யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகிறது. கிளிநொச்சியில் இன்னும் ஒரு நல்ல பொதுமண்டபம் கிடையாது. யுத்த காலத்துக்கு முன்பு கூட்டுறவு மண்டபம், மற்றும் கலாசார மண்டம் என இரண்டு மண்டபங்கள் இருந்தன. இப்போது மிஞ்சியிருப்பது கூட்டுறவு மண்டபம் மட்டுமே. அதில் மிகச் சாதாரண ஒலி வசதி கூட இல்லை. சீரான காற்றோட்டம், ஒழுங்கான இருக்கை போன்ற எவையும் கிடையாது. யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட மண்டபம் என்ற அளவில் உள்ளது. இதை குறைந்த பட்ச அடிப்படை வசதிகளோடேனும் நவீனப்படுத்த வேண்டும்.
அடுத்தது, கலாசார மண்டபம். யுத்தத்தின்போது முற்றாக அழிந்து போய் விட்டது. அது இருந்த இடமே இன்று தெரியாது. பதிலாக அந்த இடத்தில் இப்போது புதிதாக மாவட்டப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெயரளவில்தான் அது மாவட்டப் பேருந்து நிலையமாகும். மற்றும்படி அது முழு நிறைவான முறையில் (முழுமையான அளவில்) அமைக்கப்படவில்லை. வவுனியா, கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மன்னார், பதுளை போன்ற தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகள் கொட்டும் மழைக்குள் நனைந்து கொண்டு நின்றே பேருந்துகளில் ஏற வேண்டும். அல்லது, கொழுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டும். இந்தச் சிறப்பில்தான் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணியைக் கையகப்படுத்துவதற்கான சாட்டுப்போக்காக பேருந்து நிலையம் என்ற பேரில் ஒரு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதே தவிர, மெய்யான அர்த்தத்தில் அது அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்டிருந்தால் இப்படி மழையிலும் வெயிலிலும் பயணிகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்காது.
பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட அரைவாசிக் காணியில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் முறையற்ற விதமாக கடைத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெருந்து நிலையத்துள் விசாலமான அளவில் சிற்றுண்டிச் சாலை உண்டு. அதை விட பேருந்து நிலையத்துக்கு முன்பாக பொதுச் சந்தையும் அனைத்துப் பொருட்களையும் வாங்கக் கூடிய பெரிய கடைத்தொகுதியும் உண்டு.
அப்படியிருக்கும்போதே மக்களுடைய எதிர்ப்புகளையும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடைய கோரிக்கையைப் புறந்தள்ளியும் இந்தக் கடைத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதைக்குறித்து மாவட்டச் செயலர், பிரதேச செயலர், பிரதேச சபையின் செயலாளர், உள்ளுராட்சி அமைச்சுச் செயலாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் ஆளுநர், என மக்களும் மக்கள் அமைப்புகளும் கடிதங்களையும் மனுக்களையும் கொடுத்துள்ளனர்.
ஆனாலும் இன்னும் அங்கே குறித்த கடைத்தொகுதி அகற்றப்படவில்லை. எதிர்காலத்தில் பேருந்து நிலையத்தை விஸ்தரிப்பதற்கான காணி இப்படிக் கடைத்தொகுதியாக்கப்பட்டது எதிர்கால அபிவிருத்தியைப் பாதிக்கும் வகையான செயற்பாடு என அந்தக் கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டுமல்ல, குறித்த கடைத்தொகுதியை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி சபையின் உடன்பாடு எட்டப்படவில்லை. பிரதேச சபையிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை. கட்டடம் அமைப்பதற்குக் கூட முறையான வகையில் கட்டட ஒப்பந்தம் கோரப்படவில்லை. முக்கியமாக காணிப்பயன்பாட்டுக்குழுவின் ஒப்புதலும் பெறப்படவில்லை.
இந்த நடைமுறைகளை மீறியே குறித்த கடைத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதைக்குறித்து மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இதுவரையிலும் வாயே திறக்கவில்லை. இது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது?
