நாங்கள் பிறந்ததிலிருந்து இந்த கடலுடன் தான் வாழ்கின்றோம். கிராமத்தில் பல வசதிகள் இல்லாவிட்டாலும் அன்று வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாகவிருந்தது. இன்று கடல் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துவிட்டது. கடற்கரையிலேயே எங்கள் வீடுகள் உள்ளன ‘ என்கிறார் முத்துப்பந்திய கிராமத்தைச் சேர்ந்த சில்வன் பெரேரா.
கொழும்பு — புத்தளம் பிரதான வீதியிலிருந்து சுமார் 4.2 கிலோமீற்றர் தூரத்தில் பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நடுவில் முத்துப்பந்திய கிராமம் அமைந்துள்ளது.
ஒரு புறம் கடல், மறுபுறம் சதுப்புநிலம், இன்னொருபுறம் முந்தல் களப்பு என்பனவற்றாலும் ஆனைவிழுந்தான் ரம்சா சரணாலயத்தாலும் முத்துப்பந்திய கிராமம் சூழப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் சூரிய கதிர்கள், தாங்கமுடியாத வெப்பம் இத்தீவு முழுவதும் நிலவுகின்றது.
ஒருகாலத்தில் முத்துகளுக்கு பெயர் பெற்ற இடமாக இது விளங்கியமையால் ‘முத்துப்பந்திய’ என அழைக்கப்பட்டதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் முத்துப்பந்திய மக்களின் வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாகவே உள்ளது.
கடற்கரையை ஓட்டிய நூற்றுக்கணக்கான மீன்பிடிக் கிராமங்களைப் போலவே, முத்துப்பந்திய கிராம மக்களும் கடலரிப்பினால் தமது நிலம், வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். கடல் அவர்களது சமூக உறவுகளை, ஒட்டுமொத்த நினைவுகளை மாற்றியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த இக்கிராமத்தில் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட 150 குடும்பங்களைச் சேர்ந்த 500பேர் வாழ்கின்றனர். இவர்களில் அநேகமானோர் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள்.
முத்துப்பந்திய கிராமத்துக்கு பிரதான நகரிலிருந்து பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடையாது. மக்கள் தனியார் வாகனங்களிலேயே தமது அவசர தேவைகளுக்கு சென்றுவருகின்றனர்.
இக் கிராமத்தில் முத்துப்பந்திய கனிஷ்ட பாடசாலை, கிறிஸ்தவ தேவாலயம் மட்டும் உள்ளன.
(புத்தளம் மாவட்ட செயலக தகவல்கள்) முத்துப்பந்திய கிராமத்துக்கு மிக அருகில் கருப்புப்பனை கடற்கரையோர கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2606 பேர் வரை வாழ்கின்றனர்.
தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (நாரா) தகவல்களின் படி முத்துப்பந்திய கிராம மக்கள் சிறிய படகுகளில் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றனர். இதுதவிர கரைவலை மீன்பிடியில் மீனவர்கள் ஈடுபடுவதுடன் முந்தல் களப்பில் பாரியளவில் இறால் வளர்ப்பும் இடம்பெறுகின்றது.
அறக்குளா, பாறை மீன், சூடை, கும்பிளா போன்ற சிறிய மீன் வகைகள் முத்துப்பந்திய கரையோரங்களில் பிடிக்கப்படுகின்றன.
எனினும் கடலரிப்பினால் மீன்பிடி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. படகுகளால் நிரம்பி வழியும் முத்துப்பந்திய கிராமம், தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றது. சில படகுகளையும் வலைகளையும் தவிர வேறு எதையும் காணமுடிவதில்லை. கரையோரம் அரிக்கப்படுவதால் மீன்பிடிப் படகுகள், வலைகளை பாதுகாக்க இடமின்றி மீனவர்கள் பரிதவிக்கின்றனர். அதுமட்டுமின்றி கரையோர அரிப்பினால் கரைவலை மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது கரைவலை மீன்பிடி என்பது கரையிலிருந்து வலையை விரித்து மீனவர்கள் சேர்ந்து இழுத்து மீன்பிடிக்கும் முறையாகும். எனினும் கடற்கரை சீரின்மை காரணமாக மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதுதொடர்பில் சமுர்த்தி மீனவ சங்கசெயலாளர் தெரிவிக்கையில்,
2021 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கடற்கரையோரம் 100மீற்றருக்கும் மேல் அரிப்புக்குள்ளாகியுள்ளது. நாகுல்எலிய என்ற கிராமம் முற்றாக அழிந்தது. 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளன. கடலரிப்பினால் மீன்பிடி படகுகளை கரைக்கு இழுத்துவருவது சிரமமாக உள்ளது. மீன்வளமும் குறைந்து வருகின்றது. இறால் பண்னைகளையே நம்பியுள்ளோம். எனினும் கடலரிப்பு தீவிரமடைந்தால் களப்பில் உவர் தன்மை ஏற்பட்டு இறால் வளர்ப்பும் பாதிக்கப்படுமென அவர் தெரிவித்தார் .
