட முரண்பாடு தெற்கு அரசியலுக்கும், அரசிற்கும் சாதகமாக அமைந்துவிட்டது.

கே:- சாதகமாக அமைந்துவிட்டதென நீங்கள் கூறுவதை வருங்காலங்களில் மாற்ற முடியுமென நம்புகின்றீர்களா?

பதில்:-நிச்சயமாக, இந்த நிலை இனிமேல் மாற்றடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில், பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சூழ்நிலை இனி தொடர்ந்தும்; இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு. மக்கள் மத்தியில் இப்போது, ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் மாற்றம் ஏற்படும்.

கே:- எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் தமிழரசு கட்சி எவ்வாறு செயற்படும்?

பதில்:- இது என்னுடைய பொதுவான கருத்து என்பதுடன், நான் கட்சிக்குள் வலியுறுத்தி வரும் கருத்தும் கூட, முதலில், தமிழரசுக்கட்சி தன்னுடைய தனித்துவத்தைப் பேணிக்கொள்ளும். அதேமாதிரி ஏனைய கட்சிகளும் தங்களுடைய கட்சியின் தனித்துவத்தைப் பேணிக் கொள்ளலாம். அடிப்படை விடயங்களில் கூட்டாக ஒரு குரலில் பேசலாம். அதுதான் பொருத்தமானது.

கே:- தமிழரசு கட்சிக்குள் இளைஞர்கள் இணைந்து, அவர்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதவாறு முரண்பாடுகள் காணப்படுகின்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றனவே. உண்மையா?

பதில்:- இளைஞர்கள் தமது சிந்தனைக்கேற்றாற் போல செயற்படுகின்றார்கள். வெளியில் இருந்து விமர்சனம் செய்பவர்களை கணக்கில் எடுக்கப் போவதில்லை. ஏனெனில், வாய்ப்பிற்கான கதவு திறந்திருக்கின்றது. எங்களுடைய கட்சியுடன் சேர வேண்டியவர்கள், சேர விரும்புகிறவர்கள் சேரலாம். சேர வேண்டும். ஏற்கனவே, இளைஞர்கள் எமது கட்சிக்குள் இருக்கின்றார்கள்.

கட்சிக்கு வெளியே இருந்து வரும் விமர்சனங்களும், கட்சிக்கு எதிராகவே, கருத்துக்களை வெளியிட வேண்டும் என திடசங்கற்பம்பூண்டு கருத்துக்களை சொல்பவர்களையும் பற்றி அதிகம் அக்கறை கொள்ளத் தேவையில்லை.

கே:- பாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மிக குறைவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எவ்வாறு, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும், அதிகார பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டத்தை வலுப்பெறச் செய்தல் என்பன சாத்தியமாகும்? தமிழரசு கட்சியின் சர்வதேச ரீதியான செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன?.

பதில்: தமிழரசுக் கட்சி, வைராக்கியத்துடன், செயற்படும். பாராளுமன்றில் எமது பிரதிநிதிகள் 8 பேர் இருக்கின்றார்கள். அதைவிட உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறக்கூடும் என நினைக்கின்றேன். அதனால் தான் ஜனநாயக தன்மையில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.

சர்வதேசம் என்பது வெளிநாட்டு அரசாங்கங்கள், தூதுவர்களுடனான தொடர்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

கே:- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் எவ்வாறு செயற்படுகின்றது?

பதில்:- பொருளாதார நெருக்கடி அது தேசிய ரீதியான பிரச்சினை. பொருளாதாரம், வாழ்வாதாரம் சம்பந்தமான நெருக்கடிகளை தடுக்க முடியாமல் இருக்கலாம். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அல்லது, ஜே.வி.பி. அல்லது என்.பி.பி, மாகாண சபைகள் சம்பந்தமாகவோ, 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாகவோ பேசவில்லை.இப்போதைக்கு இதேபோன்று தொடரட்டும். அதுவும் உரிய அரசியலமைப்பு உருவாக்கும் வரையில் என கூறியுள்ளார்கள். தேர்தல் காலங்களில் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி குறிப்பாக பேசவில்லை. தேசிய பிரச்சினைகள் பற்றித்தான் பேசியிருக்கின்றார்கள். ஆகையினால், குறை சொல்ல முடியாது. எமது காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி எதுவுமே பேசவில்லை.

