பொருளாதார நெருக்கடிகள் கட்டுப்பாட்டில் வர நாடு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நிலமையை நோக்கி நகர்வது தெரிகிறது. மிகக் கடினமான 3 வருட காலத்தை கடந்து தற்போது வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியான விடயமாகும். சகலரும் தற்போது ஓர் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக சமூகத்தில் அடிமட்டத்தில் வாழ்ந்திருந்த மக்கள் மீழெழுச்சிப்பெற துடிக்கின்றனர்.
புதிய வருடம் சவால்கள் கொண்டதுதான். உற்பத்தியை முன்னேற்றும் செயற்பாடுகள் தேவை.தாராள பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. பொருளாதார வளர்ச்சியை பேணுவதற்கு கைத்தொழில் மற்றும் வணிக முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். புது உந்துசக்தியுடன் சர்வதேச பொருளாதாரத்துடன் முன்னேறிச் செல்ல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகளுக்காக சரியான தீர்மானத்தை எடுப்பது காலத்தின் கட்டாயம்.
இவ்வருடத்தில் முதல் நான்கு மாதங்களுக்கான செலவினமாக 1425 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானம் 1600 பில்லின் ரூபாவாகும். எனினும் உள்நாட்டுக் கடன்கள் மூலமாக 4 ட்ரில்லியன் பெற்றுக்கொள்ள முடியும். பணவீக்கத்தை உருவாக்கக்கூடிய மேற்கூறிய கடன் பெற்றுக்கொள்ளலை மட்டுப்படுத்த வேண்டும். மாற்றுத்திட்டமாக புதிய வருமான வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டும். அரசின் செலவினங்களையும் இயன்றவரை குறைக்க வேண்டும். ஜனாதிபதி செயலகத்தின் செலவு 64% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்ட பல விசேட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டு மக்களில் அதிகமானோர் கடின உழைப்பாளிகள் அல்ல. அரசிடமிருந்து அநேக நிவாரணங்களை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் அத்தியவசிய பொருட்களை குறைந்த விலையில் எதிர்பார்க்கின்றனர். அஸ்வெசும சமூக பாதுகாப்பு, சிறுநீரக பாதிப்பு கொடுப்பனவுகள் (இன்னும் பல நோய்களுக்கான கொடுப்பனவுகள்) பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றிற்கு அரசுக்கு பெருந்தொகை பணம் தேவைப்படுகிறது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் குறைந்த வட்டியில்லா கடன்களை எதிர்பார்க்கின்றனர். புதிதாக சிறு, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் வரவு செலவு திட்டத்தில் பாரிய தொகையை ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்துடன் ஊழல் மோசடிகளை தடுப்பதாக கூறியுள்ளது. தேவையற்ற செலவினங்களையும் வீண் விரயங்களையும் தடுப்பதாக கூறியுள்ளது. எனினும் 2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் இலங்கையில் இருந்து டொலர் வெளியே செல்வது அதிகரிக்கும். இதனால் தற்போது அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி அப்போது சரிவடைய வாய்ப்புள்ளது.
தற்போது நாட்டில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் கடன்கள் கிடைக்கப்பெறுவதாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகிறது. எனினும் இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்படும் போதும், கடன்கள் மீள் செலுத்தப்படும் போதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவினங்களை தவிர்க்க, அரசு முனைப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. எனினும் மக்களின் தேவைகளையும் அரசு கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த கால அரசாங்கங்களின் தூர நோக்கற்ற செயல்பாடுகளை துடைத்தெறிந்து புதிய யுகமொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்குமென்ற கருத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இக்கருத்துக்களை உற்று நோக்கும் பொழுது இவ்வருடத்தின் 12 மாதங்களில் அரசாங்கம், ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அபிவிருத்தியை துரிதப்படுத்த பல வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். உற்பத்தி செயற்பாடுகளுக்கு மக்களை ஒன்றிணைக்க வேண்டும். எல்லாத்துறைகளிலும் உற்பத்தியை பெருக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட உற்பத்தி குறைவும் ஒரு காரணமாகும். அதிக மழை காரணமாகவும் கடந்த காலங்களில் கமத்தொழில் பாதிக்கப்பட்டது தெரிந்ததே. அது எதிர்வரும் போகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உற்பத்தி குறைவடைந்தால் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் அந்நிய செலாவணி கையிருப்பு குறையக்கூடும். உடனடியாக விவசாயிகளை ஊக்கப்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முட்டை ஓர் உதாரணமாகும். கடந்த காலங்களில் முட்டை, கோழி இறைச்சியின் விலை அதிகரித்திருந்தது. எனினும் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட மேலதிக முதலீடுகள் காரணமாக முட்டை, கோழி இறைச்சி விலை சரிவடைந்துள்ளது. சட்டங்கள் மூலம் சந்தை பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாது. உற்பத்தியை பெருக்கும் திட்டங்களையும் போட்டித்தன்மையையும் ஏற்படுத்த வேண்டும்.
