Home » காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி ஏன்?

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி ஏன்?

by Damith Pushpika
December 15, 2024 6:57 am 0 comment

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு நான் தலைமையேற்கிறேன் என்று இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தலைமையேற்க வேண்டும் என்று அக்கூட்டணியில் உள்ள பல கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மம்தாவின் தலைமைக்கு தேசியவாத காங்கிரஸ் (பவார்). தலைவர் சரத்பவார் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தும் மம்தா தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். லாலுவின் மகன் தேஸ்வியும் மம்தாவை கூட்டணி தலைவராக ஏற்பதில் தங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அணியில் முன்னிலைவகிக்கும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு இது பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. பா.ஜ.க கூட்டணி, இந்தியா கூட்டணி இரண்டிலும் இடம்பெறாத ஒய்எஸ் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்கவை உறுப்பினர் விஜய சாய் ரெட்டி இது பற்றி கருத்து கூறும்போது, மம்தா தகுதியும், திறமையும் வாய்ந்த தலைவர். நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தை பல ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறார். அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு வளர்ந்தவர், அவரால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் அணியை திறம்பட வழிநடத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலில் எதிர்க்கட்சியாக செயல்படும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமை மீது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட காரணம் என்ன? காங்கிரஸ் அரசியலை ஆழமாக புரிந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் ரஷித் கித்வாய் இது பற்றி கூறும்போது, மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் பலமாக இருந்ததாலும் சிறப்பாக செயல்பட்டதாலும் எதிர்க்கட்சிகளின் மன உறுதியும் அதிகமாக இருந்தது. அதிக இடங்களில் வெற்றியும் பெற்றனர். இதே போல சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க.வை தோற்கடித்து விடுவோம் என உறுதியாக நம்பினர். ஆனால். ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததால் இது இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தியதாக கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

காங்கிரஸ் கட்சியால் மாநில தேர்தல்களில் முன்னேற முடியவில்லை. இது எதிர்க்கட்சிகளிடையே தொடர் எரிச்சலை ஏற்படுத்தியதால் இந்தியா கூட்டணியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், இந்தியா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பும் கட்சிகளின் செல்வாக்கு ஓரிரு மாநிலங்களுக்கு மேல் இல்லை என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. இந்தியா கூட்டணியை காங்கிரஸ் நடத்தும் விதம் குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

கூட்டணிக்கு என்று ஒரு செயலகம் இருக்க வேண்டும், ஒருங்கிணைப்பாளரும். செய்தித் தொடர்பாளரும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியா கூட்டணியில் இவை எதுவும் இல்லை. எனவே இந்தக் கூட்டணியை காங்கிரசால் வழிநடத்த முடியாது.

தலைமையை மாற்றுவதுதான் சரியான தீர்வு என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன, அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், என்சிபி (ஷரத்) பவார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகியோருக்கு குறைந்த செல்வாக்கே இருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. அவர்கள் பா.ஜ.கவுக்கு போக முடியாது வேறு எங்கே போவார்கள். அதனால்தான் காங்கிரஸ் தன்னிச்சையாக செயல்படுகிறது என்று ரஷித் கிதாவ் தெரிவிக்கிறார்.

மார்ச்சார்பின்மை போன்ற முக்கிய மான பிரச்சினைகளில் காங்கிரஸ் அணுகுமுறை அதன் கூட்டணி கட்சிகளிடையே கோபத்தை ஏற்படுத்துவதாகவும், அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்துத்வா விவகாரத்தில் காங்கிரசின் நிலைபாடு என்ன என்பதை இன்னும் தெளிவாக முடிவு செய்ய முடியவில்லை. காங்கிரஸ் கடினமான இந்துத்துவா அல்லது. மென்மையான இந்துத்துவா அல்லது மதச்சார்பின்மைக்கு ஆதரவாக உள்ளதா என்பதயும் முடிவு செய்ய முடியவில்லை.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தன்னிச்சையாக நடந்து கொள்வது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியின் அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ் மட்டுமே எடுக்கிறது. மற்றைய எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிப்பது இல்லை. பாராளுமன்றத்தில் கூட சக கட்சிகளுடன் காங்கிரஸ் ஒன்றிணைந்து போவது இல்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. ராகுல் காந்தியை தலைவராகவும் நரேந்திர மோடிக்கு மாற்றாகவும் நிலைநிறுத்த வேண்டும் என்பதில் சோனியா காந்தி குறியாய் இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி இருக்கிறது.

காங்கிரஸ் இது பற்றி எல்லாம் துளியும் கவலைப்படவில்லை. மம்தாவின் தலைமைப் பொறுப்பு அறிவிப்பு ஒரு நகைச்சுவை என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கருத்துரைத்துள்ளார். மேலும் மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களில் திரிணமூல் நிலை என்ன? என்று ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளார். கோவா, திரிபுரா, மேகலயா, நாகாலாந்து, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் தனது செல்வாக்கை பரப்ப முயன்றது. ஆனால், அது வெற்றியடையவில்லை. இது ஏன் என்று திரிணமூல் முதலில் பதிலளிக்க வேண்டும். பிறகு தலைமை பற்றி பேசலாம் என்று மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது பற்றியும் எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினார்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உள்ளது.

எனவே பிரச்சினைகளை கையாளும் திறன் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. எனவே கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளிடையே ஒத்தகருத்து இல்லை என்றால் மக்களின் குரலாக மக்களவையில் எவ்வாறு குரல் எழுப்ப முடியும், எதிர்க்கட்சிகளிடையே உள்ள பலவீனமே பா.ஜ.க தலைமையிலான கூட்டணி தொடர்ந்து பலத்துடன் வெற்றி பெறுகிறது. என்பதிலும் எதிர்க்கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும்.

தோல்விக்கான காரணத்தைத் தேடாமல் தலைமையை மாற்றுவது என்பது தேவையற்ற வேலை. தேசிய அளவில் அரசியலை வழிநடத்த தேசிய கட்சியின் தலைமைதான் சரியாக இருக்கும். ஒரு மாநிலக்கட்சியின் தலைமை என்றால் எல்லா மாநிலக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமா? என்பதையும் அவதானிக்க வேண்டும்.

முரண்பாடுகளை நீக்கிவிட்டு ஒத்தகருத்துடன் எதிரிக்கட்சிகள் பயணிப்பதே மக்களுக்கான நன்மையும் உள்ளடங்கியுள்ளது. இன்னும் தேர்தல்களை சந்திக்க வேண்டிய காலம் இருக்கிறது.

இந்தியா கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணியாக மட்டுமே இல்லாமல், மக்கள் நலனுக்கான கூட்டணியாகவும் ஒன்றிணைந்து செயல்பட வேணடும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division