தமிழ் வாழ்க்கையை மட்டும் பிடிவாதமாகப் படம்பிடிக்கும் இயக்குநர்களில் ஒருவர், இந்தியில் தாப்சி நடிப்பில் கடந்த 2021 வெளியாகி வெற்றிபெற்ற ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் கதாசிரியர் நந்தா பெரியசாமி. அவரது எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘திரு.மாணிக்கம்’ வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
கதாபாத்திரத்தின் பெயரைத் தலைப்பாகச் சூட்டும்போது ‘திரு’, ‘திருமதி’ என்பதை முன்னொட்டாகப் பயன்படுத்த மாட்டார்கள். இந்தத் ‘திரு’வுக்குக் கதையில் பொருள் இருக்கிறதா? – தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஒருவன் எந்த எல்லைக் கும் போவான் என்று பல படங்களில் பார்த்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக ‘பாபநாசம்’ படத்தைக் கூறலாம். ஆனால், இந்தக் கதையின் நாயகன், எந்தச் சூழ்நிலையிலும் தனது நேர்மையை இழக்க விரும்பாதவன்.
அதனால்தான் அவன் ‘திரு.மாணிக்கம்’ ஆகிறான். தன்னுடைய குழந்தைகளுக்குச் சிறந்த ‘ரோல் மாடல்’ ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ‘நான் ஓர் எறும்பை நசுக்கிக் கொன்றேன். அதை எனது மூன்று குழந்தைகளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்’ என்கிற ஜப்பானியக் கவிதைதான் இந்தக் கதைக்கான ‘இன்ஸ்பிரேஷன்’.
சமுத்திரக்கனி என்றாலே திரையில் ஒரு ‘பிரசங்கி’ எனப் பெயரெடுத்தவர். இதில்? – இதில் அவர் பேசும் வசனத்தை ஒரு ஏ4 காகிதத்தில் சுருக்கிவிடலாம். அவர் இந்தப் படத்தில் யாருக்கும் அறிவுரை கூறவில்லை. மாறாகத் தனது குடும்பத்துக்காக ஓர் இக்கட்டான சூழலில் ஓடத் தொடங்குகிறார்.
எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவர் தடம் புரளாமல் ஓடினாரா இல்லையா என்பதுதான் கதை. ஆதங்கம், ஆற்றாமை, தவிப்பு, தடுமாற்றம் எனப் பல வித உணர்வுகளோடு மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். தணிக்கைக் குழுவுக்குப் படத்தைத் திரையிட்டோம். காட்சி முடிந்து ‘கிளீன் யூ’ சான்றிதழ் கொடுத்தார்கள்.
அது மட்டுமல்ல; ஒரு காட்சியில் கூட மது, புகை, நெகிழி என எதுவும் இல்லாததால் ‘சட்டப் பூர்வ எச்சரிக்கை’யாக வெளியிடப்படும் மது, புகையிலை எதிர்ப்பு வாசகங்களும் இல்லாமல் படத்தை வெளியிடத் தணிக்கைக் குழு அனுமதி கொடுத்துவிட்டார்கள். இதைக் கடந்த 10 ஆண்டு களில் எந்தப் படமும் சாதிக்கவில்லை.
தணிக்கைக் குழுவுக்கான காட்சி முடிந்து கிளம்பியபோது குழுவில் இருந்த ஒரு முதன்மை உறுப்பினர் அவரது காரை என் அருகில் கொண்டு வந்து நிறுத்தி, “என் குழந்தைகளுக்கு ஒரு தந்தையாக நான் எதுவுமே கற்றுத் தரவில்லை. அவர்களை இந்தப் படத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் காட்டுவேன்” என்று சொல்லி விட்டு, எனது நன்றிக்காகக் கூடக் காத்திராமல் காரை ஓட்டிச் சென்றுவிட்டார்.
வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? – ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா வருகிறார். நாசரை இதுவரை இப்படிப் பார்த்திருக்க மாட்டீர்கள். அனன்யா, சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கிறார். லண்டனி லிருந்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் மனிதராகத் தம்பி ராமையா வருகிறார்.
இவர்கள் தவிர, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், மன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு என ஒவ்வொருவரும் முக்கியத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தை எங்கே படமாக்கினீர்கள்? – படம் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. என்றாலும் இக்கதையில் தமிழும் மலையாளமும் பேசும் கதாபாத்திரங்கள் வருகின்றன. அதனால் தமிழ் பதிப்பையே கேரளத்திலும் வெளியிடுகிறோம். இரண்டு மாநிலங்களின் பசுமையான நிலப்பரப்பு தேவைப்பட்டதால், கேரளத்தின் குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி போன்ற இயற்கையின் ஆட்சி கம்பீரமாக இருக்கும் இடங்களில் படம்பிடித்தோம்.
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கும். ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் இளைய தலைமுறையின் மனதைக் கொள்ளையடித்த விஷால் சந்திரசேகர் இதில் வேறொரு பரிமாணத்தில் பாடல்களைத் தந்திருக்கிறார். சமந்தா நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ படத்தைத் தயாரித்த வர்களில் ஒருவரான ஜி.பி.ரவிகுமார் படத்தைத் தயாரித்திருக்கிறார்.