இந்திய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்ற போது மக்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு தடவை சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசியிருந்தார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா கூட்டணி’ கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட ‘இந்தியா கூட்டணி’ கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த புதனன்று போராட்டம் நடத்தினர். அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இதையடுத்து, அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றும், எதிர்க்கட்சியினர் அமித்ஷா கூறியதை பொய்யாக திரித்துக் கூறுகின்றனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த அமைச்சர் அமித்ஷா, “நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து திரித்து சிலர் குறை சொல்கிறார்கள். அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர்தான். அம்பேத்கரை பற்றி நேரு குறை கூறி இருக்கிறார். காங்கிரஸ்தான் இரண்டு முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. ஆனால் அம்பேத்கரின் வரலாற்றுப் புகழை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சென்றது பா.ஜ.க அரசுதான். அம்பேத்கர் குறித்து எனது முழுப் பேச்சையும் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அவரை பதவி நீக்க வேண்டும் எனவும் கைகளில் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் வியாழனன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் ஒருபுறம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அதேவேளையில், அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆளும் தரப்பினருக்கும், எதிரணியினருக்கும் இடையில் அமளிதுமளி ஏற்பட்டதில் பா.ஜ.க எம்.பி ஒருவர் காயமடைந்தார். நாடாளுமன்ற வளாகத்தினுள் ராகுல் காந்தி கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதாக ஆளும் தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியிருப்பது எரியும் பிரச்சினையாகியுள்ளது. அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாட்டிலும் தி.மு.க போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வியாழனன்று முடக்கி வைத்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி ‘இந்தியா கூட்டணி’ எம்பிக்கள் பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நீல நிற உடை அணிந்து பங்கேற்றனர். மேலும் இந்தியா கூட்டணியைக் கண்டித்து பா.ஜ.க எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கரை பின்பற்றுகிறவர்கள் நீலநிறக் கொடி, உடை அணிவது வழக்கம். இதனைக் குறிப்பிடும் வகையில் நீலநிற உடையை ராகுலும் பிரியங்கா காந்தியும் அணிந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கூடிய போதும் இரு சபைகளிலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள், அமித்ஷா இராஜினாமா செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
“எனது பேச்சுக்கு இராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். அவருக்கு அதுதான் நிம்மதியளிக்கும் எனில், இராஜினாமா செய்ய தயார். ஆனாலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருப்பார்” என்று அமித்ஷா பதிலளித்துள்ளார்.
எனினும் அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத எதிர்க்கட்சிகள், அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க போராட்டத்தை அறிவித்திருக்கிறது. கடந்த வியாழனன்று காலை போராட்டத்தை தி.மு.க தொடங்கியுள்ளது.
மறுபுறம் வி.சி.க பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வி.சி.கவின் 100 பேர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநில கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.சாரங்கன்