லங்கா டி10 சுப்பர் லீக் தொடர் அவசரமாக ஆரம்பித்து அவசரமாக முடிந்துவிட்டது. ஒருநாளில் மூன்று போட்டிகள் என்று இடைவிடாது ஒன்பது நாட்களில் தொடரே முடிந்துவிட்டது. முதல் போட்டிக்கும் இறுதிப் போட்டிக்கும் இடையே சுதாகரிக்க நேரமே இருக்கவில்லை.
ஒருவேளை அணிக்கு பத்து ஓவர் கொண்ட போட்டி என்பதால் இருக்கலாம். இலங்கையில் முதல் முறையாக டி10 கிரிக்கெட் அறிமுகமானதாகக் கூட இருக்கலாம், அல்லது அடிக்கடி பெய்த மழை கூட காரணமாக இருக்கலாம்; பெரிதாக பரபரப்பு காட்டாமல் தொடரே முடிந்துவிட்டது. என்றாலும் இந்தத் தொடரில் பரபரப்புக் காட்டியவராக கோல் மார்வல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கூரை குறிப்பிடலாம்.
உண்மையில் அவர் ஒரு விளையாட்டு அணியின் உரிமையாளராக இருந்தாலும் வேறு விளையாட்டுக்குத்தான் அணியையே வாங்கி இருப்பது போல் தெரிகிறது. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைதான தக்கூர் நீதிமன்றத்திற்கு அழைக்கழிய வேண்டியதாயிற்று. அத்தோடு இது பாடுபட்டு ஆரம்பிக்கப்பட்ட முழுமையான லங்கா டி10 தொடரின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குரியாக்கி இருக்கிறார்.
ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்கு தனது அணி வீரர் ஒருவரை அணுகியதே அவர் மீதான குற்றச்சாட்டு. அவர் அணுகிய வீரரோ உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலிடம் முறையிட்டு விட்டார். கடைசியில் தக்கூரை இலங்கை விளையாட்டு பொலிஸ் பிரிவு கைது செய்தது.
இத்தனைக்கும் காரணம் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் அன்ட்ரே பிளட்சர்தான். அவர்தான் தக்கூர் பற்றி முறைப்பாடு செய்திருந்தார். கோல் மார்வல்ஸ் அணிக்காக ஆடும் பிளட்சரை அணுகிய தக்கூர் போட்டியை தோற்கும்படி கூறி இருப்பதாக அவர் முறையிட்டிருக்கிறார்.
வேண்டுமென்றே போட்டியை தோற்பதற்கு பிளட்சருக்கு 15,000 அமெரிக்க டொலர்களை வழங்கவும் போட்டியின் குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடும் பந்துவீச்சாளரை பயன்படுத்துவதற்கு 30,000 டொலர்களை வழங்கவும் உரிமையாளர் முன்வந்திருக்கிறார். இது தவிர, தனது சொல்லுக்கு கட்டுப்பட்டால் கோல் மார்வல்ஸ் அணியின் தலைமை பொறுப்பையும் பிளட்சருக்கு வழங்க தக்கூர் முன் வந்ததாகவும் பிளட்சரின் குற்றச்சாட்டில் உள்ளது.
இதற்கு வளைந்து கொடுக்காத பிளட்சர் அடுத்த நொடியே ஐ.சி.சி. இடம் முறையிட்டதோடு அதற்கான ஆதாரங்களையும் கையளித்திருக்கிறார். இதனை அடுத்து சரியாக போட்டி ஆரம்பித்து அடுத்த நாள் அதாவது கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி தக்கூர் கைது செய்யப்பட்டார்.
முதல் நாள் போட்டியில் 37 வயதான அன்ட்ரே பிளட்சர், கண்டி போல்ட்ஸ் அணிக்கு எதிராக 21 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை விளாசி இருந்தார். என்றாலும் எவின் லுவிஸுக்கு ஏற்பட்ட காயத்தை அடுத்து பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு அழைக்கப்பட்டதால் லங்கா டி10 தொடரின் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
ஆட்ட நிர்ணய விவகாரத்தில் வீரர்களுக்கு ஐ.சி.சி. கண்டிப்பான விதிகளை கொண்டு வந்திருப்பதால் அவர்களாலும் இதனை கடந்து செல்ல முடியாது. யாரேனும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட அணுகினால் அது பற்றி அவர்கள் உடன் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவுக்கு முறையிடுவது கட்டாயமாகும். இல்லாவிட்டால் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடாவிட்டாலும் அந்த வீரர்கள் கடும் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.
