மூலோபாயமானது முழுப் போராட்டத்தின் மையமாகும்; அதற்கான பாதையின் தற்காலிக – உடனடி சமரே தந்திரோபாயமாகும்” என்பார் லெனின் (“இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு” – நூலிலிருந்து).
இந்தியாவுடனான ஜேவிபியின் முரணையும் உறவையும் இந்தக் கோணத்தில் பார்ப்பதா என்பதே இந்த வாரம் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களாகும்.
இந்தியத் தலையீட்டு மரபு
கிறிஸ்துவுக்கு முன்னர் இருந்தே இலங்கை மீதான ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு உண்டு.
இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஐதீகங்களைப் பலப்படுத்தி வந்த காரணிகளை சுருக்கமாக இவ்விடயப் பரப்புக்குள் உள்ளடக்கலாம்.
* தென்னிந்திய ஆக்கிரமிப்பு படையெடுப்புகள்
* காலனித்துவ கால இந்தியத் தமிழர்களின் குடியேற்றமும் சிங்களவர்களுக்கு அடுத்ததாக பெரும்பான்மை இனமாக அவர்கள் ஆனதும்.
* 1920 களில் இருந்து இந்திய வம்சாவளியினர் வழியாக இந்தியத் தலையீடுகளும், சிங்களத் தலைவர்களுடனான கருத்து மோதல்களும்.
* தென்னிந்திய திராவிட இயக்கங்களின் செல்வாக்கும், திராவிடஸ்தான் பீதியும்
* இந்திய முதலீடுகளும், சுரண்டலும்
* ஈழப் போராட்டமும் அதற்கான இந்திய மத்திய அரசினதும், தமிழ்நாடு அரசினதும் அனுசரணைகளும் ஆதரவும்
* 1987 இல் இருந்து இலங்கை ஒப்பந்தமும், மாகாணசபை ஸ்தாபிப்பும்
* விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இந்தியத் தலையீடுகள்
* இந்திய – இலங்கை வர்த்தக ஒப்பந்தங்கள்
* தமிழக மீனவர்களின் எல்லை மீறல்
இலங்கை மீதான தென்னிந்திய படையெடுப்புகள் பற்றி சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சத்தில் ஏராளமான கதைகள் உள்ளன. சிங்கள மக்களுக்கு இந்திய எதிர்ப்புவாத மனநிலையை நிறுவியதில் மகாவம்ச ஐதீக மரபுக்கு பெரும் பங்குண்டு.
அதேவேளை இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சியில் இந்திய பாரம்பரியங்களின் பங்கு (குறிப்பாக தென்னிந்திய வகிபாகம்) மறுக்க இயலாது. ஏறத்தாழ மொழி, கலாசாரம், உணவு- உடைப் பண்பாடு, மதப் பாரம்பரியம், கலைகள் அனைத்திலும் இந்தியாவின் வகிபாகமின்றி இலங்கை வளர்ந்ததில்லை.
ஏன் சிங்கள இனத்தின் தோற்றமே இந்தியாவில் இருந்து வந்த விஜயன் மற்றும் அவனின் தோழர்களின் வழித்தோன்றல்களில் இருந்து உயிர்த்தது தான் என்பதை மகாவம்சமே விளக்குகிறது. பௌத்தம் அங்கிருந்து தான் வந்தது. சிங்கள மொழி உருவாக்கத்துக்கான அடிப்படை அங்கிருந்தே கிடைக்கிறது. எந்த சிங்கள பௌத்தத்தனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறப்படுகிறதோ அந்த சிங்களமும் பௌத்தமும் இந்திய இறக்குமதியே என்பதை எவரால் மறுக்க முடியும்?
ஜேவிபியின் இந்திய எதிர்ப்பின் பின்புலம்
இலங்கையின் வரலாற்றில் இந்தியாவை அதிகமாக எதிர்த்ததும், வெறுத்துமான சக்தியாக ஜேவிபியை துணிந்து குறிப்பிடலாம். “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்கிற கருத்தாக்கத்தை ஜேவிபி தோற்றுவித்தது. 1968 ஆம் ஆண்டாகும். அதன்படி இந்திய எதிர்ப்பு இலங்கையின் அரசியலில் நேரடியாக தாக்கம் செலுத்தப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது.
