தென்னாபிரிக்கா சென்ற இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சிய. அனுபவ டெஸ்ட் வீரர்கள், முன்கூட்டிய ஏற்பாடுகள், திட்டங்கள் எல்லாமே வீணானது. டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் ஏகப்பட்ட மோசமான சாதனைகளுடன் 233 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்ததோடு கெபர்ஹாவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் படுதோல்வியில் இருந்து சுதாகரித்தபோதும் அது 109 ஓட்டங்களால் ஓரளவுக்கு கௌரவமாக தோல்விக்கே உதவியது.
ஒட்டுமொத்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்போடு சென்ற இலங்கை, கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாக அந்த வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்த நிலையிலேயே நாடு திரும்பியது.
எங்கே குறை என்று அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரியவை பொறுத்தவரை துடுப்பாட்ட வீரர்கள் மீதே குறை கூறுகிறார்.
‘துடுப்பாட்ட வீரர்கள் தமது ஓட்டங்களை சதங்களாக மாற்றத் தவறினர். 30, 40 ஓட்டங்கள் போதுமானதாக இல்லை. தென்னாபிரிக்க ஆடுகளங்களில் ஆடுவது கடினமானது என்றபோதும் இதுபோன்ற சுற்றுப்பயணங்களில் குறைந்தது இரு வீரர்களாவது நூறு ஓட்டங்களை பெற்றிருக்க வேண்டும். நாம் அதனைச் செய்யவில்லை’ என்கிறார் சனத் ஜயசூரிய.
இதனை சனத் ஜயசூரிய பிரத்தியேகமாக சொல்லத் தேவையில்லை, போட்டியை பார்த்த அனைவருக்கும் சாதாரணமாகவே புரிந்துவிடும்.
டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 42 ஓட்டங்களுக்கு சுரண்டு தனது டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்டங்களைப் பதிவு செய்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் 516 என்ற இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 282 ஓட்டங்களுக்கே சுருண்டது.
இத்தனைக்கும் முதல் இன்னிங்ஸில் இலங்கை பந்துவீச்சாளர்கள் அதுவும் வேகப்பந்து வீச்சாளர்கள் தென்னாபிக்காவை 191 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி இருந்தனர். முதல் இன்னிங்ஸில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் கூட இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களால் எதிரணிக்கு இன்னும் நெருக்கடி கொடுக்க முடியுமாக இருந்திருக்கும்.
இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்ட வீரர்கள் சுதாகரித்து ஆடினார்கள். ஆனால் ஒருவரும் மூன்று இலக்க ஓட்டங்களை பெறவில்லை. ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க அதிகபட்சம் 89 ஓட்டங்களைப் பெற்றதோடு தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதத்தை எட்டாமல் 40க்கு உட்பட்ட ஓட்டங்களில் வெளியேறினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 348 என்ற சவாலான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா அதிகபட்சம் 50 ஓட்டங்களையே பெற்றார். எனவே இலங்கையால் 250 ஓட்டங்களைக் கூட எட்ட முடியவில்லை.
தென்னாபிரிக்கா சென்ற இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை என்பது வலுவானது; அனுபவம் மிக்கது. திமுத் கருணாரத்ன (98 டெஸ்ட்), தினேஷ் சந்திமால் (86 டெஸ்ட்), அஞ்சலோ மத்தியூஸ் (116 டெஸ்ட்), தனஞ்சய டி சில்வா (61) மற்றும் குசல் மெண்டிஸ் (69) ஆகியோர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. என்றாலும் தொடர் முழுவதிலும் சந்திமால் ஒரு அரைச்சதமும் தனஞ்சய டி சில்வா இரண்டு அரைச்சதங்களும் பெற்றனர்.
திமுத் கருணாரத்ன 4 இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 27 ஓட்டங்களையே பெற்றதோடு அஞ்சலோ மத்தியூஸ் நான்கு இன்னிங்ஸ்களிலும் 102 ஓட்டங்களையே சேர்த்தார்.