இதற்கு நல்ல உதாரணம் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன ஜயவிக்ரம. அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட தம்மை அணுகியதை தாமதம் இன்றி ஐ.சி.சி. இடம் முறையிட தவறினார். இது தொடர்பிலான குறுஞ்செய்திகளையும் அழித்திருக்கிறார்.
இதனால் ஜயவிக்ரமவுக்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் கடந்த ஒக்டோபரில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓர் ஆண்டு தடை விதித்தது. இவ்வாறான கண்டிப்பான முடிவுகளே ஆட்ட நிர்ணய விவகாரங்கள் உடன் வெளிச்சத்திற்கு வருவதற்கு காரணமாகி வருகிறது.
என்றாலும் இலங்கை லீக் கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணய விவகாரம் சர்ச்சையை கிளப்புவது இது முதல் முறையல்ல. அதிலும் இந்த ஆண்டில் இது நிகழ்வது இரண்டாவது முறை. முன்னதாக நடந்த லங்கா பீரிமியர் லீக் தொடரில் தம்புள்ள தண்டர்ஸ் அணியின் இணை உரிமையாளரான தமீம் ரஹ்மான் கடந்த மே மாதம் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேபோன்று 2023 மார்ச் மாதத்தில் பல்லேகலவில் நடைபெற்ற லெஜன்ட் கிரிக்கெட் லீக் டி20 தொடரிலும் ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் வீரரும் தற்போதைய தேர்வுக் குழு தலைவராகவும் இருக்கும் உபுல் தரங்க மற்றும் நியூசிலாந்தின் நீல் புரும் உட்பட முன்னாள் வீரர்களை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட முயன்றதாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இத்தனைக்கும் தெற்காசியாவில் முதல் நாடாக 2019 ஆம் ஆண்டிலேயே ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது இலங்கைக்கு குற்றமாக்கப்பட்டது. இதற்கு அபராதங்கள் மற்றும் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
என்றாலும் இலங்கையில் நடத்தப்படும் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்தடுத்து ஆட்ட நிர்ணய விவகாரத்தில் சிக்குவது நல்லதல்ல.
டி10 கிரிக்கெட் என்பது டி20 கிரிக்கெட்டின் சுருக்கம். மொத்தமாக 60 பந்துகளுடன் 90 நிமிடங்கள் மாத்திரம் நீடிக்கும் இந்தப் போட்டி 2017 டி10 லீக் கிரிக்கெட்டாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிமுகம் பெற்று உலகெங்கும் பரவி வருகிறது. 2020இல் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் இதற்கு அங்கீகாரம் அளித்த பின்னர் இந்த குறுகிய கிரிக்கெட்டின் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக டி டென் ஸ்போட்ஸ் அமைப்பே இந்த வகை கிரிக்கெட்டை ஏற்பாடு செய்து வருகிறது. லங்கா டி10 கூட இந்த நிறுவனத்திற்கு உரித்தானது. இதனால் நடத்தப்படும் அபூதாபி டி10 தொடரிலும் ஆட்ட நிர்ணய சர்ச்சை கிளம்பியது.
இந்த விவகாரத்தில் அந்த லீக் கிரிக்கெட்டின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் சன்னி டிலோனுக்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஆறு ஆண்டு தடை விதித்தது. 2021 தொடரின்போது ஆட்ட நிர்ணய விவகாரத்தில் சிக்கிய எட்டு பேரில் டிலோனும் இருந்தார்.
இப்போது இந்த தொடரில் இடம்பெறும் அசாதாரண நிகழ்வுகள் எல்லாம் ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபடுத்தி உன்னிப்பான அவானிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பரில் நடந்த போட்டி ஒன்றில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேகப்பந்து வீச்சாளர் ஹஸ்ரத் பிலால் வழக்கத்துக்கு மாறாக கோட்டுக்கு வெளியில் காலை நீட்டி வீசிய நோபோல் பந்து, தசுன் ஷானக்க ஒரு ஓவரில் 30 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தது எல்லாம் தப்பான கோணத்தில் பார்க்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டு புதிய பரிமாணங்களை எட்டும்போது அதில் மோசடிகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்குவது கட்டாயம் என்றபோதும் அது ஒட்டுமொத்த விளையாட்டையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.
எஸ்.பிர்தெளஸ்