“அகண்ட பாரத” கோட்பாட்டிலிருந்து இந்தியா வெளியே வந்து விட்டதா என்றால்; இல்லை என்று கூறத் தயங்கத் தேவையில்லை. ஆனால் இந்திய காலனித்துவ அதிகாரத்தை நிறுவுவதாயின் அதனை நேரடியாக கைப்பற்றி மேற்கொள்ளவேண்டும் என்பதில்லை. புதிய உலக ஒழுங்கில் ஆக்கிரமிப்பானது ஆயுதங்களைக் கொண்டு நிறுவது அல்ல. மாறாக பல்வேறு நுட்பமான வழிகள் இன்று வளர்ந்துவிட்டுள்ளன. நவகாலனித்துவ முறையியல் என்பது பொருளாதார, கலாசார, தகவல் தொழில்நுட்ப, செயற்கை நுண்ணறிவுப் பொறிமுறைகளால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
முதலாளித்துவம், எகாதிபத்தியம் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் பட்டை தீட்டப்பட்டு மறுவடிவம் பெற்றுள்ளன. மறு கோட்பாட்டக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவை ஏகாதிபத்தியத்தின் தலைமையாக கருதிவந்த போக்கானது; இன்று அவ்வப்போதைய நலன்கள் சார்ந்து அடிக்கடி மாறி மாறி உருவாகிற அதிகாரத்துவ முகாம்களாக பரிமாற்றம் கண்டிருக்கிறது. அவ்வாறான ஆக்கிரமிப்பு கூட்டு நாடுகள்; அவ்வப்போது சேர்ந்தும், பிரிந்தும், புதிய கூட்டுகளை நிறுவிக் கொண்டும் பலவீனமான நாடுகளை சுரண்டும் உலகமே இன்று எஞ்சியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நிலையான – நிரந்தமான கூட்டுகள் எதுவும் இல்லை.
இந்தப் பார்வையில் இருந்தே இந்தியத் தலையீட்டின் பண்பையும் வடிவத்தையும், அளவையும் கணிப்பிட முடியும்.
1965 இல் ஆரம்பிக்கப்பட்டஜேவிபி 1968 ஆம் ஆண்டளவில் தமது உறுப்பினர்களை கோட்பாட்டு ரீதியில் வளர்த்தெடுப்பதற்காக ஜே.வி.பி நடாத்திய பிரபலமான 5 வகுப்புகளில் முறையே “பொருளாதார நெருக்கடி”, “சுதந்திரம்”, “இந்திய விஸ்தரிப்புவாதம்”. “இடதுசாரி இயக்கம்”. “இலங்கையில் புரட்சிக்கான பாதை” என்பன அடங்கும்.
இந்திய முதலாளித்துவ வர்க்கம் இந்திய சந்தையை விரிவுபடுத்தி வந்தது. எனவே இந்தியா தனது அரசியல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை நமது நாட்டின் மீதும் சுமத்தி வருவதற்கு எதிராகவே வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
இந்தியாவின் அரசியல் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை தனது நான்காம் படையைப் போல பாவித்து வருகிறது என்கிற கருத்து மேற்படி கருத்தாக்கத்தின் அங்கம் தான்.
1970 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் “தேசபக்த மக்களுக்கான அறைகூவல்” என்கிற துண்டு பிரசுரத்திலும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் சுதேசிய அடிவருடிகள் ஐக்கிய தேசியக் கட்சியே என்று குறிப்பிட்டது.
71 கிளர்ச்சி பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் முன் விஜேவீர சாட்சியமிளித்த போது எஸ். நடேசன் இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி ஜே.வி.பி கொண்டிருந்த கருத்துக்களை உறுதி செய்ய பல கேள்விகளை கேட்கிறார். ஓயாமல் அதற்கு பதிலளித்த விஜேவீர.
ஒரு இடத்தில் “இந்திய முதலாளித்துவ வர்த்தகத்தின் நலன்களுக்கு இந்திய வம்சாவளியினர் சாதகமாக இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார். மேலும்
“தொழிலாள வர்க்கம் ஒரு தொழிலாள வர்க்கமாக ஒழுங்கமைக்கப்படாமல் போனால் தோட்டப்புற மக்கள் ஒரு புரட்சிகர சக்தியாக புரட்சிக்கு சேவை செய்யப்போவதில்லை. மாறாக முதலாளித்துவ வர்க்கம் அவர்களை எதிர்ப்புரட்சிக்குப் பயன்படுத்தும். நகர்ப்புறங்களிலும், சிங்கள பிரதேசங்களிலும், தமிழ் பிரதேசங்களிலும் இது தான் நிலைமை.” என்கிறார்.
