- அரிசி விடயத்தைப் பொறுத்தவரை, எதிர்காலத்தில் நாமும் நெல்அறுவடை பணியில் இணைவோம். எதிர்காலத்தில் ‘சதோச’ எனப்படும் அரிசியை சந்தைக்கு வழங்க உள்ளோம்
- நுகர்வோரையும், விவசாயிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்
உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பாது காக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அரிசி, உழுந்து, பயறு என ஒவ்வொரு உற்பத்திக்கும் தனியான கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி, அவற்றின் ஊடாக அறுவடைகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் ‘சதொச’ என்ற பெயரில் அரிசியைத் தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எமக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கே: தேசிய கொள்கைக்கு அமைய உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை?
பதில்: தேசிய கொள்கைக்கு அமைய உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் எனச் சகல தரப்பினரையும் பாதுகாக்க வேண்டும். எனவே, தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் இந்தக் கொள்கையானது எமது நாட்டின் பல்வேறு துறைகளுக்கு அவசியம் எனக் கருதுகின்றோம். அரிசியே தற்பொழுது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது. அரிசிப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் நாட்டில் இரண்டரை மாதங்களுக்கு அரிசி உற்பத்தி உபரியாக உள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் விவசாயத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. எனினும், கடைகளுக்குச் சென்று பார்த்தால் தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாட்டிலிருந்து அரிசியைக் கொண்டுவரும் நிலைமை ஏற்பட்டது.
ஆலைகளில் அரிசித் தொகை RPWPJ காணப்படுகின்றது. ஆனால், இது போதுமானது அல்ல. இதுவே உண்மையான பிரச்சினை. இதனால் இன்று இந்தக் கொள்கையை எடுப்பது அவசியமானது, ஏனெனில், நாம் நாட்டில் உணவுப் பாதுகாப்பில் கடுமையான சிக்கல் ஏற்படலாம். விவசாயிகள் உழுந்து அறுவடை செய்யும்போது வெளிநாட்டிலிருந்து உழுந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. மஞ்சள் அறுவடையின்போது வெளிநாட்டிலிருந்து மஞ்சளும், பயறு அறுவடையின் போது வெளிநாட்டிலிருந்து பயறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதுதான் இங்குள்ள பிரச்சினை. இதனை நாம் ஒவ்வொன்றாக அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து நுகர்வோரையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம். விவசாயி மற்றும் நுகர்வோர் இடையே பரிமாற்றமாக இருக்கும் மொத்த விற்பனையாளரையும் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். மேலும் அரசின் தலையீடு கொஞ்சம் அதிகரிக்க வேண்டும்.
எனவேதான், சதொச மொத்த விற்பனை வலையமைப்பின் ஊடாக எதிர்காலத்தில் இதனைச் செய்வதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.
அதற்காக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி வருகிறோம். பல்வேறு துறைகள் தொடர்பான தயாரிப்புகளுக்கு நேரடி நுகர்வோர் உருவாக்கப்படுவர். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், விவசாயிகளிடமிருந்த உழுந்தைப் பெற்றுக் கொள்வதற்காக உழுந்துக்கான கூட்டுறவுச் சங்கமொன்று உருவாக்கப்பட்டால், அநுராதபுரத்தில் உள்ள அவ்வாறான கூட்டுறவுச் சங்கம் பெறும் உழுந்தில் ஒரு தொகையை நாம் சதோசவுக்குக் கொள்வனவு செய்வோம். அம்பாறையிலுள்ள விவசாயிகளிடமிருந்து பயறை நாம் கொள்வனவு செய்வோம். பதுளையிலிருந்து வெங்காயம் மற்றும் கிழங்கை சதோச பெற்றுக் கொள்ளும். இதுபோன்று ஒவ்வொரு தயாரிப்புக்கும் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்து அவற்றின் ஊடாக இந்தத் தேசியக் கொள்கையைப் பலப்படுத்துவோம்.
கே: இந்தப் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
பதில்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜனாதிபதி ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். குறிப்பாகப் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெறுமதிசேர் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளில் திருத்தம் செய்ய சட்டங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. வரியைக் குறைத்தால் மட்டுமே பொருட்களின் விலைகளிலும் குறைவு ஏற்படும். விநியோக வலையமைப்புகள் மற்றும் சந்தை கட்டுப்பாடு ஆகிய இரண்டும் செய்யப்பட வேண்டும். கடந்த சில நாட்களில் தேங்காய் இருநூறு ரூபாவுக்கு விற்பனையாகியது. 2023 இல் நம் நாட்டில் 3000 மில்லியன் தேங்காய் உற்பத்தியானது, 2024ஆம் ஆண்டில் இலங்கையின் தேங்காய் உற்பத்தி 2700 மில்லியனாகக் குறைந்தது. வெளிநாடுகளுக்கு தேங்காய் அனுப்பப்படுகிறது. ஆனால் மழையால் சந்தையில் பெரும் விலை மாற்றம் ஏற்பட்டது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்து தேங்காய்களைப் பெற்று சதோச ஊடாக விநியோகிக்க வேண்டியிருந்தது.