38 வயதான சில்வன் பெரேரா தெரிவிக்கையில்,
எங்களால் நிம்மதியாக மீன்பிடியில் ஈடுபடமுடியவில்லை. மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கடல் கொந்தளிப்பு இருக்கும். அப்போது கரையோரம் அதிகளவில் அரிப்புக்குள்ளாகும். படகுகள், மீன்பிடி உபகரணங்களை கரையில் வைக்கமுடியாது. நாங்கள் வீட்டுக்கு அருகில் படகுகளை இழுத்துவர வேண்டும். ஒரு படகை வீட்டு வாசல் வரை இழுத்துவர 10 பேர் தேவை. ஒருவேளை படகு கவிழ்ந்துவிட்டால் என்ஜினை திருத்துவதற்கு ரூ. 35000 வரை தேவைப்படுகின்றது. ஒருகிழமை கஷ்டப்பட்டு உழைத்து ரூ. 35000 க்கும் குறைவாகத் தான் சம்பாதிப்போம். அதுவும் என்ஜின் பழுது, டீசலுக்கு என செலவாகிவிடும் என்கிறார் அவர்.
‘பருவக் காற்று காலங்களில் கடலுக்கு செல்ல முடியாது. அப்போது கடல் கொந்தளிப்பு அதிகமாகவிருக்கும். 6 மாதங்கள் வரை இது நீடிக்கும். களப்பில் தான் அன்றாட செலவுகளுக்கு எதையாவது தேடிக் கொள்கிறோம் என்கிறார் மற்றொரு மீனவர்.
கடலரிப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி கரையோரங்களிலுள்ள மீனவ குடியிருப்புகள், உட்கட்டமைப்பு வசதிகளையும் வெகுவாக பாதிக்கின்றது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார செலவுகளை எதிர்கொள்கின்றனர். கிராமத்துக்கான உள் வீதிகளும் சேதமடைந்து ஒருகட்டத்துக்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாது, ஆங்காங்கே மணற் திட்டுகளாக கிடப்பதால் நடந்து செல்லகூட சிரமமாகவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பருவக் காற்று காலங்களில் கடல் கொந்தளிப்பால் வீட்டு வாசல் வரை கடல் நீர் வருவதாகவும் கழிவுகள் வீடுகளுக்கு அருகிலேயே குவிந்து கிடப்பதாலும்
சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் கிராமசேவகர் லக்மிலி தெரிவிக்கையில்,
முத்துப்பந்திய கிராமம் கடலரிப்பால் கிட்டத்தட்ட துண்டாடப்பட்டுள்ளது. பலவருடங்களுக்கு முன்னர் முத்துப்பந்திய – நாகுல்எலிய கிராமத்தில் 25 குடும்பங்கள் வாழ்ந்தன. எனினும் கடலரிப்பு தீவிரமடைந்தமையால் சுமார் 6 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அங்கிருந்த 25 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டன. இன்று அப்படியொரு கிராமம் இருந்தமைக்கான அடையாளமாக கிறிஸ்தவ தேவாலயம் மட்டுமே எஞ்சியுள்ளது.
2015 ஆம் ஆண்டு நாகுல்எலிய கிராம மக்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு 31 குடும்பங்கள் வரை தற்போது வாழ்கின்றன. கடலரிப்பை தடுப்பதற்கு மணல் நிரம்பும் நடவடிக்கைகளே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இவை எதுவுமே பயனளிக்கவில்லை. நிரப்படும் மணலும் அரிப்புக்குள்ளாகி வருகின்றது. மக்கள் நிரந்தரமான தீர்வை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
‘நான் பிறந்து வாழ்ந்தது எல்லாம் இந்த கிராமத்தில் தான். அப்போது தீவு அழகாய் இருந்தது. 10 வீடுகள் இருந்தன. காலப்போக்கில் பல குடும்பங்கள் இங்கு குடியேறின. சுனாமியின் போது கூட பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. பாதுகாப்புக் கருதி அருகிலுள்ள தேவாலயத்தில் தற்காலிமாக தங்கினோம். எனினும் இன்று எங்களுடைய காணிகளே கடற்கரையாக உள்ளது. வீட்டுக்குள் எல்லா இடங்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு திருத்த வேலைகளையும் மேற்கொள்வதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் அனுமதி பெறவேண்டும். வீடுகளை பாதுகாக்க சொந்த செலவில் ரூ. 50ஆயிரம் மணல் லொறிக்கு செலவு செய்து மண் மேடு ஒன்றை அமைத்தோம் என்கின்றார் சிறியாவதி .