கே:- தமிழரசு கட்சி, ஜனாதிபதியை சந்தித்து தமிழர்களின் தீர்வு விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?

பதில்:- பாராளுமன்ற அமர்வில், சம்பிரதாயபூர்வமாக சந்தித்திருக்கின்றார்கள். பெரியளவில், அரசியல் தீர்வு பற்றிப் பேசப்படவில்லை. ஆனால், இனிமேல் பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும். அந்த நேரங்களில் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால், எமது பாராளுமன்றக் குழு அதன்படி தீர்மானித்து பேசும். அந்தவிடயங்கள் மத்தியஸ்தர் குழுவில் பகிரப்படும். அதன் பின்னர், எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கட்சி தீர்மானிக்கும்.

கே:- எதிர்வரும் தேர்தல்களில், தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள, தமிழரசு கட்சி எவ்வாறான உத்திகளை கையாளவுள்ளது?

பதில்:- மக்கள் மத்தியில் இம்முறை தோன்றிய மாயை அல்லது அலையில் இருந்து, இனத்துவத்தை பேணுவதற்கான செயற்பாட்டை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதை நாங்கள் செய்வோம். உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்கிலும் எமது நிலைப்பாட்டை நாங்கள் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்.

கே:- இந்திய அரசாங்கம் தற்போது மௌனம் காத்திருப்பதுடன், அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்துடன், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் எவ்வித அழுத்தமும் வழங்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. அதை ஏற்றுக்கொள்கின்றீர்கள்? உங்களுடைய கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்:- சர்வதேச நாடுகள் அக்கறை காட்டுவதில் இந்தியா விதிவிலக்கல்ல. முதலாவது, தங்களுடைய நலன்சார்ந்து தான் எந்தநாடும் செயற்படும். இந்தியாவை பொறுத்தவரையில் அவர்களது நலன்சார்ந்து, இலங்கை தான் முக்கியம். அப்படித்தான் அவர்களின் செயற்பாடு இருந்திருக்கின்றது. இப்போதும் இருக்கின்றது. இனியும் இருக்கும் என நம்புகின்றோம். தமிழ் மக்களுக்கான கருத்துக்களை அவ்வப்போது சொல்வதற்கான காரணம் ஒரே இனம். தொப்புள்கொடி உறவு என்று சொல்லக்கூடிய ஒரு இனம் நாங்கள். அங்கு தமிழ்நாடு ஒரு மாநிலமாக இருக்கின்றது. பலமாக இருக்கின்றது. அவர்களுக்கு அயல் உறவு நட்புதான் முக்கியம். சரியோ பிழையோ அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அதேநேரம், இந்தியாவை புறந்தள்ளியோ, தவிர்த்தோ நாங்கள் ஒரு தீர்வையோ, இனப்பிரச்சினைக்கான தீர்வையோ அடைவதற்கான முயற்சியை முன்கொண்டு செல்ல முடியாது. இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு ஊக்குவித்து, இந்தியாவுடன் இணைந்து அல்லது இந்தியாவையும் இணைத்துக்கொண்டு, அவர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு, எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

கே:- எதிர்வரும் காலங்களில் தமிழரசு கட்சி, ஏனைய கட்சிகளுடன் இணைந்து, செயற்பட தயாராக இருக்கின்றதா?

பதில்:- அவரவர்கள் தமது கட்சியின் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஒரு விடயத்தில் ஒன்றாக பேசலாம். ஆனால் பராளுமன்ற தேர்தலில் தனித்தனியாகவே போட்டியிட வேண்டும், அது தான் தொடர்ந்தும் நிலைப்பாடாக இருக்கின்றது. ஆகவே, ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு, தமிழரசு கட்சியை மலினப்படுத்தும் நிலைக்கு நாங்கள் போகமாட்டோம். இன்றுள்ள நிலையில், ஓரளவு தமிழரசுகட்சி தான் தனித்துவமாக இருக்கின்றது. அந்த நிலையை நாங்கள் பேணுவதில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும், கீழிறங்கமாட்டோம். ஆனால், ஏற்கனவே சொன்னது போன்று, இணைந்து செயற்படுவதில் ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே, இணைந்து செயற்பட்டோம். அந்தவகையில், இணைந்து செயற்படலாம்.

கே:- தமிழ் கட்சிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?

