இந்திய வம்சாவளி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை தொழில் ரீதியாக தோட்டத் தொழிற் சங்கங்களும் அரசியல் ரீதியாக மலையக அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுகின்றன. ஆனால் அவர்களின் மாதாந்த சந்தா பணத்தை பெற்று தோட்டத் தொழிற்சங்கவாதிகளும் அவ்வப்போது இந்த நாட்டில் நடாத்தப்படும் தேர்தல்களில் அவர்களின் வாக்குகளைப் பெற்று பதவிகளைப் பெற்றுவரும் மலையக அரசியல்வாதிகளும் இந்த மக்களை பல வழிகளிலும் புறக்கணித்து வருதல் தொடர்கிறது.
இன்று நாடளாவிய ரீதியில் உள்ள பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி கற்ற பிள்ளைகள் தங்களின் சுய முயற்சியினால் படிப்படியாக முன்னேறி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், கல்விப் பணிப்பாளர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் என சமூகத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்று முன்னேறி வருகிறார்கள்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் இந்திய வம்சாவளி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளில் ஆண் பிள்ளைகள் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்ற அங்கத்தவர்களாகி அமைச்சர் பதவி வகித்த வரலாறு உள்ளது. அவ்வாறான ஒருவர்தான் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம். அவர் மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அவற்றை அரசியல் வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது பயனாளிகளுக்கு பகிர்ந்தளித்து வரலாறு படைத்தவர்.
தோட்டத் தொழிலாளர்களின் பெண் பிள்ளைகள் முன்னைய காலங்களில் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற அங்கத்தவர்களான வரலாறு இல்லை. ஆனால் கடந்த 14.11.2024 திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூலம் களமிறக்கப்பட்ட அம்பிகா சாமுவேல் பதுளை மாவட்டத்தில் இருந்தும் கிருஷ்ணன் கலைச் செல்வி நுவரெலியா மாவட்டத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையான பாராளுமன்ற அங்கத்தர்கள் ஆனவர்கள் என்னும் பெருமைக்குரியவர்கள்.
கடந்த பல வருடங்களாக உரிய கல்வி தகைமைகள் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பெருந்தோட்டங்களில் அவ்வப்போது ஏற்படும் பதவி வெற்றிடங்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என தோட்டத் தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தபோதிலும் மலையக பகுதிகளில் ஒரு சில பெருந்தோட்டங்களைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பெருந்தோட்டங்களில் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே, தோட்டத் தொழிலாளர்களின் உயர் பதவிகள் பெற கல்வித் தகைமைகளைக் கொண்டுள்ள பிள்ளைகள் இலவு காத்த கிளிகள் போன்று இனிமேலும் காத்திருக்க வேண்டியதில்லை.
தாய்மொழியாக தமிழ் மொழியறிவுடன் மற்றும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெறும் விதத்தில் கற்று தேர்வதன் மூலம் சுயமாக உயர் பதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் தேயிலை நிலைய உத்தியோகத்தராகவும் அந்த தோட்டத்திற்கு வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் தேயிலை பதனிடும் அறையின் செயற்பாடுகள் பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவாக எடுத்துரைப்பவராகவும் பணியாற்றும் சிவகவி கலைவாணி நிரூபித்துள்ளார்.
அவர் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதோடு, கணினி சம்பந்தமான பாடநெறியை மேற்கொண்டுள்ளார். ஆங்கில மொழியில் சரளமாகப் பேசக் கூடியவர். கடந்த சில வருடங்களாக இந்த நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நாட்டில் உள்ள சுற்றுலாவுக்கு உகந்த, பிரசித்தி பெற்ற இடங்களுக்கு அருகிலுள்ள இயற்கை எழில் மிக்க தேயிலைத் தோட்டங்களை தெரிவுசெய்து அந்த தோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேயிலை கொழுந்துகள் அவை எவ்வாறு பதனிடப்பட்டு தேயிலை தூளாக வெளி வருகிறது என்பதை உரியவர்களைக் கொண்டு உல்லாச பிரயாணிகளுக்கு விளக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பின் பல நூற்றுக் கணக்கானோருக்கு சிவகவி கலைவாணி போன்று பதவிகள் கிட்ட வாய்ப்பு கிட்டும்.
இந்த நாட்டின் பல பகுதிகளுக்கும் வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்நாட்டவர்களும் இடம் பெறுகிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகளின் வழிகாட்டிகளாக செயல்படுபவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் சரளமாக உரையாடுவதோடு, உரிய விதத்தில் விளக்கம் கொடுக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆகவே பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு கற்று அந்த மொழிகளில் நன்கு புலமை உள்ளவர்களாக தம்மை உருவாக்கிக் கொள்வதற்கு சிவகவி கலைவாணியை பின்பற்றி அவரின் அடிச்சுவட்டில் பயணிப்பதன் மூலமே வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
- சி.ப.சீலன்