கிறிஸ்து பிறப்பு என்றாலே நம் உள்ளத்தில் ஓர் ஆனந்தம். ஓர் அற்புத ஒளி நம் கண்களில் மின்னிடும். நாம் எண்ணுவதும் எண்ணாததும் நிகழ்ந்தேறும்.
கிறிஸ்து பிறப்புக் காலமிது. திருத்தந்தை இந்நாளை அருளின் நாள், அமைதியின் நாள், அன்பின் நாள் என அழகாகச் சொல்கிறார். கடவுளின் அருள் மனித உடலாக இம் மண்ணில் பிறந்த நாள். அமைதியின் அரசர் சத்திரம்கூட இல்லாது ஏழைக்காய் மலர்ந்த நாள்.கிறிஸ்து பிறப்பு பெருமகிழ்ச்சியை அள்ளித்தருகிறது.
மகா ஏரோது அரசன் ஆட்சியில் நிகழ்ந்ததை முதலில் நோக்குகின்றோம். பைபிளில் மத்தேயுவின் நற்செய்தியானது, யூதர்களின் அரசர் இயேசுவின் பிறப்பைக்கூறிய ஒரு விண்மீனைப் பின்பற்றி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளின் பயணத்தை விபரிக்கிறது. ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரைக் வணங்க வந்திருக்கிறோம்.” என்றார்கள், இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.(மத்தேயு:2:2-3)
இந்த ஏரோது பகைமையுணர்வு கொண்டவன். ஏரோது முறையான வகையில் அரசனாகப் பதவி ஏற்கவில்லை. அவன் பல சூழ்ச்சிகளைச் செய்தவன். ஊழல் மோசடிகளைச் செய்து பலரைக் கொலைசெய்து அரச பதவியை ஏற்றவன். இதனால் இயேசு பிறக்கும்போது தன்னியல்பை இழந்தவன். தர்க்கத்தை இழந்தவன். சிந்திக்கும் திறன் பாதிக்கப்பட்டு விபரீத தீர்மானங்களை நிறைவேற்றியவன் என வரலாறு கூறுகின்றது. ஆகவே வேறு ஓர் அரசன் வருகை தந்துள்ளார் என கேள்வியுற்றதும் தனக்கு தற்காப்பின்மையை உணர்ந்து கலங்கினான்.
ஏரோது பாதுகாப்பின்மையை கையாள எடுத்துக் கொண்ட ஆயுதம், அரச பயங்கரவாதக் கொலைகள்.அதிகார நாற்காலியை தக்கவைக்க எடுத்துக்கொண்டது கொடுங்கோண்மை. அதிகாரத்தைச் சுவைத்த ஏரோது அதைத் சூழ்ச்சிகள் செய்தும், ஊழல்கள் செய்தும் தன்வசப்படுத்திக்கொண்டு துரோகத்தால் அதன்பலத்தை விரிவுபடுத்தினான். அச்சந்தர்ப்பத்தில் அந்த ஓர் இரவில் ஏரோதின் அரண்மனைமீது நட்சத்திரம் திகில் ஏற்படுத்துகின்ற பயங்கரமான பிரகாசத்தை வீசியது. ஞானிகள் அப்போது தங்கத்தினால் ஆன ஆடைகளை அணிந்து, சிங்காரமான தோற்றம் கொண்டு பரிசுகளைச் சுமந்து ஏரோதின் அரண்மனைக்கு வந்தார்கள். அவர்களின் வருகை ஏரோதிற்கும் அவர்களைப் பார்த்த அனைவருக்கும் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஞானிகளின் வருகை, ஏரோதின் உலகத்தை தலைகீழாக மாற்றியது. அவனது இதயத்தில் பேரச்சமும் கலக்கமும் பற்றிக்கொண்டது. ஏரோது இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தியவன். அவனது இராச்சியத்தின்மேல் அசைக்க முடியாத கட்டுப்பாட்டைக் கொண்டு ஆட்சி செய்யும் ஒரு வல்லமைமிக்க ஆட்சியாளர். செழுமையால் நிறையப்பெற்று ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அவனது அரண்மனை பரந்த ஒருநகரத்தை கீழே கொண்ட பசுமையான ஒரு மலையின்மீது அமைந்திருந்தது. அது அவனின் அதிகாரத்தின் சின்னமாக இருந்தது.
ஏரோது தனது சிம்மாசன அறையில் இருந்து ஞானிகளை வாழ்த்தியபோது ஓர் அமைதியின்மை தன்னை முழுவதும் ஆட்கொள்வதாக உணர்ந்தான். ஞானிகளின் கண்கள் அவனது பலத்தினைத் துளையிடுவதுபோல் அவனுக்குத் தோன்றியது என்கின்றனர் ஆய்வாளர்கள். அது அமைதியற்ற நிலையுடன் அவனது ஆன்மாவின் ஆழத்தைப் துளைத்துப் பார்த்தது. அந்தவேளை ஏரோதின் ஆட்சியின் போக்கை என்றென்றும் மாற்றியமைக்கும் நகர்வைக் குறித்து ஞானிகள் அமைதியான தொனியில் பேசினார்கள்.
