ஒரு சமூகத்தின் அடையாளங்களாக சில விடயங்கள் கூறப்படுகின்றன. தேசிய இனங்கள் பற்றி மிகச் சிறப்பாக கூறிய ஸ்டாலின், லெனின் போன்றோர் மொழி, இனம், பிரதேசம், கலாசாரம் பற்றி கூறியுள்ளனர். அதாவது ஒரு இனம் தனித்துவ இனம் என்பதற்கு அவ்வினத்திற்குரிய தனித்துவமான மொழி, பிரதேசம், கலாசாரம் முக்கியம் என்பர். இந்நோக்கில் பார்ப்பின் மலையகம் ஒரு தனி இனமே. அதற்கு தனித்துவமான மேற்கூறிய அனைத்து விடயங்களும் உள்ளன எனலாம்.
அப்பின்னணியில் இவ்வினத்திற்குரிய பாரம்பரிய கலைகளை பேணுவதும், ஆவணப்படுத்துவதும், பரப்பப்படவேண்டியதும் அவசியமானதாகும். கடந்த 200 வருட காலத்தை மாத்திரம் பேசுவது இவ்வினத்துக்கு ஆரோக்கியமானதாக இராது. எனவே பின்வரும் அடிப்படையில் அவை பேணப்படல் வேண்டும்.
மலையக கலைகள், பாரம்பரியங்கள் பாடசாலை மட்டத்தில் பேசப்படல் வேண்டும். பாடசாலை இலக்கிய மன்றங்களில் பாரம்பரிய நிகழ்வுகளில் இடம்பெறுதல் வேண்டும், மலையக நாட்டார் பாடல்கள், சொல்லாடல்கள், பழமொழிகள், கதைப் பாடல்கள், பொன்னர் சங்கர், காமன் கூத்து போன்றன பாடசாலை மேடைகளில் மேடையேற்றப்படல் வேண்டும்.
இதேபோல பல்கலைக்கழகங்கள், ஆசிரிய பயிற்சி கலாசாலைகள் என்பனவற்றில் ஒலிக்கப்படல் வேண்டும்.கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மலையக மக்களின் நாட்டார் பாடல்கள், கவிதைகள், மலையகம் பற்றிய கட்டுரைகள் என்பவற்றையும் பாட நூல்களில் சேர்த்திருந்தாலும் அவைகள் போதுமானவையாக இல்லை. கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர்கள், பாடப்பரப்பை தெரிவு செய்யும் நூலாக்கக் குழுவினர் ஒரு கட்சி சார்பான போக்குள்ளவர்களின் படைப்புகளை தெரிவு செய்துள்ளனர் என விமர்சனமும் அதில் உள்ளது. எனவே பொதுவான நோக்கில் இப் படைப்புகள் தெரியப்படல் வேண்டும் அன்றேல் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் நீலாவணன், மஹாகவி உருத்திர மூர்த்தி போன்றோர்களுக்கும் மேலும் சிலருக்கும் ஏற்பட்ட நிலையே ஏற்படும்.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் எமது பாரம்பரிய கலைகளும் இடம் பெறுவதன் மூலம் எமக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் இது ஆவணப்படுத்தலாகவும் அமையும். உதாரணமாக எமக்கே உரிய நாட்டார் பாடல்களுடனான நடனங்கள், காமன் கூத்து போன்றவற்றைக் கூறலாம்.
சமூக மட்டத்திலும் எமது மலையக கலைகளைப் பேணலாம். கடத்தலாம் தோட்டங்களின் பொது வெளிகளில் இவற்றை இடம்பெறச் செய்யலாம்.
அடுத்து இன்றைய சந்ததியினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது தொடர்பாடல்களை மேற்கொள்கின்றனர். எனவே இங்கு whats app எனப்படும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் இவற்றை கடத்தலாம். இன்று மிக வேகமாகவும் சிறப்பாகவும் காரியங்களை செய்ய இதனைப் பயன்படுத்தலாம். இன்று பல விடயங்கள் இவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படுவதை காணலாம்.
அச்சு ஊடகங்களையும் கைவிடுவதற்கில்லை. பத்திரிகை, சஞ்சிகை, நூல்கள் மூலம் எமது பாரம்பரியங்களை கடத்த இயலும்.
மேற்கண்டவாறு எந்த ஒரு சமூகமும் தத்தமது கலைகளை பாரம்பரியங்களை ஆவணப்படுத்தவும், கடத்துதல் செய்யவும் இயலும். மலையக சமூகமும் தம்முடன் கொண்டுள்ள செழுமைமிக்க கலைப்பாரம்பரியங்களை நடத்துதல் செய்தல் இயலும். சனத்தொகை கணக்கெடுப்பில் எம்மை மலையகத்தவர், இந்தியர் என்றொரு பகுதியை அறிமுகப்படுத்திக்கொள்ள இவ்வேளையில் மலையகத்தவர் என்பதனை உறுதிப்படுத்தும் அடையாளங்களாக எமது மொழியும், கலைகளும், பாரம்பரியங்களும், பிரதேசங்களும் வலுச் சேர்க்கும் எனலாம். புவிஅமைப்பு, நிலப்பிரதேசம் என்பனவற்றுக்கு மேலானதாக இவ்வடையாளம் உயிர்ப்பானதாக திகழும்.
- மொழிவரதன் மகாலிங்கம்