எனினும் இதுதொடர்பில் புத்தளம் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்கள உயர் அதிகாரியொருவரிடம் வினவிய போது,
முத்துப்பந்திய நாகுல்எலிய கிராம மக்கள் மட்டுமே வேறு ஒரு இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். இதுதவிர முத்துபந்திய கிராமத்தில் தற்போதுள்ள வீடுகளுக்கு பெரிதாக சேதம் எதுவும் பதிவாகவில்லை, சட்டவிரோதமாக அமையப்பெற்ற மீன்பிடி வாடிகள், பாதைகள் சேதமடைந்துள்ளன. முத்துப்பந்திய அயல் கிராமமான கருப்பன் பனையில் கடலரிப்பு தீவிரமடைந்துள்ளது.
ஒருசில மக்கள் பலவந்தமாக கடற்கரையோரங்களில் வீடுகளை கட்டியுள்ளனர். கடலரிப்பை வீதத்தை பொறுத்து கரையோரப்பகுதி எல்லையிடப்பட்டுள்ளது.
இதனால் கரையோர பாதுகாப்பு வலயத்தில் குடியிருப்புக்கள், அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத குடியிருப்புகள், மணல் அகழ்வுகள் இப்பகுதியில் கடலரிப்பு தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முத்துப் பந்திய கரையோரப்பகுதிகள் 2014 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக அரிப்புக்குள்ளாக ஆரம்பித்தது. இதனால் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் அவசரகால கரையோர அரிப்புள்ள இடமாக முத்துப்பந்திய கிராமத்தை அடையாளப்படுத்தி பிரதான மூன்று திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
இதில் பிரதானமாக கடற்கரைக்கு ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக Groynes என்னும் பாறாங்கற்களாலான தடுப்பு சுவர் அல்லது அணை 2021ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அடுத்ததாக மணல் மேடுகள் அமைத்தல், மணல் பைகளை (Sandbags) அடுக்குதல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதுதவிர கரையோர வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முத்துப்பந்திய கிராமம் உட்பட புத்தளம் மாவட்டத்திலுள்ள கரையோர பிரதேசங்களை பாதுகாப்பதற்காக இவ்வருடம் ஜனவரி– – – அக்டோபர் மாதம் வரை ரூ.38,378,605.16 செலவாகியுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் தெரிவிக்கின்றது. (தகவலறியும் சட்டமூலம்) அதேநேரம் A 1 (1.5-2.0 ton)- 720 units
A 2 (1.0-1.5 ton)- 7200 units, C 1 (2-250 Kg mixed material) – 2497.55 m3, C 2 (5-500 Kg mixed material) – 745.78 m3 என்ற அடிப்படையில் கற்கள் , மணல்கள் போடப்பட்டுள்ளன.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பொறியியலாளர் தெரிவிக்கையில்,
முத்துப்பந்திய கிராமத்தை பாதுகாக்க இவ்வருட ஆரம்பத்தில் அவசரகால வேலைத்திட்டமொன்றை கொண்டுவந்துள்ளோம். அதற்கமைய இத்திட்டத்துக்காக அவசரகால நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
கம்பஹா, புத்தளம், மன்னார் போன்ற மூன்று இடங்களுக்கும் சேர்ந்து நிதி ஒதுக்கப்படுகின்றது. அதனால் நிதிப் பற்றாக்குறையும் நிலவுகின்றது. ஒப்பீட்டளவில் புத்தளம் மாவட்டத்துக்கே அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தின் (Climant change) விளைவாகவே முத்துப்பந்திய போன்ற மீனவ கிராமங்கள் கடலரிப்பு பாதிப்புக்களை சந்திக்கின்றன. மார்ச்- – நவம்பர் பருவகாற்று காலப்பகுதியில் கரையோரம் அதிகளவில் அரிப்புக்குள்ளாகும். ஏனைய காலங்களில் மணல் நிறையும். அதுபோல் திடீரென ஏற்படும் புயல், சூறாவளி போன்ற தாக்கங்களாலும் கடலரிப்பு தீவிரமடையும்.
