சமகால அராங்கம் முன்னெடுக்கவுள்ள புதிய அரசியல்யாப்பின் மூலம் அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிட்டும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு முன்னெடுக்கப்படுவதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நரேந்திர மோடியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து உள்ளூர் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் “தினகரன் வாரமஞ்சரி”க்கு அளித்த விசேட நேர்காணலிலே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
சில வங்குரோத்து அரசியல்வதிகள் இந்த விஜயம் தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் முன் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விமல் வீரவன்ச போன்றோர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்திய ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி, இந்தியாவுக்குச் சென்றார். அங்கு இராஜதந்திர மட்டத்தில் மிகவும் கௌரவமான முறையில் இந்திய பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். இந்த விஜயத்தின் மூலம் இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் பாரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த விஜயம் இரு நாடுகளுக்கிடையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்பில் புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
கேள்வி: – – இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அங்கு பேசப்பட்டதாகவும். மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தவேண்டுமென்றும் இந்திய பிரதமர் வலியுறுத்தியதாகவும் சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது ?
பதில்: – மாகாண சபைத் தேர்தல் குறித்து இவ்வாறான வலியுறுத்தலை இந்தியப் பிரதமர் மேற்கொள்ளவில்லை. மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்வதை அவர் வரவேற்றார் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று சமகால அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களுக்கும் இந்திய பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். இதுவே அங்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வாகும். இந்த விடயங்கள் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கேள்வி: – – இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள உடன்பாடுகள் என்ன? இதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடுங்கள்
பதில்: – – இந்த விஜயத்தின் போது, இரு உடன்படிக்கைகள் எம்மால் கைச்சாத்திடப்பட்டன. (1) 1500 அரசாங்க ஊழியர்களுக்கு இரண்டு வார பயிற்சிக் கற்கைநெறி, 5 வருடங்களுக்கு வழங்குவதற்கு இந்திய தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பான உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திட்டோம். இது எமது நாட்டின் அரச ஊழியர்களின் அரச சேவை தொடர்பான புரிந்துணர்வு அறிவாற்றல் வழங்கக்கூடிய கற்கை நெறியாகும். (2) இரு நாடுகளுக்கிடையில் வரி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது நிதித்துறையில் இரண்டு நாடுகளுக்கும் பயனுள்ளதாகும்.
கேள்வி: – – இந்த உடன்படிக்கைகளுக்கு மேலதிகமாக ஏதேனும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதா?
பதில்: – – இரு தரப்புக்கிடையிலான நல்லுறவை வலுவாக முன்னெடுப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. எரிசக்தித்துறை தொடர்பான திட்டங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன. இத்துறையோடு தொடர்புபட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் நிர்வாக செயல்திறன் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் உடன்பாடும் எட்டப்பட்டது.
கேள்வி: – – இந்தத்திட்டம் இருநாட்டு அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ளதா அல்லது தனியார் துறையுடன் மேற்கொள்ளப்படவுள்ளதா?
பதில்: – இதில் இரண்டு தரப்பிலும் ஈடுபடுவார்கள். ஆனால் இதுதொடர்பான உடன்படிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த விடயம் குறித்து கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுக்க இணக்கப்பாடு காணப்பட்டால் மாத்திரமே தீர்மானம் மேற்கொள்ளப்படும். விசேடமாக காற்று மூலமான மின் உற்பத்தியை இலங்கையில் மேற்கொண்டு இந்தியா உள்ளிட்ட வங்காள விரிகுடா நாடுகளுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இது பிராந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார புரிந்துணர்வின் அடிப்படையில் இடம்பெறும். இரு தரப்பிலும் உடன்பாடு தெரிவிக்கப்பட்ட போதிலும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் சம்பூரில் சூரிய சக்தி தொடர்பில் இந்திய நிறுவனத்துடனும் மின்சார சபையுடனும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட திட்டம் தற்பொழுது நடைமுறையிலுண்டு. இதனை விரைவாக நிறைவுசெய்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு துறைமுக கிழக்கு பகுதி அபிவிருத்தி குறித்த அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையும் உள்ளது. இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு ஆகக் கூடிய வகையில் பங்களிப்பு செய்வதாக இந்தியா அசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து
அதாவது (EDCA) குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். ஆனால் சில தரப்பினர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இது குறித்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இவை உண்மைக்கு மாறானவை.
கேள்வி: – – இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடியூடாக இலங்கையின் தலைமன்னார் வரையில் பாலமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி உடன்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா?
பதில்: – – இது முன்னைய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒன்று. எமது இந்த விஜயத்தின் போது இவ்வாறான பாலமொன்றை அமைப்பதற்கு எந்த உடன்பாட்டையும் நாம் தெரிவிக்கவில்லை.