இதைத் தவிர, இன்னும் ஒரு முழுநிறைவான – இயங்கு நிலையில் உள்ள – பொது விளையாட்டரங்கு இல்லை. ஏற்கனவே நகரின் மத்தியிலிருந்த வரலாற்றுச் சிறப்புடைய றொட்றிக்கோ மைதானம் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்திலிருந்து கடந்த 13 ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. இடையில் நடந்த மூன்று ஆட்சிக்காலத்திலும் நான்கு, ஐந்து விளையாட்டு அமைச்சர்கள் வந்து போய் விட்டார்கள். ஆனால், றொட்றிக்கோ விளையாட்டரங்கு அரைகுறையாகவே உள்ளது. இதை வெறும் புற்தரையாக விட்டிருந்தால் மாடாவது ஒழுங்காக மேய்ந்திருக்கும் என்று கிளிநொச்சியின் மூத்த பிரஜைகள் கவலையோடு சொல்கிறார்கள்.
இந்தப் புதிய ஆட்சி வருவதற்கு முன் – தேர்தலுக்கு முதல் வாரம் வரையில் அரச திணைக்களங்களின் பயன்பாட்டுக்கும் பொதுத் தேவைகளுக்கும் எனப் பயன்படக் கூடிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தன. இதிலே செல்வாக்கான கைகள்தான் விளையாடுகின்றன. கிளிநொச்சி நகரம் மற்றும் சுற்றாடல் பிராந்தியத்துக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான கிளிநொச்சிக் குளத்தை அண்டிய நீரேந்து பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் பலரும் காணிகளை அபகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதைக்குறித்து பல எதிர்ப்புச் செய்திகள் பல தடவை ஊடகங்களில் வெளியாகியிருந்தன. ஆயினும் அத்துமீறல் நிற்கவில்லை. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவும் இல்லை. குறிப்பாக இந்த விடயத்தில் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம் போன்றவை அசமந்தப்போக்கிலேயே உள்ளன.
இந்தக் காணிகள் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கண்காணிப்பிற்குரியது. இது நீரேந்து பகுதி மற்றும் நீர் வடிந்தோடும் பகுதி என்பதால் நீர்ப்பாசனத்திணைக்களமே இதில் கூடுதலான கரிசனையைக் கொள்ள வேண்டும். ஆனால், அதற்குரிய பொறுப்புடைய அதிகாரிகள் இதைக் கவனத்திற் கோள்ளவில்லை. இதனால் நீர் வடிந்தோட முடியாமல் எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கும் பேரிடரும் ஏற்படும் வாய்ப்புண்டு. அத்துடன் நீரேந்து பகுதியும் இல்லாமற் போய்விடும். இதை விடப் பெரிய ஆபத்து, அண்மித்து வரும் குடியிருப்புகளால் நீரில் கழிவுகள் கலக்கக் கூடிய சூலும் உண்டு.
ஆகவே இதைக் கண்டித்துத் தடுப்போரும் இல்லை. இதையெல்லாம் பொதுத் தளத்தில் கொண்டு செல்லக் கூடியவாறு இன்னும் பெயர் அறியக் கூடிய – நிறைவான – பலமுடைய ஒரு செயற்பாட்டு அமைப்பு கிளிநொச்சியில் கிடையாது.
ஏற்கனவே உள்ள சிவில் அமைப்புகள் உருக்குலைந்து அரசியற் கட்சிகளின் எடுபிடிகளாகிவிட்டன. அப்படியாகியபடியால்தான் சுயாதீனமாக இந்த விடயங்களில் பலமான எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாமல் உள்ளது.
மக்களையும் பொது மக்கள் உணர்வுத் தளத்தில் இவற்றுக்காகத் திரட்ட முடியவில்லை. இது மாவட்ட மக்களுக்குப் பேரிழப்பாகும்.