கே: அரிசி மாபியாவிடம் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதா?
பதில்: அரசாங்கத்தை கையாலாகாத நிலைக்கு ஆளாக்க சிலர் காத்திருந்தனர். வாக்களிக்க பணம் கொடுத்தவர்களை சிலர் பாதுகாக்க முயன்றனர். அரிசிச் சந்தையில் தங்களுக்கு இருக்கும் ஏகபோகத்தை உடைக்கப் பாடுபடுவோம் என்றனர். அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஜனாதிபதி இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பின்னர் ஜனாதிபதியின் தலையீட்டில் மூன்று தடவை இது தொடர்பில் கலந்துரையாடினோம். பிரச்சினை அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இல்லை. அவர்கள் வியாபாரம் செய்கின்றனர். இதன் செயற்பாடு அப்படித்தான் இருக்கின்றது. அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கே: கடன் வழங்கப்பட்டாலும் அவற்றை மீளச்செலுத்துபவர்களும் உள்ளனர். மீளச்செலுத்தாதவர்களும் உள்ளனர். சந்தையில் இந்த மாதிரியான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு இருக்கும் பொறுப்பு என்ன?
பதில்: இதற்கு ஒரு உதாரணம் சொல்கின்றேன், நெல் சந்தைப்படுத்தல் சபை, கூட்டுறவுச் சபை மற்றும் சதொச ஆகியன ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்தக் கூடிய களஞ்சியசாலைகளைக் கொண்டுள்ளன. ஒரு நெல் கூட இல்லை, கீரி சம்பா கொஞ்சம் உள்ளது. எனினும், எமது நாட்டில் 65 வீதமானவர்கள் நாட்டு அரிசியையே உண்கின்றனர். 15 சதவீதம் பேர் சிவப்பு அரிசியை உணவாக எடுக்கின்றனர். மீதமுள்ள 15 சதவீதம் பேர் சம்பா, கீரி சம்பா, பாஸ்மதி போன்றவற்றை சாப்பிடுகின்றனர். 65 வீதத்திற்கும் அதிகமானவர்கள் நாட்டு அரிசியை உண்ணும் நாட்டில் கடைகளில் நாட்டு அரிசி இல்லை. நாட்டரிசி உண்ணும் நாட்டில் கடைகளில் நாட்டரிசி இல்லை. பிறகு எப்படி விலையைக் கட்டுப்படுத்த முடியும்? சந்தையை அரசாங்கம் எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது என்பதைப் பார்த்தால், அதற்கான வேலையை நாம் செய்து வருகின்றோம்.
கண்டிப்பாக அரசாங்கம் தலையிட்டு கொள்முதல் பணிகளைத் தொடங்கும். இந்த நடவடிக்கைகள் சதொச, கூட்டுறவு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் நாமும் நெல் அறுவடை பணியில் இணைவோம். எதிர்காலத்தில் ‘சதொச’ எனப்படும் அரிசியை சந்தைக்கு வழங்க உள்ளோம். வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்படும். கடந்த 19ஆம் திகதி வரை சுமார் 45,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்குள் நுழைந்துள்ளது. சந்தையில் அரிசித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில், இந்த இறக்குமதி அரிசி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் அரிசிப் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
கே: இறக்குமதி செய்யப்படும் அரிசியின் தரம் பற்றிக் குறிப்பிட முடியுமா?
பதில்: இறக்குமதி செய்யப்படும் அரசியின் தரம் பற்றி நாம் அக்கறையுடன் செயற்படுகின்றோம். தரம் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்னரே இறக்குமதி செய்யப்படும் அரிசிகள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன. அவற்றில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அரிசி இருப்பை விடுவிக்க மாட்டார்கள். உதாரணமாக, சமீப நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டுகள் இருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட முயல்கின்றன.
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தது என்று நினைத்தே அவ்வாறு செய்தி வெளியிட்டனர். 20ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்ய அரசு சுதந்திரம் வழங்கியது. அந்தச் சுதந்திரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 75 கொள்கலன் அரிசியில் இதுபோன்ற வண்டுகள் இருப்பதாக மீண்டும் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரமற்ற அரிசியைக் கொண்டுவந்தால் மீளத்திருப்பி அனுப்பப்படும் என்பதை நாம் தெளிவாகக் கூறிவிட்டோம்.