இதுதவிர ஆறுகளிலிருந்து கரையோரங்களுக்கு கிடைக்கும் வண்டல் மணலின் அளவு குறைந்தமையும் கடலரிப்புக்கு காரணமாகும் என அவர் தெரிவித்தார்.
எதுஎவ்வாறாயினும் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாறாங்கல் தடுப்பு கடலரிப்பை தடுக்க தவறியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மேற்கு கரையோரமாக அமைக்கப்பட்ட துறைமுக நகரத்தின் விளைவாகவே முத்துப்பந்திய கரையோரங்களில் கடலரிப்பு விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பில் நாரா நிறுவன பணிப்பாளர் டொக்டர் கே. அருளானந்தன் தெரிவிக்கையில்,
இலங்கையின் மேற்கு கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரம் காரணமாக கரையோர மணல் சுற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது இமயமலை பகுதியில் அரிப்புக்குள்ளாகும் மண் பிரம்மபுத்திரா, கங்கா போன்ற பெரிய நதிகள் ஊடாக இந்தியாவின் கிழக்கு கரையோரத்துக்கு வந்து இலங்கையின் கிழக்கு கரையோரம் வழியாக கரையோர பகுதிகளை சுற்றி வங்காளவிரிகுடாவுக்கு சென்று அரேபியன் கடலை சென்றடைவதாகவே புவியியல் ரீதியாக சொல்லப்படுகின்றது. இந்த கரையோர மணல் சுற்றோட்டத்துக்கு இலங்கையின் மேற்கு கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகரம் தடையாகவுள்ளது. இதனால் கரையோரத்தில் அடுத்துள்ள பகுதிகளுக்கு தேவையான மணல் கிடைப்பதில்லை. அதாவது கரையோரங்களில் அடையும் மண்ணின் செறிவில் சமநிலை இன்மை ஏற்பட்டுள்ளது.
இதன்விளைவே கடலரிப்பு. கடற்கரையோரங்களை பொறுத்த வரை ஒரு புறத்தில் ஒன்றை செய்தால் அதனுடைய தாக்கத்தை மறுபுறத்தில் காணலாம். அதாவது ஓரிடத்தில் மண் குவியலும் இன்னுமொரு இடத்தில் அரிப்பும் ஏற்படும். எனவே முழுமையாக திட்டமிடப்படாத கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித்திட்டம் காரணமாகவே இலங்கையின் வடமேல் கரையோரங்களில் கடலரிப்பு தீவிரமடைந்து வருகின்றது. இலங்கை துறைமுக நகரம் வெளிநாட்டு நிறுவனமொன்றினால் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. எனினும் சில செயற்பாடுகளை நிறைவேற்ற தவறிவிட்டார்கள். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை (EIA) மேற்கொள்ளப்பட்டு மக்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒருமாத கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். எனினும் மக்கள் கருத்துக்கள் கிடைக்கவில்லையென இத்திட்டம் அப்போதிருந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. கொழும்பு துறைமுக நகர திட்டத்தால் மணல் சுற்றோட்டத்தில் தடை ஏற்பட்டு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் ஓரிடத்தில் மணல் குவிந்து தேவையற்ற நிலப்பரப்பொன்றை உருவாகி வருவதை காணலாம். இது மணல் சுற்றோட்டத்தில் ஏற்பட்ட தடை காரணமாக வே உருவாகியுள்ளது. அடுத்ததாக புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருவாகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. இதனால் அலைகளின் வீரியம் அதிகரித்து கடலரிப்பை விரைவுப்படுத்துகின்றன.
மேலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் கொந்தளிப்பு, ஆறுகளில் மணல் அகழ்வு போன்ற காரணங்களையும் குறிப்பிட முடியும். முத்துபந்திய கிராமம் 2010ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு கடலரிப்பு இனம்காணப்பட்டமையால் கல் அணைகள் போடப்பட்டன. எனினும் அது பயனளிக்கவில்லையென மக்கள் குற்றம்சாட்டுவதாக அவர் தெரிவித்தார்.
சுற்றாடல் நீதி நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவிக்கையில்,
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் முத்துராஜவெல சதுப்பு நிலங்களை நிரப்புவதற்காக களனிகங்கையில் பாரிய மணல் அகழ்வு இடம்பெற்றது.
இதனைதொடர்ந்தே கரையோரங்களை உருவாகுவதற்கு தேவையான வண்டல் மண்ணின் அளவு குறைந்தமையால் மேல், வடமேல் கரையோரங்களில் கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது. நீர்கொழும்பு, வென்னப்புவ, புத்தளம், முத்துப்பந்திய என இது நீடித்தது. அதனைத்தொடர்ந்து கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தியுடன் நிலைமை இன்னும் மோசமடைந்தது.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் போது முறையாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை (EIA) தயாரிக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டளவில் மண்நிரப்பப்படும் பகுதி தொடர்பாகவே EIA அறிக்கை தயாரிக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பில் 2015 ஆம் ஆண்டளவில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம்.