அடுத்தது, கிளிநொச்சியில் நல்லதொரு நூலகம் இல்லை. இருக்கின்ற நூலகத்தில் விரிவாக்கப்பட்ட – கணினி மயப்படுத்தப்பட்ட சேவைகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. மாவட்ட நூலகமொன்றுக்கான தளத் தயாரிப்புகள் எவையும் கரிசனை கொண்டு உருவாக்கப்படவில்லை. தற்போது நூலகமொன்றுக்கான கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பொதுநூலகம் ஒன்றுக்கான சூழமைவையோ உள்ளமைவையோ கொண்டதல்ல. இது ஒரு மாபெரும் குறைபாடாகும்.
பொதுச் சந்தை வளாகத்துக்கான காணி ஒதுக்கப்பட்டு மரக்கறி, மீன் மற்றும் பழ வாணிபத்துக்கான கட்டடத்தொகுதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தாக அமைக்கப்பட்டிருக்க வேண்டிய பிற வாணிபங்களுக்கான கட்டடத் தொகுதிகள் முறையான திட்டமிடல் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக பிரதேச செயலக வளாகத்துக்குள் ஒரு கடைத் தொகுதியை அமைத்திருக்கிறார்கள். அந்தக் கட்டடத் தொகுதி உண்மையில் சந்தை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏற்கனவே 1950 களிலிருந்து 1990 வரையிலும் குறித்த பிரதேச சபை வளாகத்திலேயே சந்தையும் கடைத்தொகுதியும் இருந்தன. அவற்றை வேறு இடத்துக்கு மாற்றிய பின், தற்போதைய இடத்தில் பிரதேச செயலகம் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கான காரணங்களில் ஒன்று எதிரே மாவட்டச் செயகம். அதை அண்மித்ததாக பொது நூலகம், பிரதேச செயலகம் போன்றன இருப்பதால், இதை ஒரு நிர்வாகப் பகுதியாக மாற்றுவது சிறப்பு என்ற கருதுகோளுடன் சந்தையும் கடைத்தொகுதியும் மூடப்பட்டது.
ஆனால், இந்த அடிப்படையை மறுதலித்து, சந்தைப்பகுதியில் கடைத்தொகுதி அமைக்கப்படுவதற்கான தேவையும் இடவசதியும் இருக்கின்ற போதும் அதை மறுதலித்து பிரதேச சபை நிர்வாக வளாகத்திற்குள் கடைத்தொகுதியை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இதைக்குறித்தும் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியே காக்கின்றார். இது மக்களிடத்திலே விசனத்தை உண்டாக்கியுள்ளது.
இதைத்தவிர, மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இசைக்கல்லூரிகளோ, ஓவியக் கூடங்களோ, தொல்பொருள் சேகரிப்பகமோ இல்லை. நடனப்பள்ளிகள் கிடையாது. இந்தத்துறைகளில் பயில விரும்புவோருக்கு எந்த வழியும் இல்லை.
இதனால் கிளிநொச்சியில் இருந்து இன்னும் பெயர் குறிப்பிடக் கூடிய ஒரு இசைஞரோ இசையாளர் அணியோ உருவாகவில்லை. ஆய்வறிஞர்கள் கிடையாது.
கிளிநொச்சியில் படித்து பல்கலைக்கழகங்களில் ஒரு சில விரிவுரையாளர்கள் உள்ளபோதும் பேர் சொல்லக் கூடிய இன்னும் ஒரு பேராசிரியர் நிலைபெறவில்லை.
புகழுடைய சட்டவாளர்களோ, சட்டத்துறை நிபுணர்களோ, புகழ்வாய்ந்த நீதிபதிகளோ உருவாகவில்லை. நல்ல மருத்துவர்களும் நிர்வாக அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் வந்துள்ளனர் என்பது சற்று ஆறுதல். ஆனால் அவர்களும் தனித்துவமாகவும் சுயாதீனமாகவும் செயற்பட முடியாதிருக்கின்றனர். அந்தளவுக்கு அரசியல் நெருக்குவாரங்கள். விவசாய மாவட்டமாக உள்ள கிளிநொச்சியில் 09 பாசனக் குளங்கள் உள்ளன. வடக்கின் மிகப் பெரிய குளமான இரணைமடுவும் கிளிநொச்சியில்தான் உண்டு.