கேள்வி: – – மற்றுமொரு குற்றச்சாட்டு. திருகோணமலையிலுள்ள எரிபொருள் குதங்களை இந்தியாவுக்கு வழங்கப் போவதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
பதில்: — முன்னைய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொளப்பட்ட உடன்பாட்டுக்கமைவாக திருகோணமலையிலுள்ள 15 எரிபொருள் குதங்கள் தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24 குதங்கள் எம்முடம் உண்டு. இதேபோன்று இரு நாடுகளும் உடன்பட்ட மேலும் 61 எரிபொருள் குதங்கள் உள்ளன. இவை முன்னைய உடன்பாட்டுக்கு உட்பட்டதாகும். இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இதுதவிர புதிதாக எந்த உடன்படிக்கையும் கிடையாது.
கேள்வி: – எரிபொருள் குழாய் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் தொடர்புபடுத்துவது, இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பதில்: – அது இந்திய – இலங்கை அரசாங்கங்கள், ஐக்கிய அரபுடன் ஒன்றிணைந்து எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான திட்டமாகும். இது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. இது தொடர்பில் இறுதிமுடிவு எட்டப்படவில்லை. இதன்மூலமான நன்மை தீமைகளை ஆராய்ந்து நாம் உடன்பாடு தெரிவித்துள்ளோம். இலங்கைக்கு உட்பட்ட கடல் பிராந்தியத்தையும் நிலத்தையும் இந்தியாவுக்கோ பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதற்கோ இடமளிப்பதில்லை என்றும் நாம் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம்.
கேள்வி: – – சுற்றுலா தொழில்துறை தொடர்பில் எவ்வாறான உடன்பாடு எட்டப்பட்டது?
பதில்: புத்தகாய, பௌத்த வழிபாட்டிற்கு முக்கியமான இடமாகும். இங்கிருந்து பலரும் அங்கு செல்கின்றனர். இதேபோன்று இந்தியாவிலிருந்து இராமேஸ்வரம் மற்றும் சீதா எலியவுக்கு பெரும்பாலானவர்கள் வழிபாடுகளுக்கு வருகின்றனர். இதற்கான சுற்றுலா துறையை விரிவுபடுத்துவதற்கு நாம் உடன்பட்டுள்ளோம்.
கேள்வி: இதில் பாதுகாப்பு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது யுத்தம் தொடர்பான விடயமல்ல. இது சமூக பாதுகாப்பு உடன்படிக்கையாகும் இலங்கையில் பணி புரியும் இந்திய பிரஜைகளுக்கு நாம் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவுகளை வழங்கிவருகிறோம்.
ஆனால் இந்தியாவில் தொழில் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு அவ்வாறான நன்மைகள் வழங்கப்படுவதில்லை.
பதில்: நாம் எமது பிரஜைகளுக்கு இதனை வழங்கவேண்டுமென்று அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். இதனைத்தான் திரிபுபடுத்தி சிலர் பார்க்கின்றனர். அதன்அடிப்படையிலேயே இதனை பாதுகாப்பு உடன்படிக்கை என்கின்றனர். இதேபோன்று வீசா வழங்கும்பொழுது இந்தியா உள்ளிட்ட 39 நாடுகளுக்கு கட்டணம் அறவிடப்படுவதில்லை. இலங்கையர் இந்தியாவுக்குச் செல்லும் போது அவர்களிடம் விசா கட்டணம் அறவிடப்படுகிறது. நாம் இவ்வாறு கட்டணம் அறவிடக்கூடாது என்று அவர்களிடம் கேட்டுள்ளோம். இந்த விடயத்தில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி இதற்கு உடன்படவும் முன்வந்துள்ளனர். மகாபோதி நிறுவனத்திற்கு வெளிநாட்டவர்கள் நிதியுதவி வழங்குகின்றனர். அந்த பணம் இந்தியாவிலிருப்பதினால் அதனை எம்மால் பயன்படுத்த முடியாது. இந்த விடயத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக் கைகளை மேற்கொண்டு எமக்கும் இதில் நிதியுதவி கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டுமென்ற விடயத்தில் உடன்பாடு காணப்பட்டது.
கேள்வி: இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எவ்வாறான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது?
பதில்: இலங்கை கடற்றொழில் அமைச்சும் ,கடற்றொழில் சங்கங்களும் கூட்டாக இந்திய கடற்றொழில் அமைச்சுடன் தற்போது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் தடைசெய்யப்பட்டுள்ள ட்ரோலர் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா மீனவர்களுக்கும் ஏனைய கடல் பிரதேசங்களுக்கும் செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்கப்படுகிறது. அந்த நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் எமது கடல் பிரதேசத்தில் அத்துமீறி பிரவேசிப்பதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக மனிதாபிமான ரீதியில் விடயங்களை முன்னெடுப்பதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வை வழங்குவதற்கு இந்தியா, இலங்கை அரசாங்கதத்தை வலியுறுத்த வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதமென்றை பிரமதர் மோடிக்கு எழுதியுள்ளார். வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எமக்கு வாக்களித்துள்ளனர். எம்மீது நம்பிக் கை கொண்டுள்ளனர். இதனை எம்முடனான பேச்சுவார்த்தையின் போது, இந்திய அரசாங்கம் குறிப்பிட்டது. இதேபோன்று நாம் இனவாதம், மத வாதத்திற்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதையும் இவ்வாறான அழுத்தங்கள் நாட்டில் ஏற்படாதிருக்க நாம் பொறுப்பாக செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்தனர். தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து மக்களினதும் பாதுகாப்பு தற்பொழுது எம்மால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பொன்றை பொதுமக்கள் மத்தியில் சமர்ப்பித்து அதற்கு மக்களின் உடன்பாட்டை பெற்றுக்கொள்வோம். இதனை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம். திருப்திகொண்டனர்.