71 கிளர்ச்சியை அடக்கிய இந்தியா
உலக ஏகாதிபத்தியங்கள் தமக்கு தேவைப்பட்டால் தனி நாடொன்றை பிரித்து கூறுபோடவும் முடியும், தேவைப்பட்டால் பிளவுபட்ட நாடுகளை இணைத்துவிடவும் முடியும் என்பதற்கு உலகில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
பங்களாதேஷ், நேபாள், பூட்டான், பாகிஸ்தான் போன்ற தனது நேரடி எல்லை நாடுகளிலும் இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட்டு மாற்றிய ஆட்சி மாற்றங்களை நாம் அறிவோம். 1988 இல் மாலைதீவைக் கைப்பற்றுவதற்காக புளொட் இயக்கம் மேற்கொண்ட சதியை இராணுவ உதவி அனுப்பி அதை முறியடித்ததையும் அறிவோம். அதுபோலவே 1971 ஜேவிபியால் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முடியடிக்க இந்தியா சகல உதவிகளையும் செய்தது.
அக்கிளர்ச்சியின் போது சிறிமா அரசாங்கம் வெருண்டு போயிருந்தது. உலக நாடுகளில் இருந்தெல்லாம் உதவி கோரியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அக்கிளர்ச்சியை நசுக்கியது.
71 ஏப்ரல் கிளர்ச்சி குறித்து வெளிவந்த பல நூல்களில் மிக முக்கியமான நூல் ஜேவிபியினரின் நியமுவா வெளியீடாக 931 பக்கங்களில் வெளிவந்த “71 ஏப்ரல் விசாரணை” என்கிற நூல். அதில் பல உத்தியோகபூர்வ அரச ஆவணங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படை தளபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிக்கையும் உள்ளடங்கும். அதில் “சமர் நடந்த இடங்களில் இருந்து காயப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக இந்தியாவிடமிருந்தும், பாகிஸ்தானிடமிருந்தும் உதவி கோரினோம். அக்கோரிக்கையை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் 8 ஹெலிகொப்டர்களையும் 25 விமான ஓட்டிகளையும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் எமக்கு வழங்கின. அவற்றைக் கொண்டு விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கட்டுநாயக்க விமானத் தளத்தில் இவை தரித்திருந்தன.
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேலும் 150 பேர் கட்டுநாயக்க விமானத் தளத்தில் தரித்திருந்து இயங்கினார்கள்….”
80களில் இருந்து
1986 ஆம் ஆண்டு விஜேவீர எழுதிய “இனப்பிரச்சினைக்கோர் தீர்வு” நூலில் கூறப்பட்ட மூலோபாய சூத்திரத்துக்குள் அடக்கக்கூடியதல்ல தற்போதைய ஜேவிபியின் இந்தியா தொடர்பான மறு அவதார அணுகுமுறை.
ஆரம்பத்தில் இந்தியா என்பது ஒரு அரசியல், பண்பாட்டு, பொருளாதார ஆக்கிரமிப்பு நாடாக சித்திரித்து வந்த போதும்; மேற்படி நூலிலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா பாதுக்காக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருப்பது புலப்படுகிறது. இலங்கையை பிரித்து ஈழ நாட்டை உருவாக்கி அதை தமிழ் நாட்டுடன் காலப்போக்கில் இணைத்து; பின்னர் அண்டைய திராவிட மாநிலங்களையும் இணைத்துகொண்டு ஈற்றில் “திராவிடஸ்தான்” என்கிற நாட்டை உருவாக்குவதே தி.மு.க ஆட்சியின் அடிப்படைத் திட்டமென்றும். இந்தியாவைத் துண்டாட முயற்சிக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சதியில் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து செயலாற்றுவது இரகசியமல்ல என்றும் குறிப்பிடுகிறார். (ப. 173,174)
இந்த நூலை விஜேவீர எழுதி ஓராண்டில் இந்திய விமானப்படை அத்துமீறி யாழ். குடாநாட்டுப் பகுதிகளில் உணவுப் பொதிகளை விமானங்களின் மூலம் போட்டமை, இந்திய மாத்திய அரசின் மிரட்டல்கள், இலங்கை இந்திய ஒப்பந்தம், 13ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை, அப்படையின் அடாவடித்தனங்கள் எல்லாமே இந்தியா பற்றிய கண்ணோட்டத்தை மீண்டும் மாற்றியது. இந்திய ஆக்கிரமிப்பின் வடிவமே இந்தியாவின் போக்கு என்கிற முடிவுக்கு வரவேண்டி இருந்தது.