இரவு கடந்ததும், ஞானிகளின் வருகைபற்றிய கிசுகிசுக்கள் ஏரோதின் இராச்சியம் முழுவதும் காட்டுத் தீயைப்போல பரவியது. ஏரோதின் குடிமக்கள் மத்தியில் பயத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் தூண்டியது. வரவிருக்கும் அழிவு மற்றும் தெய்வீக பழிவாங்கல் பற்றிய வதந்திகள் தெருக்களில் சுழன்று, அது மக்களின் இதயங்களில் அமைதியின்மை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள், ஏரோதின் அதிகாரத்தின் மீதான பிடி பலவீனமடைந்தது. பண்பாடு, பொருளாதாரம் உறுதியற்ற தன்மையை நோக்கி நகர்ந்தது.
குழந்தையைத்தானும் சென்று வணங்க வேண்டும் என மோசமன பொய்யார்வம் காட்டி குழந்தையின் இருப்பிடத்தை அறிந்ததும் தனக்குத் தெரிவிக்குமாறு ஏரோது ஞானிகளிடம் கோரினார். ஞானிகள் ஒரு கனவில் எச்சரிக்கப்பட்டபோது ஏரோதிடம் திரும்பவில்லை. இதனால் ஏரோது பெத்லகேம் மீது தனது கோபத்தைக் கட்டவிழ்த்துவிட்டான்.
நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்றான். இந்த மிருகத்தனமான செயல், பயம் மற்றும் பாதுகாப்பின்மையால் உந்தப்பட்ட ஒரு கொடுங்கோலனாக அவனது பாரம்பரியத்தை உறுதிப்படுத்தியது.
ஏரோதின் ஆளுகைப் பாணியானது சர்வாதிகாரத்தின் கலவைகளால் வகைப்படுத்தப்பட்டது. எதேச்சதிகார ஆட்சியின் அடையாளமான ஏரோது, அசைக்க முடியாத நம்பிக்கையை தன்னில் மட்டும் வைத்திருந்தார். சீர்திருத்தமும் உறுதித்தன்மையும் பற்றிய அவனது ஆரம்பகால வாக்குறுதிகள் அவன் அதிகாரத்தை ஒருங்கிணைத்தவுடன் சிதறடிக்கப்பட்டன.
அவனது சகாப்தம், சுதந்திரமான பேச்சு, மக்களின் சிவில் உரிமைகள் ஆகியவற்றில் கடும் தடையைக் காட்டியது. அவனது தலைமை அரசியல் சுத்திகரிப்பு, கருத்து வேறுபாட்டிற்கான கடுமையான அணுகுமுறை, நிலவும் அவநம்பிக்கைச் சூழ்நிலையால் குறிப்பிடப்பட்டது. எந்த வகையான எதிர்ப்பையும் கடுமையான விளைவுகளை சந்திக்கும் ஒரு நிலையாக மாற்றினார். இதனால் ஏரோது, யூத குடிமக்கள் மத்தியில் செல்வாக்கற்றவனாகுகின்றான். அவனது சிம்மாசனத்திற்குப் பொருத்தமான போட்டியாளர் பற்றி ஞானிகளின் செய்தி, ஏரோதின் சித்தப்பிரமையைப் கொள்ளவைத்தது.
திணையளவும் சறுக்காத ஞானிகளின் தீர்க்கதரிசனங்கள் ஏரோதின் மனதை கனமாக அழுத்தியது, ஒரு காலத்தில் இருந்த அவனது அசைக்க முடியாத நம்பிக்கையின்மீது சந்தேகத்தின் நிழல் எட்டிப்பார்த்தது. ஒரு காலத்தில் அவனது ஆட்சியை இயக்கிய பயம் இப்போது உள்நோக்கித் திரும்பியது. அவனைச் சித்தப்பிரமை மற்றும் பாதுகாப்பின்மை விழுங்கியது. ஞானிகளின் வார்த்தைகளால் வேட்டையாடப்பட்ட மனதுடன் நாளடைவில் ஏரோது தனது கீரிடத்தைக் கைவிட்டு, அரியணையிலிருந்து இறங்க நேர்ந்தது.
ஏரோது கட்டவிழ்த்துவிட்ட பயம், அப்பாவிகளின் படுகொலை, அவனது கொடுங்கோண்மை யூதேயாவில் ஒரு நிலையான வடுவை ஏற்படுத்தியது.
மாமன்னன் நெப்போலியன் கூற்று:’நானும் அலெக்சாண்டரும் ஆயுத பலத்தால் அடக்கி ஆளமுயன்றோம். எங்கள் அரசு நிலைக்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கின்றார். அவரது அரசு என்றும் நிலைத்திருக்கும்.”ஓர் அரசனுக்கு வெற்றி தருவது ஆயுத பலமல்ல.
நீதி நெறி தவறாத ஆட்சி முறையே. அதனால்தான் மன்னன் சாலமனுக்காகத் திருப்பாடல் ஆசிரியர் இப்படி மன்றாடுகிறார்: ‘கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக. உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!” (திருப்பாடல்.72:1-2)
ம.பிரான்சிஸ்க் (தொடர்பாடல் ஆசிரியர்)