2025 ஆம் ஆண்டில் அரசின் வரி வருமானம் தேசிய மொத்த உற்பத்தியில் 15 வீதம் என திறைசேரி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் அரசின் வரி வருமானம் இருமடங்காக அதிகரிக்க வேண்டும். பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கை மூலம் கொடுக்கல் வாங்கல்கள் செய்யப்படும் போது வரி அறவீடுகள் வேகமாக உயருமென எதிரிப்பார்க்கப்படுகிறது.
மேலும் இவ்வாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். வரி அறவீட்டை உயர்த்துவதற்கு புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முயற்சிகளை அதிகரிக்க அரசு முன் வரவேண்டும். வரி செலுத்தும் மக்கள் சமூகத்தை புதிதாக உருவாக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் சுட்டிகாட்டியுள்ளவாறு வரி வசூலிப்பை அதிகரிக்க வேண்டும். ஜனாதிபதி கடந்த வருட இறுதியில் உழைக்கும் போது செலுத்தும் வரிகளில் திருத்தங்களை மேற்கொண்டார். அதில் உயர் வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வித நன்மையும் ஏற்படவில்லை. வரி செலுத்தும் வரையான வரம்பு மற்றும் வரி விதிப்புகள் மூலம் மாதத்திற்கு சுமார் 12000ரூபா வரை நிவாரணம் கிடைக்குமென பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் நிவாரணங்களையும் சுபிட்சத்தையும் பெரிதளவில் எதிர்பார்க்கின்றனர். கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த தீர்மானங்களில் புதிய அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அம்மாற்றத்தை புதிய அரசங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். மக்களுக்கு சலுகைகளையும் வரப்பிரசாதங்கள் வழங்குவது தொடர்பில் கவனத்தை செலுத்தலாம்.
ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கூறியுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் மிகவும் சொற்ப வருமானத்தையே பெறுகின்றனர். மக்களின் வருமானம் பாதிக்கப்படாதவாறு ஜி.எஸ்.ரி போன்ற வரி விதிப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அரசுக்குள்ளது.
2024ஆம் ஆண்டு வரி வருமான இலக்கை உள்நாட்டு இறைவரி திணைக்களம் பூர்த்தி செய்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 1958 பில்லியன் ரூபா வரி வருமானமாக பெறப்பட்டுள்ளது. ஒரு புறம் வாழ்க்கை செலவு உயர்வு மறுபுறம் வரி விதிப்பு போன்றவற்றால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
2025 மக்களுக்கு நன்மை பயக்கும் ஆண்டாக இருக்குமென அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். 2024 இறுதிக் காலாண்டில் சர்வதேச வர்த்தகம், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி போன்றவற்றால் 4.5 வீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்தது.
இந்த அனுகூலங்களுடன் அரசின் சொத்துக்கள், வளங்கள் கவனமாக கையாளப்பட வேண்டும். அரச நிறுவனங்களை இலாபகரமாக நிர்வகிக்க வேண்டும். அதற்காக பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அரச சேவை, அரச நிறுவனங்களின் திறனின்மை போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அவற்றின் பழைய கடன்களும் செலுத்தப்பட வேண்டும். புதிய அரசாங்கம் அக்கடன்களை செலுத்தி அவ்நிறுவனங்கள் திறம்பட செயற்பட வழிமுறைகளை ஆராய வேண்டும். நிலமை இவ்வாறு இருக்க கொழும்பு பங்குச்சந்தையில் அனைத்து அலகு விலைச் சுட்டெண் வருட ஆரம்பத்தில் 16000 புள்ளிகளை தாண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் நிலையான தன்மையை பேண வழிவகுக்கின்றது.
இதேவேளை 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதம் வரை குறைவாக பதிவாகுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாகி சரியான திசையில் நகருமெனவும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அருள்