இஸ்ரேலுக்கும் யெமனின் ஹுதிக்களுக்கும் இடையில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. எவ்வேளையிலும் ஹுதிக்கள் மீது முழுஅளவிலான தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுக்கலாம் என்ற பரபரப்பும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த வியாழனன்று மாலையில் யெமனின் தலைநகர் சனாவின் சர்வதேச விமான நிலையம், யெமனின் மேற்கு கரையிலுள்ள ஹுதைதா, சாலிஃப், ராஸ் காத்திப் ஆகிய மூன்று துறைமுகங்கள், ஹெசியாஸ் மற்றும் ராஸ் கனாடிப் ஆகிய மின்நிலையங்கள் என்பவற்றின் மீது இஸ்ரேல் கடும் விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தது. இத்தாக்குதல்களில் 06 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 40 பேர் காயமடைந்துள்ளதாக ஹுதிக்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஹுதிக்கள், டெல்அவிவ் மீது பலஸ்தீன் 2 ஹைப்பர் சொனிக் ஏவுகணைத் தாக்குதலை நடாத்திய போதிலும் அந்த ஏவுகணை இஸ்ரேல் வான்பரப்பை அடைய முன்னர் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. என்றாலும் இந்த ஏவுகணை ஏவப்பட்டதால் சைரன் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு விரைந்த சமயம் 18 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் மாகன் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் பென்கூரியன் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வெள்ளிக்கிழமை காலையில் ஹைப்பர் சொனிக் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியதாக ஹுதிக்களின் பேச்சாளர் எஹியா சராய் கூறியுள்ளார்.
அதேநேரம் சனா விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலின் போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அத்னாம் கெபெரியசூஸ் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி ஹுதிக்களின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியதைத் தொடர்ந்து 21 ஆம் திகதி முதல் டெல்அவிவ் மீது ‘பலஸ்தீன் 2’ ஹைபர்சொனிக் பிளாஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன்களைக் கொண்டு ஹுதிக்கள் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களது ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் இஸ்ரேலியர்களுக்கு நேரடி பாதிப்புக்கள் இல்லை என்றும், அவை இஸ்ரேல் வான்பரப்புக்குள் பிரவேசித்ததும் சைரன் ஒலிக்கும் போது அவசர அவசரமாக மக்கள் பாதுகாப்பு இடங்களுக்குச் செல்வதால் சிறு காயங்களுக்கு சிலர் உள்ளாவதாக இஸ்ரேலிய படையினர் கூறியுள்ளனர்.
ஆனாலும் ஹுதிக்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையிட்டு கொதிப்படைந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரைல் கார்ட்ஸ், ‘நாங்கள் ஹமாஸை தோற்கடித்துள்ளோம், ஹிஸ்புல்லாவை வெற்றி கொண்டுள்ளோம். ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்புகளை செயலிழக்கச் செய்துள்ளோம். அவர்களது ஆயுத உற்பத்தி திறன்களை தாக்கி அழித்துள்ளோம், சிரியாவில் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை வீழ்த்தியுள்ளோம்.
ஹமாஸின் அரசியல்குழுத் தலைவர்களான இஸ்மாயீல் ஹனியே, யஹ்யா சின்வார், ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா ஆகியோரின் தலைகளை நாங்கள் துண்டித்துள்ளோம். அதேபோன்று சனாவுக்கும் ஹுதைதாவுக்கும் செய்வோம். ஹுதிக்கள் மீது கடும் தாக்குதல்களை முன்னெடுப்போம்’ என்று கடுந்தொனியில் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஹுதிக்களின் பேச்சாளர், ‘இந்த மிரட்டல்களுக்கு பயந்தவர்கள் நாங்கள் அல்லர். காஸா உள்ளிட்ட பலஸ்தீன் மீதான யுத்தம் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும்’ என்றுள்ளார். அதேபோன்று இஸ்ரேல் மீது ஹுதிக்களின் தாக்குதல்கள் தொடரவே செய்கின்றன.
காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இஸ்ரேலுக்கு பயணிக்கும் சரக்கு கப்பல்களை கடந்த 2023 ஒக்டோபர் முதல் தாக்கிவரும் ஹுதிக்கள், இஸ்ரேலின் தெற்கு துறைமுக நகரான ஈழட் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தலாயினர். இந்நிலையில் ஹுதிக்களை கட்டுப்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் அமெரிக்கா தலைமையில் 2024 ஜனவரி 13 முதல் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் ஹுதிக்களின் தாக்குதல் அச்சுறுத்தலினால் செங்கடல் வழியான பயணத்தை பெரும்பாலான சரக்குக் கப்பல்கள் தவிர்த்துக் கொண்டுள்ளன. அதன் விளைவாக கடந்த ஏப்ரல், மே மாதமாகும் போது ஈழட் துறைமுகம் வங்குரோத்து நிலையை அடைந்தது. இதனை துறைமுக நிர்வாகமே உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இவ்வாறான சூழலில் கடந்த ஜுலையில் டெல்அவிவ் மீது ஹுதிக்கள் முதன் முறையாக நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 09 பேர் காயமடைந்தனர். அதற்குப் பதிலடியாக யெமனின் ஹுதைதா துறைமுகம், மின்நிலையம் மீது இஸ்ரேல் முதன் முதலில் விமானத் தாக்குதல்களை நடத்தியது. அதனால் 14 பேர் கொல்லப்பட்டதோடு 90 பேர் காயமடைந்தனர். அதன் பின்னர் செப்டெம்பர் 29 ஆம் திகதியும் ஹுதைதா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்தது.
இந்தச் சூழலில் காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக்கோரி இஸ்ரேல் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வந்த லெபனானின் ஹிஸ்புல்லா கடந்த நவம்பர் 27 முதல் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டது. லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைமுறைக்கு வந்த யுத்தநிறுத்தம் இதற்கு அடித்தளமானது. ஆனால் ஹுதிக்கள், ‘காஸா மக்களுக்காக நாம் தொடர்ந்தும் ஆதரவாக இருப்போம். யுத்தம் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும்’ என்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல், தற்போது ஹமாஸ் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா தோற்கடிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் பஷர் அல் அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. இதன் பயனாக காஸா, லெபனான் மற்றும் சிரியாவினால் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. ஹுதிக்களின் அச்சுறுத்தல் எஞ்சியுள்ளது. அதனையும் தாக்கியழிக்கும் நோக்கில் பயிற்சிகளிலும் ஈடுபட்டது.
இச்சூழலில் கடந்த 19 ஆம் திகதி அதிகாலையில் ஹுதிக்கள் மத்திய டெல் அவிவ் மீது ஹைப்பர் சொனிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர், அத்தாக்குதலில் இஸ்ரேலில் ரமட்கன் நகரிலுள்ள பாடசாலை ஒன்று பெரிதும் சேதமடைந்தது.
அதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஹமாஸ், ஹிஸ்புல்லா, சிரியாவுக்கு பிறகு ஹுதிக்கள் எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு கடுமையான பாடம் புகட்டப்படும்’ என்றதோடு யெமனின் சனா, ஹுதைதா மீது கடும் தாக்குதல்களும் இஸ்ரேலால் முன்னெடுக்கப்பட்டது. 14 போர் விமானங்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இத்தாக்குதலுக்கு 60 குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் 09 பேர் மரணமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலில் எரிபொருள் மற்றும் எண்ணெய் கிடங்குகள், இரண்டு மின்நிலையங்கள், ஹுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் எட்டு இழுவைப் படகுகள் ஆகியன தாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துறைமுகங்களுக்குள் கப்பல்களை கொண்டு வரப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இழுவைப் படகுகளும் தாக்கி அழிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் ஹுதிக்கள் டிசம்பர் 21 ஆம் திகதி அதிகாலையில் நடாத்திய ஏவுகணைத்தாக்குதலில் இஸ்ரேலில் 16 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதேதினம் இரவு அமெரிக்காவும் பிரித்தானியாவும் யெமன் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தன. இஸ்ரேல் மீது ஹுதிக்கள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் கூட்டாக யெமன் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை பலத்த கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலின் போது நட்பு ரீதியில் இடம்பெற்ற தாக்குதலில் தமது விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்தது. ஆனால் அவ்விமானத்தை தாங்களே சுட்டு வீழ்த்தியதாக ஹுதிக்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விமானம் தாக்கப்பட்டதால் அமெரிக்காவுக்கு 75 மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 26 ஆம் திகதி யெமனின் விமான நிலையம், துறைமுகங்கள், மின்நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடாத்தியது. இதனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை என்பன சேதமடைந்துள்ளன. விமான நிலையம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான துறைமுகங்களும் செயலிழந்துள்ளன.
சனா விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் உயிர் தப்பிய உலக சுகாதார ஸ்தாபன தலைவர் குறிப்பிடுகையில், ‘யெமனில் கைது செய்யப்பட்டுள்ள ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவும், யெமனின் சுகாதார மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் சென்று திரும்பி விமானம் ஏற இருந்த வேளையில் இத்தாக்குதல் இடம்பெற்றது. எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர்.நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீற்றர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது. நானும் என்னுடன் இருந்த ஐ.நா மற்றும் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம்’ என்றுள்ளார்.
இவ்வாறு இஸ்ரேலுக்கும் ஹுதிக்களுக்கும் இடையில் உச்சகட்டப் போர்ப்பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது.
மர்லின் மரிக்கார்