விவசாய ஆராய்ச்சி நிலையம், விதைபொருட்கள் உற்பத்தி நிலையம், விவசாயக் கல்லூரி, விவசாயப் பல்கலைக்கழக பீடம், மாதிரி விவசாயப்பண்ணைகள், பயிர்ச்செய்கை நிலையங்கள், மண்வள ஆராய்ச்சிப் பகுதி, நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் நிலையங்கள், கால்நடை அபிவிருத்தி நிலையங்கள் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால், வடக்கின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படுகின்ற கிளிநொச்சியில் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை.
நெல்லை அடுத்த நிலை உணவுப் பொருட்களாக மாற்றும் வழிகளைப் பற்றிச் சிந்திப்போரில்லை. இதனால் அறுவடை செய்யப்படும் நெல் முழுவதும் வெளிமாவட்டங்களுக்கு மிகக்குறைந்த விலையில் செல்கிறது. இதைக்குறித்துப் பேசக் கூடிய – சிந்திக்கக் கூடிய கமக்காரர் அமைப்புகள் இல்லை.
விவசாயிகளின் நலனை விட அரசியல்வாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவலாதிப்படும் அமைப்புகளே உண்டு.
இவ்வாறே பாலுற்பத்தியையும் கால்நடை விருத்தியையும் மேம்படுத்துவதற்கான விசேட திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குமான ஆட்கள் இல்லை. பிராந்திய கால் நடை நிலையம் கூட கிளிநொச்சியில்தான் உள்ளது. ஆனால், அதனுடைய விளைபலன் கேள்விக்குரியதேயாகும். இயக்கச்சியில் மட்டும் ஒரு பால் பொருள் உற்பத்தி நிலையம் உண்டு. அதில் குறித்தளவு பாலில் பாற்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதிப் பால் எல்லாமே வெளியிடங்களுக்குப் பாலாகவே கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, இலங்கை முழுவதற்குமே பெரிய அடையாளங்களில் ஒன்றாகவுள்ள ஆனையிறவு உப்பளம் கூட இன்னும் முழுமையான பயனைப் பெறக் கூடிய அளவில் மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. யுத்தத்திற்கு முன்பு இந்த உப்பளத்திலிருந்து வெளிநாடுகளுக்கான உப்பு ஏற்றுமதி நடைபெற்றது. ஆனையிறவு உப்பளத்தை அண்மித்திருந்த குறிஞ்சாத்தீவு உப்பளம் இன்னும் தொடங்கவே இல்லை. அதையும் மீளுருவாக்கம் செய்தால் மிகச் சிறந்த உப்பு உற்பத்தியைப் பெறக்கூடியதாக இருக்கும். மக்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். மாவட்டத்தின் பொருளாதார விருத்தியும் அதிகரிக்கும்.
இன்னொன்று பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசங்களில் பனை வள அபிவிருத்தியைச் சரியான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளலாம். பனை வள உற்பத்தியின் மூலமாக தொழில் வாய்ப்புகளும் பொருளாதார விருத்தியும் ஏற்படும். இதற்கான திட்ட முன்வைப்புகளை துறைசார் வல்லுநர்கள் முன்மொழிந்த போதும் இது நடைமுறைப்படுத்தவில்லை. பாரம்பரிய முறையிலான தொழில்சார் நடவடிக்கைகளை விட, நவீன முறையிலான உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு நிறைவாக்கப்பட வேண்டுமாயின் மாவட்டத்தின் நலனைப் பற்றிச் சிந்திக்கும் அரசியல் தலைமை வேண்டும்.
சுயாதீனத்தைப் பேணக் கூடிய மக்கள் அமைப்புகள் வளர்ச்சியடைய வேண்டும். இதுதான் கிளிநொச்சியில் உள்ள நிலைமை. இதையெல்லாம் ஏதோ குறைகாண் நோக்கில் சொல்லவில்லை. இந்தக் குறைகளை நீக்கி எழ வேண்டும் என்ற விருப்பிலேயே முன்வைக்கப்படுகின்றன.
கருணாகரன்