கேள்வி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டுமென்று இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்ததாக சில தமிழ் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தனவே?
பதில்: – எமது ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடயில் பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 13 ஆவது திருத்தம் அல்லது வேறு எந்த விடயங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. இலங்கை அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது சிறந்ததொரு விடயமாகுமென்று பிரதமர் மோடி தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். இது தவிர இதனை நடத்தவேண்டுமென்று எந்தவித அழுத்தத்தையும் அவர்கள் பிரயோகிக்கவில்லை. இது தவறான கூற்றாகும்.
கேள்வி: மில்கோ மற்றும் என்எல்டிபி கால்நடை பண்ணை, இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு விற்கப்படப்போவதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பதில்: – கால்நடை பண்ணைகள் மற்றும் பாலுடன் தொடர்புபட்ட தயாரிப்புகளை மேம்படுத்தவதற்காக இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வை மேற்கொள்வதற்கு நாம் உடன்பாடு தெரிவித்தோம். அதனை விடுத்து இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு மில்கோ நிறுவனத்தை விற்பதற்கு நாம் உடன்படவில்லை. அமுல் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கூட்டுறவு நடைமுறையை நாம் விரும்புகிறோம். இது எமது பால் பண்ணைகளையும் கால்நடை துறைகளையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமையும் என்பதனாலேயே இதில் நாம் கவனம் செலுத்தினோம். இதே போன்று எமது நாட்டு இறையாண்மை ஆட்புல ஒருமைப்பாடு முதலானவற்றை எந்வொரு நாட்டுக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. இதேபோன்றே நாம், சீனா, அமெரிக்கா, ரஷ்யா வடகொரியா கியூபா தென்கொரிய , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவோம். இதன்போது, எந்தவொரு நாட்டுக்கும் இரண்டாந்தரப்பாக நாம் செயல்படமாட்டோம்.
கேள்வி: – பிரிக்ஸ் அமைப்புடன் நாம் தொடர்புபட முடியாமற்போனமைக்கு எம்மை அந்த அமைப்பு நிராகரித்தமைதான் காரணமென்று சிலர் கூறுகின்றனர்?
பதில்: – இது முற்றிலும் தவறான கூற்று. அந்த அமைப்பு முக்கிய அங்கத்தவர்களைத் தவிர அதன் அங்கத்துவ உறுப்பினர் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில்லையென தீர்மானித்துள்ளது. இலங்கையை அது நிராகரிக்கவில்லை. ஆனால் இது தொடர்பில் தவறான கருத்துக்கள் இங்கு தெரிவிக்கப்படுகின்றன.
கேள்வி: – சமகால அரசாங்கம் அதன் தலைவர் ரோஹண விஜயவீர கடைப்பிடித்த சேகுவேரா கொள்கையைக் கொண்ட அரசாங்கம், அவ்வாறான அரசு உலகில் எந்த நாட்டிலும் இல்லை.
தற்பொழுதே இலங்கையில் இதனைப் பின்னணியாகக் கொண்ட உங்களது அரசாங்கம் தீவிர இடதுசாரிக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்குமா? அதாவது 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கம் முன்னெடுத்த முற்போக்குத் திட்டங்களை உங்களது அரசாங்கம் மேற்கொள்ளுமா?
பதில்: – இவ்வாறான கொள்கைத் திட்டங்கள் தற்போதைய காலத்திற்கு உகந்ததல்ல. தற்போதைய காலத்திற்கேற்ற வகையிலும் உலகத்திற்கு அமைவாகவும் நாம் பொதுமக்களின் நலனைக் கருததிற்கொண்டு திடடங்களை முன்னெடுப்போம்.
கேள்வி: – அப்போதைய நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேரா தீவிர முற்போக்கு இடதுசாரி கொள்கையுடன் செயற்பட்டவர். கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவருவதற்காக 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை நாணயத்தில் ஆகக் கூடிய மதிப்பைக் கொண்ட 50 மற்றும் 100 ரூபா நாணயத்தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தாரே?
பதில்: – இப்போதைய காலத்திற்கேற்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஏ.கே.எம்.பிள்ளை