“நான் இன்னும் எனக்கான படத்தை உருவாக்கவில்லை. எனக்கு முழுமையாகத் திருப்தி தரும் ஒரு படத்தை இதுவரை இயக்கியதாகத் தெரியவில்லை” என்கிறார், பிரபல ஹாலிவுட் இயக்குநரான ரோமன் பொலான்ஸ்கி (Roman Polanski). மேக்பத், சைனா டவுன், த டெனன்ட் (பிரெஞ்ச்), த பியானிஸ்ட் என 23 படங்களை இயக்கியவர் இவர்.‘த பியானிஸ்ட்’ படத்துக்காக, ஆஸ்கர் விருதைப் பெற்றவர். எந்த படைப்புமே முழு திருப்தியைத் தந்துவிடாது என்பதைத்தான் அவரும் சொல்கிறார். கடந்த 2024-ம் ஆண்டில் சில முன்னணி இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களின் படங்கள் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ஏமாற்றம் தந்ததை இதனுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். அதனால் அந்த ஏமாற்றத்தை 2025-ம் ஆண்டு தவிடு பொடியாக்கும் என்று நம்புவோம். இந்த ஆண்டு முன்னணி ஹீரோக்களின் பெரும் பட்ஜெட் படங்கள் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி: கடந்த வருடம் அஜித்குமார் நடித்து ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் இந்த வருடம் அதற்கும் சேர்த்து 2 படங்கள் வெளியாகின்றன. ‘விடா முயற்சி’யை மகிழ் திருமேனியும் ‘குட் பேட் அக்லி’யை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கியுள்ளனர். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த ‘விடாமுயற்சி’ தள்ளிப் போயிருக்கிறது.
கேம் சேஞ்சர்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 5 பாடல்களுக்கு மட்டும் ரூ.75 கோடி செலவழித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘விஷுவல் ட்ரீட்’டுக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம் என்கிறது படக்குழு. வரும் 10-ம் திகதி வெளியாகிறது.
இந்தியன் 3: ஷங்கரின் ‘இந்தியன் 2’ ஏமாற்றத்தைத் தந்த பிறகு வருகிறது ‘இந்தியன் 3’. இதில் கமல்ஹாசனுக்கு இருக்கும் பிளாஷ்க் பேக் காட்சி ‘கூஸ்பம்ப்’ உணர்வைத் தரும் என்கிறார்கள், இன்டஸ்ட்ரியில்.
வணங்கான்: பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துத் தொடங்கப்பட்ட படம். அவர் திடீரென விலகிக் கொள்ள, அருண் விஜய் நடித்து, வரும் 10-ம் திகதி வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகுவரும் பாலா படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம். சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என ‘ஸ்டார் காஸ்ட்’டே மிரட்டுகிறது. வெளியான டீஸர் ஏகப்பட்ட எதிர்பார்ப்பைக் கிளப்பி இருப்பதால், லோகேஷின் திரைக்கதை ட்ரீட்மென்ட்டுக்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
தக் லைஃப்: ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் படம். கமல் மகனாக சிம்பு நடித்திருக்கிறார் என்கிறார்கள். த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். ஜூன் 5-ல் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
விஜய் 69: ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்துவிட்ட விஜய்யின் கடைசிப் படம் என்கிறார்கள் இதை. ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்திலும் அரசியல் கருத்துகள் அமோகமாக இருக்கிறது என்கிறது கோலிவுட். நாயகி பூஜா ஹெக்டே, வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் என பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது, பூஜை வீடியோ.
ரெட்ரோ, சூர்யா 45: ‘கங்குவா’ ஏமாற்றத்தைத் தந்தாலும் இந்த வருடம் வெளியாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறது, சூர்யாவுக்கு. படத்தின் டீஸருக்கு எக்கச்சக்க வரவேற்பு என்பதால் ‘ரெட்ரோ’வுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘சூர்யா 45’ம் இந்த வருட எதிர்பார்ப்பு லிஸ்ட்டில் இருக்கிறது.