இதனையடுத்து கெரவலப்பிட்டி பிரதேசத்தை அண்மித்த பகுதியில் மணல் அகழ்வுக்காக இரண்டாவது EIA அறிக்கை தயாரிக்கப்பட்டது. எனினும் அவ்வறிக்கையில் துறைமுக நகர திட்டத்துக்கு தேவையான மணல் போதுமானதாகவில்லை என குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து கெரவலப்பிட்டியை அண்மித்த மற்றுமொரு பகுதியில் மணல் அகழ்வுக்காக மூன்றாவது EIA அறிக்கை பெறப்பட்டது. அதற்கமையவே அப்பகுதியிலிருந்து மணல் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டது. எனவே மண்ணின் அளவு இழக்கப்பட்டமையே கரையோரங்களில் கடலரிப்பு தீவிரமடைந்து வருவதற்கான பிரதான காரணமாகவுள்ளது. முத்துபந்திய , உடப்பு போன்ற பகுதிகளில் முறையாக கற்கள் போடப்படாமையால் அரிப்புக்குள்ளாகி வருகின்றது.
கொழும்பு துறைமுகநகர அபிவிருத்தி திட்டத்தின் EIA அறிக்கைகளில் கடலரிப்பு ஏற்படுவது குறித்து கூறப்பட்ட போதும் அதற்கான தீர்வுகள், அதற்காக ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் கூறப்படவில்லை.
அதேபோல் களனி, தெதுறு ஓயா, மகாவலி போன்ற ஆறுகளிலிருந்தே முத்துபந்திய, உடப்பு போன்ற கடற்கரையோரங்களுக்கு மண் கிடைக்கின்றது. எனினும் இந்த ஆறுகளில் பாரியளவில் மணல் அகழ்வு இடம்பெறுவதால் கடற்கரையோரங்களுக்கு தேவையான மண் கிடைப்பதில்லை. அளவுக்கதிமாக மணல் அகழ்வுக்கான அனுமதிகளும் வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இலங்கையில் நாளுக்கு நாள் மணலின் தேவை அதிகரித்து வருகின்றது. முழுநாட்டுக்கு அவசியமான மணலின் அளவு ஏறக்குறைய 21 மில்லியன் கன மீற்றர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதோடு இதன் பெரும்பகுதி ஆறுகள் மூலமாகவே வழங்கப்படுகின்றது. தற்போதுள்ள தகவல்களின் படி, 103 ஆறுகளில் 35 ற்கும் மேற்பட்ட ஆறுகள் சட்டவிரோத ஆற்று மணல் அகழ்வுக்கு உட்பட்டவை.
அதன்படி கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் மணலில் 50 % அதிகமானவை சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பெறப்படுவதாகவும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர
இலங்கையின் தென்மேற்கு மற்றும் தெற்கு கரையோர வலயத்தில் முருகைக் கற்பாறைகள், பவளப் பாறைகள், மணற் குன்றுகள் , கண்டல் தாவரங்களை அகற்றுதல் என்பனவும் கரையோர அரிப்பை துரிதப்படுத்தியுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது.
எதுஎவ்வாறாயினும் இங்கையின் கரையோரமானது சுமார் 1620 கிலோமீற்றர் (CCD 2024) நீளம் கொண்டது. மொத்த நிலப்பரப்பில் 24% இனைக் இது
கொண்டுள்ளது. சனத்தொகையில் 30% சதவீதமானோர் கரையோரப் பகுதிகளில் வாழ்வதுடன் நகர்ப்புற பெருந்நகரங்களும் கரையோரப்பகுதியிலேயே
அமைந்துள்ளன. மீன் உற்பத்தியில் 80% ஆழமற்ற கடற் பகுதியிலிருந்தே கிடைப்பதுடன் உப்பு, மணல் போன்ற இயற்கை வளங்களும் இப்பகுதியில் ஏராளமாக உள்ளன. அதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அழகிய கடற்கரைகள் காணப்படுகின்றன.
இவை அந்நிய செலவாணியை நாட்டுக்கு ஈட்டுதரும் முக்கிய தொழிலாகவுள்ளது, எனவே கடற்கரையோரங்களின் கடற்கரைகள் இழப்பு, பொருளாதாரம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
வசந்தா அருள்ரட்ணம்