பொருளாதாரப் பின்னடைவிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கை விடயத்தில், அண்மைய கடன் தரப்படுத்தல் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. கடன் தரப்படுத்தல் முகவர்களான ஃபிட்ச் மற்றும் மூடிஸ் ஆகிய முகவரமைப்புகளின் அண்மைய தரப்படுத்தல்கள், இலங்கையின் பொருளாதார மீட்சி செயற்பாட்டில் முக்கிய தருணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இறையாண்மைக் கடன்களைச் செலுத்த முடியாது என 2022ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்ததன் எதிரொலியாக ஏற்பட்ட நிதி ரீதியான கொந்தளிப்பைச் சமாளிப்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாகவும் இது அமைகின்றது. வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவரும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ரீதியில் பொறுப்புக் கூறும் தன்மை ஆகியவற்றில் செலுத்தப்படும் புதுப்பிக்கப்பட்ட அக்கறை உள்நாட்டு மறுசீரமைப்புகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரு சான்றாகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சியைப் பெறுவதற்கு முக்கியமானதாக இருப்பதால், இந்த வேகத்தைத் தக்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் 12.55 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதானது முன்னேற்றகரமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது. பெரும்பான்மையான சர்வதேச இறையாண்மை பத்திரங்களைக் கொண்டுள்ள கடன்வழங்குனர்களால் ஆதரிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை கடன்வழங்குனர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. மீளச்செலுத்த முடியாது போன கடன் பத்திரங்களை மறுசீரமைப்பதற்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம் இலங்கை கடன்சுமையை திறம்பட நகர்த்தியுள்ளது. நான்கு ஆண்டுகளில் கடன் சேவையில் எதிர்பார்க்கப்படும் 9.5 பில்லியன் டொலர் சேமிப்புகள், பொருளாதார மீட்பு முயற்சிகளை நோக்கி செலுத்தக்கூடிய இடைவெளியை வழங்குகின்றது.
இவ்வாறான பின்னணியில் இலங்கை தனது கடன்மறுசீரமைப்பை அதாவது இருதரப்பு மற்றும் சர்வதேச இறையாண்மைப் பத்திர உரிமையாளர்களுடனான கடன்மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் உதவித் திட்டத்தின் ஓர் அம்சமாக கடன்மறுசீரமைப்புக்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை இலங்கைக்குக் கிடைத்த சாதகமான சூழ்நிலையாகும்.
கடந்த காலத்தில் கடன் தரப்படுத்தலில் இலங்கை குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டதால் கடன்வழங்குனர்கள் மத்தியில் காணப்பட்ட சந்தேக நிலைமை தற்பொழுது மீளப்பெறப்பட்டுள்ளது. இந்த கடன்தரப்படுத்தலில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தியோகபூர்வ அங்கீகாரமாக அமைந்திருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். மத்திய வங்கி மற்றும் திறைசேரி உள்ளிட்ட சகல தரப்பினரும் கடுமையான அர்ப்பணிப்பான முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.
எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியலாளருமான கலாநிதி ஹர்ஷ.டி சில்வாவும் இலங்கை அடைந்திருக்கும் இந்த முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ளார். கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, கடன் நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை முதலீட்டாளர்கள் உட்பட முழுப் பொருளாதாரத்திற்கும் நல்ல செய்தியாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சாதகமான வளர்ச்சி இருந்தபோதிலும், கடன் வாங்குவதற்கு சர்வதேச நிதிச் சந்தைகளை அணுகும் நிலையில் இலங்கை இன்னும் இல்லை என்றாலும், தற்போதைய நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கைகளைப் பார்க்கிலும், முக்கிய சட்டம் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகள் உட்பட, முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளும் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதையும் அவர் நினைவுபடுத்தியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் தேவையான மாற்றங்களுடன் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்திருந்தமை இந்த ஸ்திரமான தன்மைக்குப் பிரதான காரணம் என்று கூறவேண்டும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டில் இருந்ததைவிட மோசமான நிலைக்கு நாடு சென்றுவிடும் எனப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் இவை அனைத்தையும் பொய்ப்பிக்கும் வகையில், அரசாங்கம் எதுவித அவசரமும் இன்றி நிதானமாக ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்து வருகின்றது. கடன் தரப்படுத்தில் இலங்கைக்கு சாதகமான சூழல் ஏற்பட இது பிரதான காரணம் எனக் கூறலாம்.
இது தவிரவும், மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி அதிகரிப்புப் போன்ற பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் காலங்களில் கூறியிருந்தனர். இதன் ஓர் அங்கமாக குழந்தைகளுக்கான உள்நாட்டு தூயபால் மற்றும் யோகட் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட வற் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அது மாத்திரமன்றி சமூகத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்பினருக்கான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பைப் பலப்படுத்தும் வகையில் அஸ்வெசும கொடுப்பனவுகளைத் தொடர்ந்து வழங்குவதற்கும், ஓய்வூதியம் பெறுவோர் போன்றவர்களின் நிலையான வைப்பு வட்டிக்கு அறவிடப்படும் தடுத்துவைக்கும் வரியைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
பொருளாதாரத்தை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் அதேநேரம், மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடன் தரப்படுத்தலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் 2025ஆம் ஆண்டில் புதியதொரு ஆரம்பத்திற்கு வித்திட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, 2025ஆம் ஆண்டுக்கான புதிய அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டம் மார்ச் மாதத்தில் முன்வைக்கப்படவுள்ளது. மக்களின் ஆணையைப் பெற்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றன. கடன் தரப்படுத்தலில் கிடைத்துள்ள சாதகமான பதிலுடன் அரசின் எதிர்காலப் பொருளாதார செயற்பாடுகள் சரியான பாதையில் நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆரம்பமாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
பி.ஹர்ஷன்