மாகாண சபையை ஜேவிபி எதிர்த்தது இரு அடிப்படை காரணங்களால். ஒன்று அது நாட்டை பிரதேசங்களாக துண்டாடி பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால். அடுத்தது இந்தியாவின் அரசியல் தலையீட்டை இலகுவாக்குவதற்கு ஏதுவாக “வடக்கு – கிழக்கு தமிழர் சுயாட்சி” ஆகிவிடும் என்பதால்.
திருகோணமலை துறைமுகத்தின் மீதான அமெரிக்க ஆர்வத்துக்கு ஜே.ஆர் அரசாங்கம் கொடுத்த பச்சை சமிக்ஞையானது இந்தியா உடனடியாக களமிறங்கத் தூண்டியதன் காரணி என்பதை விஜேவீர அறிவார். அதேவேளை அமெரிக்காவை ஒருபோதும் இலங்கைக்குள் அனுமதிப்பதை விஜேவீர விரும்பாதபோதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் திருமலை துறைமுகத்தின் மீது இந்தியா தனது செல்வாக்கை ஏற்படுத்தியதையும் எதிர்த்தார். இலங்கையின் இறையாண்மையின் மீதான அச்சுறுத்தலென்றும் பிரசாரம் செய்தார்.
87–89 காலப்பகுதியில் இந்திய எதிர்ப்பு வாதம் தலைதூக்கிய போது ஏறத்தாழ பெருவாரி சிங்கள சக்திகள் இந்தியாவை எதிர்த்து ஒன்றிணைந்தார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், பல்வேறு சிங்கள அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்தது மட்டுமன்றி அதற்குத் தலைமை தாங்கியது ஜேவிபி யின் முன்னணி அமைப்புகளின் ஒன்றான தேச மீட்பு முன்னணி.
எப்போதும் இந்திய அரசுடன் நட்பைப் பேணி வந்த சிறிமா பண்டாரநாயக்கவும் இந்திய எதிர்ப்பில் முக்கிய பாத்திரம் வகித்தார். இந்தக் கூட்டணி சற்று பலமாக இருந்ததன் காரணம் அக்கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கிற பொதுக் கூட்டணியாகும். பத்தாண்டுகளாக ஜே ஆரின் அராஜக அரசாங்கத்தை எதிர்க்க வழி தேடிக்கொண்டிருந்த அச்சக்திகளுக்கு இந்தியாவின் அணுகுமுறையை இந்தியாவின் சண்டித்தனமாகவே கருதியது. இலங்கையின் இறையாண்மையை ஜே.ஆர் இந்தியாவுக்கு பலியாக்கிவிட்டார் என்றே குற்றம் சுமத்தியது.
உள்ளூர் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கட்சிக்குள்ளிருந்தும் இந்திய எதிர்ப்புவாதம் தலை தூக்கியது. பிரதமர் பிரேமதாச, அமைச்சரவையில் இருந்த காமினி திசாநாயக்க, லிலித் அத்துலத் முதலி உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் இந்திய எதிர்ப்புவாத அலையில் ஒன்றுபட்டனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் பிரேமதாச கலந்துகொள்வதை தவிர்த்தார். அந்த அலையின் ஒரு வடிவமாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது ரோஹித்த விஜித முனி என்கிற கடற்படை சிப்பாய் ஒருவரால் திடீரெனத் தாக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை பிரேமதாச விடுவித்தார்.
இவ்வாறான இந்திய எதிர்ப்புவாதத்துக்கு அப்போது தலைமை தாங்கிய சக்தியாக ஜேவிபி இருந்தது.
அப்பேற்பட்ட ஜேவிபி யின் மக்கள் செல்வாக்கையோ, அரசியல் வளர்ச்சியையோ இன்றைய இந்தியா சாதகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. அரசாங்கத்துக்கும் – விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையின் போதும் இந்தியாவை பிரிவினைவாதத்துக்கு சாதகமான சக்தியாகவே ஜேவிபி பிரசாரம் செய்தது.
இருதரப்பு தந்திரோபாய விட்டுக் கொடுப்புகள்
எதிர்ப்பரசியலை எங்கே செய்ய வேண்டும், சமரச அரசியலை எங்கே எப்போது, எந்த அளவுக்கு செய்ய வேண்டும் என்பதையும் NPP சரியாகவே அறிந்து வைத்திருக்கிறது. அதுவே இன்றைய தேவையும்.