பதில்;:- ஏற்கனவே, அவர்கள் எங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் தானே? சிலர் எமது கட்சிக்குள் தலையிடவும் பார்க்கின்றார்கள். அதுவும், நடக்காது. நாங்களாக மற்றவர்களிடம் போக வேண்டிய தேவை கிடையாது. கட்சி தனித்துவமாக தன்மானமான கட்சியாகத் தான் இருக்கப் போகின்றது. ஆனால், எல்லாரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

அவர்கள் எங்களுடன் இருந்தவர்கள் தானே. அவர்கள் “விரோதிகள் அல்ல”. பேச வேண்டும் என்ற நிலை வந்தால், பேசுவோம். நாங்களாக வலிந்து போகவில்லை.

தமிழரசு கட்சியை ஏளனப்படுத்திய காலங்களும் உண்டு. அதை நாங்கள் மறக்க முடியாது.

கே:- தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டு, பிரிந்து சென்ற கட்சிகளுடன் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு இல்லை எனச் சொல்கின்றீர்களா?

பதில்:- வாய்ப்பு இருக்கு. நிச்சயமாக இருக்கு. ஆனால், எங்களை ஏளனப்படுத்தி கீழ்நிலைப்படுத்திய சூழ்நிலையில் தான் சாத்தியமில்லை என்று சொல்கின்றேன். எங்களுடைய நிலையயை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏழுடன் எட்டாக வா என்று சொல்கின்ற அந்த மாதிரியான அணுகுமுறைக்கு நாங்கள் அடிபணியமாட்டோம். அல்லது அடிபணிந்து போகமாட்டோம். அது தான் எங்களின் நிலைப்பாடு

கே:- மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், தமிழரசு கட்சி போட்டியிடுமா? அத்துடன், யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்?

பதில்:- தமிழரசு கட்சி போட்டியிடும். விக்னேஸ்வரன் சொன்னார் மக்கள் தன்னை தெரிவு செய்தவர்கள் என்று. அப்படி ஒன்றும் தெரிவு செய்யவில்லை. அங்கத்தவர்களை தான் மக்கள் தெரிவு செய்வார்கள். அங்கத்தவர்கள் சேர்ந்து தான், முதலமைச்சரை தெரிவு செய்வார்கள். அவர் சொன்னமாதிரி நேரடியாக ஒன்றும் தெரிவுசெய்வதில்லை. மாகாண சபை தேர்தலில் நிச்சயமாக தமிழரசுகட்சி போட்டியிடும். எவ்வாறு என்று கட்சியின், அரசியல் குழு சந்தித்து தீர்மானிக்கும்.

கே:- மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், முதலமைச்சர் வேட்பாளராக வடமாகாணத்தில் உள்ள கட்சி சார்ந்தவர்களை தெரிவு செய்யுமா? அல்லது வேறு இடத்தில் இருந்து இறக்குமதி செய்யுமா?

பதில்:- கடந்த காலத்தில் வட,கிழக்கில் இருப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் வெளியில் இருப்பவர்கள் தான் புத்திசாலிகள் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. அதற்கு நான் எப்போதும் எதிரானவன். மேட்டுக்குடியினர் இங்கு வந்து அரசியல் செய்வதற்கும் நான் எதிரானவன். என்னைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் வேட்பாளரோ யாரோ இந்த மண்ணில் பிறந்தவனாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்தும் வந்து காசுடன் குதிப்பார்கள். அந்தளவுக்கு எமது மக்கள் அரசியல் அறிவற்றவர்கள் அல்ல. இந்த மண்ணோடு, பிறந்து வளர்ந்தவர்களுக்குத் தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தான் பொறுப்புகளுக்கு வரலாம். வர வேண்டும்.

கே:- அந்த நிலைப்பாட்டில் இருந்து தமிழரசு கட்சி மாறாதா?

பதில்:- மாறாது. தன்னாட்சி, சுயாட்சி கேட்கும் போது, சுயகௌரவம் கேட்கும் போது, ஏன் மாற வேண்டும். கட்சி மாறாது. தனிமனிதர் மாறினால் ஒன்றுமே செய்ய முடியாது.

கே:- தமிழரசு கட்சியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே உண்மையா?

பதில்:- பலர் வெளியில் இருந்து பலவாறு பேசுகின்றார்கள். எமது கட்சியில் இருக்கின்ற எவராக இருந்தாலும், நான் கருத்து சொல்ல முடியாது. கருத்துச் சொல்லக்கூடாது.

நேர்காணல்: சுமித்தி தங்கராசா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division