இலங்கையின் இளையோர்களை வலுவூட்டுவதில் முன்னோடியாக விளங்கும் இலங்கை வங்கி எதிர்காலத் தலைவர்களை வளர்த்தெடுப்பதற்கான அதன் திட்டங்களின் ஒரு பகுதியாக “நனஜய” புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோருகிறது. இத்திட்டம் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 18+ கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கானதாகும். இது வங்கியின் 85ஆவது ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களுள் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் 2003ஆம் ஆண்டு “18+ புலமைப்பரிசில்” என்று தொடங்கப்பட்டு பின்னர் 2016 இல் “நனஜய” என பெயர் மாற்றப்பட்ட இத்திட்டம் பரீட்சையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் அதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உந்துதலாக விளங்கும் இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 3148 மாணவர்களுக்கு 139.54 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டு உதவித்தொகை கீழ்க்காணும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழங்கப்படும்.
அனைத்து உயர்தரப் பிரிவுகளிலும் நாடளாவிய ரீதியில் சிறந்து விளங்கும் முதல் 84 மாணவர்களுக்கு அவர்தம் திறமைக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். அந்தவகையில் ஒவ்வொரு மாணவருக்கும் புலமைப்பரிசில் ஊக்கத்தொகையாக 120,000 ரூபாய் வழங்கப்படும். இது அவர்களின் நான்காண்டு உயர் கல்விப் படிப்பின்போது பிரித்து வழங்கப்படும்.
அனைத்து உயர்தரப் பிரிவுகளிலும் மாவட்ட வாரியாக அதிக புள்ளிகள் பெறும் 300 பேருக்கு பொது உதவித்தொகை வழங்கப்படும். அந்தவகையில் ஒவ்வொரு மாணவருக்கும் 72,000 ரூபாய் அவர்களின் கல்விப் பயணத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் வழங்கப்படுகின்றது.
தகுதியுள்ள மாணவர்கள் www.boc.lk என்ற வங்கியின் வலைத்தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பாடசாலைச் சீருடையில் அண்மையில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவுப் புகைப்படத்துடன் ‘உதவிப் பொது முகாமையாளர் – சந்தைப்படுத்தல், 16ஆவது மாடி, சந்தைப்படுத்தல் பிரிவு, இலங்கை வங்கித் தலைமை அலுவலகம், இலங்கை வங்கி, இலங்கை வங்கிச் சதுக்கம், கொழும்பு 01’ என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஆகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு வங்கியால் குறிப்பிடப்படும் கணக்கு மீதியுடன் ‘18 +’ அல்லது ‘18 + ஸ்மார்ட் ஜென்’ கணக்கைப் பேணிவர வேண்டும். உயிரியல் விஞ்ஞானம், இயற்பியல் விஞ்ஞானம், வணிகம், கலை, உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து க.பொ.த உயர்தரப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் இத்திட்டத்தின் பொருட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2025 ஜனவரி 31 ஆகும். நாட்டின் இளையோர்களின் கல்வி வளர்ச்சிக்கு துணைநின்று அதன்மூலம் அவர்களை நாட்டின் முன்னேற்றத்தின் பங்காளர்களாக மாற்றுவதற்கு இலங்கை வங்கி அயராது பாடுபடுகிறது.