மூலாபாயம் தந்திரோபாயம் பற்றிய மாக்சிய தத்துவார்த்த வழிகாட்டலை பிரயோகிப்பது எப்படி என்பதைப் பற்றி ஜேவிபி புதிதாக பாடம் கற்க வேண்டியதில்லை.
தென்னாசியாவில் இந்தியா சண்டியர் தான். அதன் புவிசார் அரசியல் அணுகுமுறை என்பது தற்காப்பு இராஜதந்திர அணுகுமுறையோடு நின்றுவிடவில்லை.
இந்தியாவுக்கென்று அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆக்கிரமிப்பு குணம் இருக்கவே செய்கிறது. அது அரசாங்கங்களின் கொள்கையல்ல. இந்திய அரசின் நிலையான அணுகுமுறையே. இந்தியாவின் அனுசரணையின்றி அயல் நாடுகளில் எந்த ஆட்சியையும் நிறுவப்பட்டுவிடக் கூடாது என்பதில் நெடுங்கால பிரயத்தனம் செய்து வரும் நாடு அது.
அதேவேளை இந்தியாவின் ‘அகண்ட பாரத’ முனைப்பிலிருந்து இந்தியா பின்வாங்கி விட்டது என்கிறார் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடுகையில் பிஜேபி ஆட்சியில் அப்படிப்பட்ட நெகிழ்ச்சி இருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. அகண்ட பாரத கருத்தாக்கத்துடன் இந்துத்துவ முலாமையும் பூசிக்கொண்டு ‘இந்துத்துவ ராமராஜ்ஜிய விஸ்தரிப்பு’க் கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது தற்போதைய பிஜேபி என்பதை நாமறிவோம். அந்த வகையில் இந்தியா என்பது தென்னாசிய பிராந்தியத்தில் நவகாலனித்தை பிரயோகிக்கும் நாடு என்பது பரகசியம்
ஆனால் அளவு ரீதியில் அதற்கான முனைப்பு அத்தனை வீரியத்துடன் இல்லை என்பது ஒரு தற்காலிக ஆறுதல் எனலாம்.
எவ்வாறாயினும் “நாடுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல்” கோட்பாட்டின் பிரகாரம் அந்தந்த நாடுகள் தமக்கான பேரம்பேசும் ஆற்றலை வளர்த்து வைத்துக்கொள்வதும், பேணுவதும் அடிப்படியான தகுதிகளே. அந்தவகையில் இலங்கை என்கிற குட்டித்தீவின் பேரம் பேசும் ஆற்றலில் முதன்மையாக அதன் அமைவிடம் தகுதி பெறுகிறது.
சுதந்திரத்துக்குப் பின்னர் பிரதானமாக அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் தலையீடுகளும், ராஜதந்திர ஈடுபாடுகளும் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். மற்ற காரணிகள் எல்லாம் அதற்கடுத்ததே.
இன்றைய இந்திய எதிர்ப்பாளர்கள்
இந்திய எதிர்ப்பை இன்றும் பேணி வரும் தரப்பு சிங்களப் பேரினவாதத் தரப்பே. ஆனால் புதிய அரசியல் நிலைமைகளின் கீழ் பலர் சற்று அடங்கி இருக்கிறார்கள். ஆனால் சிங்கள பௌத்தர்களை தூண்டக் கூடிய நிகழ்வுகளுக்காக தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் தரப்பு அது. குறிப்பாக மாகாண சபை முறைமையை கலைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சக்திகளும் இதில் அடங்கும்.
இந்தியாவின் இராஜதந்திர வலைக்குள் NPP அரசாங்கம் சிக்கிவிட்டது என்கிற விமர்சனத்தையே அவர்கள் முன் வைக்கின்றனர்.
இந்தியாவுடனான NPP யின் ‘நட்பு கொள்ளும் அணுகுமுறை’ நடைமுறை அரசியலில் தவிர்க்க முடியாதது. எதில் பிடிவாதமாக இருக்கவேண்டும், எதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது நீண்டகால தேவைகளை மாத்திரம் கொண்டிருக்காது மாறாக சமகால நடைமுறை தேவைகளும் தான் வகிபாகம் செலுத்தும். தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிற ஒப்பந்தங்களில் ஜேவிபி எதிர்த்து வந்த எட்கா ஒப்பந்தமும் கூட அந்த 34 ஒப்பந்தங்களில் அடங்கும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நிர்பந்திப்பது என்பது இந்தியாவின் மானப் பிரச்சினையாகவும் தொடர்கிறது. அதற்காக இந்தியா தனது பிரதமர் ஒருவரை காவு கொடுத்திருக்கிறது.
இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோரை இழந்திருக்கிறது. ராஜீவ் காந்தி இலங்கையில் தாக்கப்பட்டதை இலங்கைப் பெரும்பான்மை இனத்தவர்கள் பெருமிதமாகக் கருதி வருகிறார்கள். இத்தனைக்கும் பிறகும் மாகாண சபை தோல்வியுற்ற தீர்வாக தொடர்கிறது. இந்நிலையிலேயே பிரதமர் மோடியின் பேச்சில் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி அழுத்தங்களையும் கவனிக்கலாம்.
ஜேவிபி யைப் போல NPPயானது இடதுசாரித் தனத்தில் தீவிரம் பேணும் இயக்கமல்ல. மாறாக சற்று தாராளவாத சக்திகளையும் இணைத்து கொள்கை நெகிழ்ச்சிப் போக்கைக் கொண்ட, இலங்கையின் இறைமையில் உறுதிகொண்ட இலங்கைக்கான புதிய ஒழுங்கை வேண்டி நிற்கிற இயக்கமே NPP. அந்த வகையில் NPP என்பது ஜேவிபியின் கொள்கைகளில் இருந்து ஓரளவு விட்டுக்கொடுப்பையும் சமரசத்தையும் செய்து கொண்ட வடிவம் என்றால் அது மிகையில்லை.
இந்த விட்டுக்கொடுப்புகள் ஜேவிபியின் மூலோபாய – தந்திரோபாய அணுகுமுறையின்பாற் பட்டது என்று கூறமுடியும். அதே வேளை NPPயில் இருந்து கற்றுக்கொள்கிற நடைமுறைப் பாடங்கள் எதிர்கால ஜேவிபியின் மூலோபாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
மூலோபாய – தந்திரோபாய மாற்றம்?
இந்தியா மீது ஜேவிபிக்கு இருந்த பார்வை மாறியிருப்பது போல நிச்சயமாக ஜேவிபிக்கு இந்தியா மீதிருந்த பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. இலங்கையின் இன்றைய தேவை ஒருபுறம், இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பில் இலங்கையின் அமைவிடம் முக்கியமானது.
தென்னாசிய நாடுகளுக்கு வெளியில் உள்ள நாடுகள் இலங்கையை கையாளக்கூடிய சாத்தியங்கள்; இலங்கையின் தேவைகளில் இருந்தே வழிதிறக்க இயலும்.அப்படியாயின் இலங்கையின் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையானது இந்திய உபகண்டத்தின் இருப்பில் தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒன்று. அதன் நீட்சியாகவே ஒருவகையில் இலங்கைக்கு ஒரு பெரிய அண்ணனாக தன்னை பேணிக்கொள்வதிலும், அதனை அனைவருக்கும் நினைவுறுத்துவதிலும் இந்தியா தீவிர வகிபாகத்தை செய்தாக வேண்டும்.
இதுவரை இலங்கையில் புதிதாக எவர் ஆட்சியேறினாலும் அவர்களின் முதல் ராஜதந்திர விஜயம் இந்தியாவுக்கானதாக அமைந்திருக்கிறது.
அரச தலைவரின் முதல் விஜயம் இந்தியாவுக்கானதாக இருக்க வேண்டும் என்பதை ஒரு மரபாகவே பேணி வருகிறது. அது ஒரு புதிய அரச தலைவரை கௌரவிக்கும் நிகழ்வாக மாத்திரமன்றி, இந்தியாவின் ஆசீர்வாத சடங்காகவும், நல்லெண்ண சமிக்ஞைக்கான உடன்பாடுகளையும் கூடவே செய்துகொண்டு வழியனுப்பி வைப்பதையும் வழமையாகக் கொண்டுள்ளது.
மூலோபாயம் இல்லாத தந்திரோபாயம் என்பது காலப்போக்கில் தந்திரோபாயத்தையே மூலோபாயமாக மாற்றி விடும் ஆபத்தை உருவாக்கிவிடும். அதுவே ஈற்றில் சந்தர்ப்பவாத தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் ஆபத்து உண்டு.
என். சரவணன்