நமது காலத்திலேயே வாழ்ந்து மறைந்த சிவபாக்கியம் குமாரவேல் அம்மையார் (1923 — 2019) தனது 25ஆவது வயதில் எழுதி, சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்க அருட்பெரும் ஜோதி அச்சகத்தில் 1948இல் வெளியிட்ட ‘இதய தீபம்’ என்னும் ஆன்மிக நூலையும், தனது 19ஆவது வயதில் அவர் கேட்டு எழுதிய ‘லெச்சுமி தந்த வாய்மொழி இலக்கியம்’ என்ற நாட்டார் பாடலையும் அவர் மறைந்து (05.01.2019) 5 ஆண்டுகளுக்குப் பின்னர், கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையின் வெளியீடாக வெளியிடுவதில் நிறைவு காண்கிறோம்.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மலையக மாந்தரின் விடுதலைக்காக, குரல் கொடுத்த சிவபாக்கியம் குமாரவேல் அம்மையாரை 1960களின் பிற்பகுதியிலிருந்தே நான் நன்கு அறிவேன். தொடர்ந்து அவரது முதுமைக் காலத்திலும், நான் கொழும்பிலிருந்து மாத்தளைக்குச் செல்லும்போதெல்லாம் அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மலையகப் பெண்கள் வரலாற்றில் தனித் துவம் பெற்ற அம்மையார், தொழிற்சங்கப் பணிகளுக்காக மாத்தளைக்குப் பல தடவை வந்திருக்கிறார். இலங்கை இந்திய காங்கிரஸின் தலைவர்களான வி.ஆர்.எம். லட்சுமணன் செட்டியார், பெரி சுந்தரம், ஏ. அசீஸ், ஜோர்ஜ் ஆர். மோத்தா, கே. ராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டவர். 1955-இல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு இவரது மனதைப் பெரிதும் பாதித்திருந்தது. எனினும் அதிலிருந்து பிரிந்து செல்ல அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. தொடர்ந்தும் அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் பணியாற்ற, கோகிலம் சுப்பையா, பி.பி. தேவராஜ், சி.வி. வேலுப்பிள்ளை ஆகியோர் ஏ. அசீஸ் தலைமையிலான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் தொடர்ந்து செயல்பட ஆரம்பித்தனர்.
1939ஆம் ஆண்டு, இலங்கை இந்திய காங்கிரஸ், ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டபோது 16 வயது மாணவியாக இணைந்து செயல்பட ஆரம்பித்த சிவபாக்கியம், தொழிற்சங்கவாதியான என். எம். பழனிச்சாமி, பூமாலை சிவகாமி என்பவரின் புதல்வியாவார். இலங்கைத் தொழிற்சங்கப் பணியில் தீவிரமாக உழைத்துவந்த அவர் இறைபணியிலும் பக்திநெறியிலும் தன் வாழ்நாளைக் கழித்து வந்தார்.
சீரடி சாய்பாபாவின் மீது தீவிரப் பற்றுக்கொண்ட இவர், கண்டி ஹந்தானையில் சீரடி சாய்பாபா கோயிலை நிர்மாணிக்க மிகுந்த அக்கறையோடு செயற்பட ஆரம்பித்தார்.
சீரடி சாய்பாபா ஆலயத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், கொழும்பு புதுச் செட்டியார் தெருவிலுள்ள சாய் மத்திய நிலையத் தலைவர் எஸ்.டி. சிவநாயகத்தைச் சந்திக்க வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களோடு தங்கியிருப்பார்.
சிவநாயகம் ஐயாவின் மறைவைத் தொடர்ந்து அவரது புதல்வரான சாய் எஸ். உதயநாயகத்தை அழைத்துவந்து கண்டியில் நிர்மாணிக்கவிருக்கும் சாய்பாபா ஆலயத்தின் பூமிபூஜையைத் தொடங்கினார்.
