நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெற்றி வாய்ப்பை நெருங்கிய இலங்கை அணி மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
மௌன்ட் மவுன்கனுயில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் 173 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான பத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர்.
இதன்போது 60 பந்துகளுக்கு முகம்கொடுத்த பத்தும் நிசங்க 7 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 90 ஓட்டங்களை விளாசியதோடு குசல் மெண்டிஸ் 36 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 46 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்துடனேயே ஆட்டமிழந்தனர். அதிலும் குசல் பெரேரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட் ஆகினர். இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களையே பெற்றது.
இதன்போது ஜகப் டபி 14 ஆவது ஓவரில் வைத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது இலங்கை அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. மெட் ஹென்ட்ரி மற்றும் சகரி பொல்கஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் முதல் 5 விக்கெட்டுகளையும் 65 ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கை அணியால் முடிந்தது. எனினும் 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டரில் மிட்சல் (62) மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் (59) ஆகியோர் 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். இது நியூசிலாந்து அணி டி20 சர்வதேச போட்டிகளில் 6 ஆவது விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாகவும் பதிவானது.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.
பினுர பெர்னாண்டோ, மஹீஷ் தீங்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை (30) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.