மறுபுறம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸ், தனது டெஸ்ட் வாழ்வில் சோபிக்காத முதல் தொடராக இது இருந்தது. அவர் தனது இன்னிங்ஸ்களிலும் 13,10,48 மற்றும் 35 ஓட்டங்களையே பெற்றார். இதனால் தொடரை ஆரம்பிக்கும்போது 91.27 ஆக இருந்த அவரது ஓட்ட சராசரி தொடர் முடிவில் 74 ஆக சரிந்தது.
பந்துவீச்சை பொறுத்தவரை வேகப்பந்து வரிசையில் லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக செயற்பட்டார்கள். இலங்கை டெஸ்ட் அணியின் ஆஸ்தான சுழல் வீரர் பிரபாத் ஜயசூரிய முதல் முறை வெளிநாட்டு மண்ணில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவர் உள்நாட்டில் மாத்திரமே சோபித்து வருவதாக கூறப்படும் குறைகளுக்கு பதில் அளிப்பதாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.
இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் பிரபாத் ஜயசூரிய மொத்தமாக 107 விக்கெட்டுகளை பெற்றிருந்தபோதும் இதில் 81 விக்கெட்டுகள் சொந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளாகும். இதுவரை அவர் 10 தடவைகள் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அதில் ஒன்பது தடவை சொந்த மண்ணிலும் அதிலும் சுழற்பந்துக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் எட்டுத் தடவையும் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். என்றபோது பிரபாத் ஜயசூரிய என்பவர். முத்தையா முரளிதரன், ரங்கன ஹேரத் வரிசையில் இலங்கை டெஸ்ட் அணியில் இன்றியமையாத சுழற்பந்து வீச்சாளர். அவர் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின்போதே டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது வீரராக பதிவாகி இருந்தார்.
பிரபாத் ஜயசூரியவின் திறமையை யாராலும் குறைகூற முடியாது என்றபோதும் அவர் வெளிநாட்டு மண்ணில் மேலும் திறமையை வெளிப்படுத்துவது அணியின் சமநிலை போக்குக்கு அவசியம்.
இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்கு காரணமாக இருந்தது உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி தான். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறப்போகும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கை தக்கவைப்பதற்கு தென்னாபிரிக்க பயணத்தில் குறைந்தது ஒரு போட்டியிலேனும் வெற்றிபெற வேண்டி இருந்தது.
இதனால் இலங்கையின் விசேட டெஸ்ட் வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா போன்றவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே தென்னாபிரிக்கா சென்று பயிற்சிகளை ஆரம்பித்தார்கள். அங்கே இலங்கை அணிக்கு பயிற்சி அளிப்பதற்கு என்றே தென்னாபிரிக்க முன்னாள் வீரர் நீல் மக்கன்சி பயிற்சி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
எதுவும் வெற்றி அளிக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை அணியால் ஒரு பயிற்சி ஆட்டத்திலேனும் விளையாட முடிந்திருந்தால் அங்குள்ள சூழல் வீரர்களால் புரிந்திருக்கக் கூடும். என்றாலும் அணி சோபிக்காததற்கு அதனை மிகப்பெரிய குறையாகக் கூறிவிட முடியாது.
எப்படியோ இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் பெரிதாக எதிர்பார்ப்பை இனியும் வைத்திருக்க முடியாது. உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் இலங்கை அணிக்கு இன்னும் எஞ்சி இருப்பது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடர் மாத்திரம் தான்.
இப்போது இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்த மாத கடைசியில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடும்.
உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெல்வது கட்டாயம். அது மாத்திரம் போதாது, மற்றப் போட்டிகள் தனக்கு சாதகமாக முடிந்தாலேயே இலங்கை அணியால் லோட்ஸ் செல்ல முடியும்.
எஸ்.பிர்தெளஸ்