30.6.2017 அன்று இவரது இளைய சகோதரியான திருமதி முத்துவேலின் மகள் சத்தியாவின் திருமணத்திற்காக இரண்டு நாட்கள் முன்பதாகவே கொழும்பிலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்து, தனது ‘இதய தீபம்’ புத்தகத்தின் மூலப் பிரதியையும், ‘லெச்சுமி தந்த வாய்மொழி இலக்கியம்’ என்ற நூலின் கையெழுத்துப் பிரதியையும், துரைசாமி ஐயா எழுதிய ‘சோமசுந்தரம்’ என்ற புத்தகத்தையும் கொடுத்து, ‘மகனே! இந்த மூன்று புத்தகங்களையும் நீ பிரசுரித்துத் தர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்திருக்கவேண்டிய இந்நூல்கள் இப்போதுதான் பிரசுரம் பெறுகின்றன. சிவபாக்கியம் குமாரவேல் அம்மையார் இந்த நூலுக்கான முன்னுரையையும் எழுதித் தந்திருந்தார். பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களிடமிருந்தும் இந்த நூலுக்கான முன்னுரையைப் பெற்றிருந்தேன். இருவரும் அமரர்களான நிலையில் இந்நூல் வெளியாகிறது.
காலம் கடந்தாயினும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சிவபாக்கியம் குமாரவேல் அம்மையாரின் இந்நூலினைத் தமிழ்கூறும் நல்லுலகின் முன் வைப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். கேட்ட உடனேயே இந்த நூலுக்கான மதிப்புரையினை உவந்தேற்று எழுதித்தந்த பேராசிரியர் சி.பத்மநாதன் ஐயாவுக்கு நன்றி சொல்வது என் கடமையாகும்.
சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ நாவலை நாங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து, மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ?’, மலரன்பனின் ‘கொலுஷா’, தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’, பதுளை வ. ஞானபண்டிதனின் ‘கதிர்காமத் திருமுருகன்’ ஆகிய நூல்களை வெளியிட்டபோது மலையக எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் வழங்கிய நல்லாதரவினை நாங்கள் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பேரனும், டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான முனைவர் குமார் ராஜேந்திரனின் ‘தாய்’ பதிப்பகம் மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ?’ என்ற நூலுக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கி கௌரவித்தது.
இதனைத் தொடர்ந்து இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனம் வவுனியாவில் ‘உதயணன் இலக்கிய விருது’ வழங்கியது.
மேலும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், 2022ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் இது முதல் தரமான தொகுதி என்று மற்றுமொரு விருது வழங்கிக் கௌரவித்தது.
உலகச் சிறுகதைகளின் சிங்கள மூலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மாத்தளை மலரன்பனின் ‘கொலுஷா’ என்ற கதைத்தொகுப்பு பெரும் வரவேற்பினைப் பெற்றது மட்டுமல்லாமல், ‘தாய்’ சஞ்சிகையின் ஒரு லட்சம் ரூபாய் விருதையும் பெற்றது.
மாத்தளையில் நிகழ்ந்த அந்நூல் வெளியீட்டு விழா, மாத்தளை மண்ணின் மூத்த எழுத் தாளனுக்குப் பெருங் கௌரவம் வழங்கும் வகையில், சிங்கள எழுத்தாளர்களான சாளிய குணவர்த்தன, காமினி குணவர்த்தன ஆகியோரின் பங்களிப்புடன் மிகச் சிறப்பாகவே நடைபெற்றது.
மறைந்த மலையகப் பெருங் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளையின் ‘எல்லைப்புறம்’ என்ற நாவல் ஆறு தசாப்தங்கள் கழிந்த நிலையில், தமிழக எழுத்தாளர் அகிலனின் முன்னுரையோடு 2024இல் கலைஒளி முத்தையாபிள்ளை அறக் கட்டளையின் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சுவிற்சலாந்தின் சூரிச் நகரில் நவம்பர் 28, 2023இல் நிகழ்ந்த 36ஆவது பெண்கள் சந்திப்பில் சகோதரி மீனாள் நித்தியானந்தன், சிவபாக்கியம் குமாரவேல் அம்மையாரைக் குறித்து ஆற்றிய உரை மலையகப் பெண் ஆளுமைகளை உலக அளவில் கொண்டுசெல்லும் பணியைச் செய்திருக்கிறது.
அமரர் தோழர். கன்பொல்லை மு. தவம்
சிவபாக்கியம் குமாரவேல் அம்மையாரின் இந்நூல் மலையக இலக்கிய வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கிறது.
நாங்கள் வெளியிட்ட ‘மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்’ என்ற நூல் வெளிவந்தது (2022) மலையக வரலாற்றின் ஆரம்பம் என்று கல்வியாளர் சு. முரளீதரன் குறிப்பிட்டதுபோல, சிவபாக்கியம் குமாரவேல் அம்மையாரின் இந்த நூல் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கிறது.
எச். எச். விக்கிரமசிங்க